ராணிப்பேட்டையில் நவீன பஸ் நிலையம் அரசு மருத்துவக்கல்லூரி, வேளாண்மை கல்லூரி அமைக்கப்படும்-திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரசாரம்

ராணிப்பேட்டை : ராணிப்பேட்டையில் நவீன பஸ்நிலையம், அரசு மருத்துவக்கல்லூரி, வேளாண்மை கல்லூரி அமைக்கப்படும் என்று முத்துக்கடையில் நேற்று நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாக்குறுதி அளித்தார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம்(தனி) ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளில் திமுக மற்றும் கூட்டணி கட்சி சார்பில் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அதேபோல் வேலூர் மாவட்டம் காட்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சில பகுதிகளும் ராணிப்பேட்டை மாவட்டத்தில் வருகிறது.

இதில் திமுக சார்பில் துரைமுருகன் (காட்பாடி), ஆர்.காந்தி (ராணிப்பேட்டை), ஜெ.எல்.ஈஸ்வரப்பன் (ஆற்காடு), திமுக கூட்டணியில் சோளிங்கர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஏ.எம்.முனிரத்தினம் கை சின்னத்திலும், அரக்கோணம் சட்டமன்ற தொகுதியில் விசி கட்சியில் சார்பில் கவுதம்சன்னா பானை சின்னத்திலும் போட்டியிடுகின்றனர். இவர்களை ஆதரித்து ராணிப்பேட்டை முத்துக்கடை பஸ் நிலையம் பகுதியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார்.

அப்போது, பேச தொடங்கிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ‘நான் ரெடி நீங்க ரெடியா?’ என்றார். இதைக்கேட்டு உற்சாகமடைந்த பொதுமக்கள் கைகளை அசைத்து ஆராவாரம் செய்தனர். தொடர்ந்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: மத சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்கள் தமிழகம் முழுவதும் தேர்தலில் போட்டியிடுகின்றனர். வழியெங்கும் பொதுமக்கள் அளித்த உற்சாக வரவேற்பு மன மகிழ்ச்சி அளிக்கிறது. உங்கள் அன்பிற்கு எனது வணக்கம்.

தேர்தல் காலத்தில் மட்டும் பொதுமக்களை சந்திப்பது ஸ்டாலின் இல்லை. அது பொதுமக்கள் அனைவருக்கும் ெதரியும். எந்த நேரத்திலும் நெருக்கடியான சூழ்நிலையிலும் மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கும் எதிர்த்து குரல் கொடுத்து வருகிறேன். அந்த உரிமையோடு நான் உங்களிடம் வாக்கு சேகரிக்க வந்துள்ளேன்.

ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில், திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும். காட்பாடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அண்ணன் துரைமுருகன், திமுகவின் முன்னோடியாக உள்ளார். அவரை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும்.

ராணிப்பேட்டை சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் ஆர்.காந்தி, மக்களின் செல்வாக்கை பெற்றவர். ராணிப்பேட்டை என்றால் காந்தி, காந்தி என்றால் ராணிப்பேட்டை மக்களுடன் அந்தளவுக்கு மக்களாக இருந்து பணியாற்றியவர். ஆட்சியில் இருந்தபோதும், எதிர்க்கட்சியாக இருந்தபோதும், மக்களுக்கான நல திட்டங்களை தொடர்ந்து செய்து வந்துள்ளார்.

அவரை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும்.ஆற்காடு தொகுதியில் போட்டியிடும் ஜெ.எல்.ஈஸ்வரப்பன், துடிப்பான இளைஞர். சட்டமன்றத்தில் அழுத்தம், திருத்தமாக மக்கள் பிரச்னைகளை எடுத்துக்கூறிய தன்மையை கண்டு எதிர்கட்சியினர் வியந்து பாராட்டினர். அவருக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும்.

சோளிங்கர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஏ.எம்.முனிரத்தினம், கட்சிகளை கடந்து அனைத்து தரப்பு மக்களிடம் நற்பெயர் பெற்றார். அவருக்கு கை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும். அரக்கோணம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் விசி வேட்பாளர் கவுதம்சன்னா பானை சின்னத்தில் போட்டியிடுகிறார். அவரை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும்.

தேசிங்கு ராஜாவின் மனைவியான தியானி ராணிபாய் நினைவாக இந்த நகரருக்கு ராணிப்பேட்டை என பெயர் வந்தது. சோழசிம்மபுரம் சோளிங்கர் என பெயர் மாறியது. போர்களமாக இருந்த இடம் ஆற்காடாக உருவாகியது. சென்னையில் இருந்து அரக்கோணம் வழியாக ராணிப்பேட்டைக்கு முதல் ரயில் இயக்கப்பட்டது. இத்தகைய சிறப்பு கொண்டது ராணிப்பேட்டை மாவட்டம்.

ராணிப்பேட்டையில் நவீன பஸ் நிலையம் அமைக்கப்படும். புதிதாக அரசு மருத்துவக்கல்லூரி, வேளாண்மை கல்லூரி அமைக்கப்படும். மு.வரதராஜருக்கு சிலை அமைக்கப்படும். மஞ்சள் விற்பனை சந்தை அமைக்கப்படும். சோளிங்கர் நரசிம்மர் கோயிலுக்கு ரோப் கார் அமைக்கப்படும். அரக்கோணத்தில் பழனிப்பேட்டை- சுவால்பேட்டை இடையே மேம்பாலம் அமைக்கப்படும். ராணிப்பேட்டை, வாலாஜா, மேல்விஷாரம் பகுதியில் பாதாள சாக்கடை திட்டம் தொடங்கப்படும். சிப்காட்டில் டிசிசி கம்பெனியில் தேங்கியுள்ள குரோமியம் கழிவுகள் அகற்றப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

இதில், திமுக, காங்கிரஸ், மதிமுக, விசி, இந்திய முஸ்லிம் லீக் கட்சி உள்ளிட்ட திமுக கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஆயிரக்கணக்கில் கலந்துகொண்டனர்.

துரைமுருகனை அறிமுகம் செய்த ஸ்டாலின்: உங்களுக்கு நன்கு அறிமுகமான ஒருவர் என்னுடன் வந்துள்ளார். அவரையும் நான் அறிமுகப்படுத்துகிறேன் என்று ஸ்டாலின் கூறினார். அப்போது ஸ்டாலின் இருந்த பிரசார வேனில் இருந்து காட்பாடி சட்டமன்ற வேட்பாளர் துரைமுருகன் பொதுமக்களை பார்த்து கையசைத்தார். அப்போது அங்கிருந்த பொதுமக்கள் அவருக்கு உற்சாகமாக கையசைத்து ஆராவாரம் செய்தனர். அதிமுக ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறக்கூடாது என்பதை மனதில் வைத்துக்கொண்டு திமுகவின் வெற்றிக்கு உழைக்க வேண்டும் என்று ஸ்டாலின் பேசினார்.

Related Stories:

>