×

காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டம் தேர்தலுக்காக அதிமுக-பாஜக அடிக்கல் நாடகம்-விவசாயிகள் குற்றச்சாட்டு

காவிரியில் மழை காலங்களில் எப்போதெல்லாம் வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறதோ, அப்போதெல்லாம் 101டி.எம்.சி. தண்ணீர் வீணாக கடலில் கலக்கிறது என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இந்த நீரை சேமிக்க கடந்த 2008ல் திமுக ஆட்சிகாலத்தில் காவிரி நதியை வைகை மற்றும் குண்டாறு நதிகளோடு இணைக்கும் திட்டத்தை ₹3,290 கோடியில் நிறைவேற்றலாம் என்று திட்டமிடப்பட்டது. வெள்ள காலங்களில் காவிரியில் உபரியாக வெளியேறும் நீரை கரூர் மாவட்டம், மாயனுார் தடுப்பணையில் இருந்து, திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களின் வறண்ட பகுதிகள் வழியாக, குண்டாறு, வைகை ஆற்றுடன் இணைப்பதே இத்திட்டம். இதன் மூலம் புங்கா ஆறு, நாப்பன்னை ஆறு, அரியாறு, காரையாறு, அக்கினி ஆறு, கொண்டாறு, வெள்ளாறு, பம்பாறு, விருசுழி ஆறு, மணிமுத்தாறு, சருகணி ஆறு, உப்பாறு, வைகை, கிருதுமால் நதி, கானல் ஓடை என 15 நதிகள் இணைக்கப்படும். இந்தத்திட்டம் செயல்படுத்தப்பட்டால் முதல் பயனாக காவிரி டெல்டா மாவட்டங்களில் வெள்ள அபாயம் நீங்கும்.

இந்த உபரிநீர் மூலம் திருச்சி, புதுக்கோட்டை, கரூர், சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி ஆகிய 7 மாவட்டங்களில் 8 லட்சம் ஏக்கர் நிலம் பாசனம் பெறும். 50 லட்சம் விவசாயிகள் பயன்பெறுவார்கள். நிலத்தடி நீர் பாதுகாக்கப்படும். 7 மாவட்டங்களிலும் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காணப்படும். இத்திட்டத்திற்கு முதல்கட்டமாக 2008ம் ஆண்டு தி.மு.க. ஆட்சியின்போது ₹234 கோடியில் கரூர் மாவட்டம் குளித்தலை அருகே மாயனூரில் காவிரி நதியில் கதவணையும், அங்கிருந்து 255.60 கி.மீ.க்கு கால்வாயும் அமைக்கத் திட்டமிடப்பட்டது.

இந்த கால்வாய் தொடக்கத்தில் 20 மீ., அகலம், 5 மீ. ஆழத்தில் இருக்கும். முடிவில் 6.4 மீ., அகலம் இருக்கும் எனக் கணக்கிடப்பட்டது. 9 ரயில்வே பாலங்கள் உட்பட 144 பாலங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, மாயனூர் கதவணை அமைக்கும் பணிகள் தொடங்கி, 2014ம்ஆண்டு ஜூன் மாதம் 25ம் தேதி திறக்கப்பட்டது. இந்த அணை மூலம் 1.05 டி.எம்.சி. தண்ணீரை சேமித்து வைக்க முடியும். வெள்ள காலங்களில் 4.83 லட்சம் கன அடி நீரை வெளியேற்ற முடியும்.

கதவணை திறந்த பின்னர், அதிமுக அரசு கால்வாய் கட்டும் பணி தொடங்கவில்லை. 10ஆண்டுகளுக்கும் மேலாக இந்த பணிகளை அதிமுக கிடப்பில் போட்டது. அதிக நிதி தேவைப்பட்டதால் மத்திய அரசிடம் நிதியும் கோரவில்லை. இதையடுத்து தமிழக அரசே நிதி ஒதுக்கி காவிரி-வைகை-குண்டாறு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று விவசாயிகள் போராடி வந்தனர்.

ஆனால் அதிமுக அரசு இப்பணியை எட்டிபார்க்கவில்லை.இந்நிலையில் ஆட்சிகாலம் முடியும் நிலையில், வரும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு இத்திட்டத்தை ₹14,400 கோடியில் செயல் படுத்தப்போவதாக முதல்வர் பழனிசாமி அறிவித்தார். முதற்கட்டமாக ₹700 கோடியை அரசு ஒதுக்கியது. புதுக்கோட்டை, கரூர் மாவட்டங்களில் கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் 11 கி.மீ.க்கு கால்வாய் வெட்டும் பணி மேற்கொள்ள ₹331 கோடிக்கு ஒப்பந்தம் விடப்பட்டுள்ளது. புதுக்கோட்டை குன்னத்தூரில் இருந்து கவிநாடு வெள்ளாறு வரை 52 கி.மீ.க்கு நிலம் கையகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இத்திடத்துக்கு குன்னத்தூரில் கடந்த பிப்ரவரி 20ம் தேதி முதல்வர்அடிக்கல் நாட்டினார்.

