×

கொள்ளிடம் ஆற்றங்கரையில் அடர்ந்து வளர்ந்த கருவேல மரங்கள்-அகற்ற கோரிக்கை

கொள்ளிடம் : கொள்ளிடம் ஆற்றங்கரையில் வளர்ந்துள்ள கருவேல முள் மரங்களை அகற்ற பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே காட்டூர், மகேந்திரப்பள்ளி, அளக்குடி, எட்டுபடுகை, சந்த படுகை, குத்தககரை, சரஸ்வதி வளாகம், கொன்ன காட்டுபடுகை கீரங்குடி, மாதிரவேலூர், பாலுடன்படுகை, பட்டிமேடு வாடி, வடரங்கம், பனங்காட்டான்குடி ஆகிய கிராமப்பகுதிகளில் 23 கிலோமீட்டர் தூரத்துக்கு கொள்ளிடம் ஆற்றிலும், ஆற்றங்கரையில் பகுதியிலிருந்து சுமார் 200 மீட்டர் தூரத்துக்கு சீமைக்கருவேல முள் மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளன.

இந்த மரங்களால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. இதன் விறகுகளை பயன்படுத்தி அடுப்பு எரிக்கும் போது நுரையீரல் நோய் மற்றும் சுவாச கோளாறு ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மேலும் நிலத்தடிநீரை அதிக ஆழம் வரை சென்று இழுக்கும் தன்மை வாய்ந்தது.

நிலத்தடி நீரை மாசுபடுத்தும் தன்மை வாய்ந்ததாக இந்த சீமை கருவேல மரங்கள் உள்ளன. இதனால் சுற்றுச்சூழல் பாதிக்கும் அபாயம் உள்ளது. இந்த மரங்களில் உள்ள காய்களை தின்னும் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் நோய் பாதிப்புக்கு உள்ளாகின்றன என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இந்த மரங்களில் அதிக எண்ணிக்கையில் பறவைகள் கூட தங்கி இருப்பது இல்லை. நச்சுத்தன்மை வாய்ந்த இந்த மரங்கள் கொள்ளிடம் ஆற்றில் அடர்ந்து காணப்படுகின்றன. இந்த சீமை கருவேல மரங்களுக்கு பதிலாக பயன் தரக்கூடிய மரங்களை வளர்த்தால் அது பொதுமக்களுக்கும் சுற்றுப்புற சூழலை பாதுகாக்கும் வகையிலும் அமையும்.

எனவே கொள்ளிடம் ஆற்றில் கரையை ஒட்டி வளர்ந்துள்ள சீமை கருவேல முள் மரங்களை பிடுங்கி அகற்றிவிட்டு பயன் தரும் பல வகையான மரங்களை நட்டு பராமரிக்க பொதுப்பணித்துறை மற்றும் வனத்துறை சார்பில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று விவசாயிகள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tags : Kollidam river , Kollidam: The public has demanded the removal of oak thorn trees growing on the banks of Kollidam river.
× RELATED கொள்ளிடம் பகுதியில் வாகன சோதனை தீவிரம்