அதிமுக, பாஜ ஆட்சியில் இதுபோன்ற திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவது தேர்தல் நேரத்தில் நடத்தும் நாடகம் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 2019 ஜனவரி 27ம் தேதி, மதுரை மாவட்டம் தோப்பூரில் ₹1264 கோடி மதிப்பில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். அடிக்கல் நாட்டப்பட்டு இரண்டு ஆண்டுகளாகியும் ஒரு செங்கல் கூட நகராமல் உள்ளது. இத்திட்டமும் நாடாளுமன்ற தேர்தல் நேரத்தில் அதிமுக அரசு, மோடி நடத்திய நாடக்கத்தில் ஒன்றாகும்.

இந்நிலையில் காவிரி-வைகை-குண்டாறு நதிகள் இணைப்பு திட்டத்துக்கு தற்போது அடிக்கல் நாடப்பட்டுள்ளது. இதற்கு, கூட்டணியில் உள்ள பாஜவின் கர்நாடக மாநில முதல்வர் எடியூரப்பா உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். காவிரியில் உபரி நீரை தமிழகம் பயன்படுத்துவதற்கு கர்நாடகா அனுமதிக்காது. சட்ட ரீதியில் நடவடிக்கை எடுக்கப்படும். மத்திய அரசிடமும் முறையிடப்படும். ஒரு வேளை தமிழக அரசின் நதிகள் இணைப்பு திட்டத்துக்கு அனுமதி வழங்கினால், மேகதாது, மார்கண்டேயா திட்டங்களுக்கு அனுமதி கேட்போம். இந்த விவகாரம் தொடர்பாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி விவாதித்து கர்நாடகாவின் நலன்கள் பாதுகாக்கப்படும், தமிழ்நாட்டின் பங்கான 177.25 டி.எம்.சி.டி.க்கு மேலான உபரி நீரிலும் கர்நாடகாவிற்கு உரிமை உள்ளது என்று கர்நாடக முதல்வர் எடியூரப்பா கூறியுள்ளார்.

காவிரி இணைப்பு திட்டத்துக்கு கர்நாடக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில் சட்டப்பேரவைத் தோதல் நடை பெற உள்ள நிலையில் காவிரி- வைகை- குண்டாறு இணைப்புத் திட்டத்துக்கு முதல்வர் அடிக்கல் நாட்டியுள்ளார். இந்தத் திட்டத்தை இப்போது துவங்கினாலே முடிக்க 9 ஆண்டுகளுக்கும் மேலாகிவிடும். எனவே தேர்தலுக்காக அதிமுகவும், பாஜவும் அடிக்கல் மட்டும் நாட்டும் கட்சிகளாக உருவாகியுள்ளது. தேர்தல் நேரத்தில் அதிமுக, பாஜ நாடகமாடுவதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

அகில இந்திய விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் தனபதி கூறுகையில், காவிரி-வைகை-குண்டாறு திட்டத்தை கர்நாடக முற்றிலும் எதிர்த்து வருகிறது. தமிழகத்தை வடிகாலாக மட்டுமே கர்நாடாக பயன்படுத்தி வருகிறது. காவிரியில் திறந்த விடப்படும் உபரிநீர் தண்ணீரை கூட பயன்படுத்த கூடாது என்று கர்நாடக சொல்வது மனித நேயமற்றது. இது ஒருபுறமிருக்க சேலம் மேட்டூர் பகுதியில் ஏரி, குளங்கள் நிரப்பும் திட்டத்தை முதல்வர் சமீபத்தில்தொடங்கி வைத்தார்.

வெள்ளக்காலங்களில் உபரிநீர் இந்த ஏரி, குளங்களுக்கு சென்றால் காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு தண்ணீர் குறைவாக கிடைக்கும். இதனால் இந்த நீர் தூத்துக்குடி வரை செல்வது கேள்விக்குறிதான். இதனால் இந்த திட்டம் தேர்தலுக்காக தொடங்கப்பட்டுள்ளது. இது விவசாயி என்று கூறி கொள்ளும் முதல்வர் விவசாயிகளுக்கு செய்யும் துரோகம். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : AIADMK ,BJP ,Cauvery ,Vaigai ,Gundaru , Cauvery receives 101 TMC whenever it rains during the rainy season. That the water mixes with the sea in vain
× RELATED ஈரோடு நாடாளுமன்ற தொகுதியில் திமுக, அதிமுக உள்பட மும்முனைப்போட்டி