×

காட்பாடி வெடிமருந்து நிறுவனம் மீண்டும் திறக்கப்படும் அணைக்கட்டில் நறுமணத்தொழிற்சாலை, மாம்பழம், கொய்யா பழச்சாறு தொழிற்சாலை-ஊசூர் தேர்தல் பிரசாரத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாக்குறுதி

வேலூர் : காட்பாடி வெடிமருந்து தொழிற்சாலை மீண்டும் திறக்கப்படும். அணைக்கட்டில் நறுமணத்தொழிற்சாலை, மாம்பழம், கொய்யா பழச்சாறு தொழிற்சாலை அமைக்கப்படும் என்று ஊசூர் தேர்தல் பிரசாரத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அடுத்த ஊசூர் கூட்ரோட்டில் நேற்று பிற்பகல் நடந்த திமுக தேர்தல் பிரசார கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு வேட்பாளர்கள் காட்பாடி துரைமுருகன், அணைக்கட்டு நந்தகுமார், வேலூர் கார்த்திகேயன், கே.வி.குப்பம் சீத்தாராமன், குடியாத்தம் அமலு ஆகிய 5 வேட்பாளர்களை ஆதரித்து பேசியதாவது:

நீங்கள் தந்துள்ள சிறப்பான, உற்சாகமான வரவேற்புக்கு நன்றி, உங்களை தேடி, நாடி வந்துள்ளேன். உங்களிடத்தில் ஆதரவு கேட்க வந்துள்ளேன். நீங்கள் உதய சூரியனுக்கு வாக்களித்து, மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெற வைக்க கேட்க வந்துள்ளேன்.
தேர்தலுக்காக மட்டும் வருபவன் ஸ்டாலின், இல்லை. எப்போதும் உங்களோடு இருக்கிற ஸ்டாலின் என்ற உரிமையோடு வந்துள்ளேன். வருகிற ஏப்ரல் 6ம் தேதி நடைபெறுகின்ற சட்டமன்ற தேர்தலில், காட்பாடி வேட்பாளராக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் நிறுத்தப்பட்டுள்ளார். அவருக்கு அறிமுகம் தேவையில்லை. கலைஞருக்கு பிறகு சட்டமன்றத்தில் அனுபவம் மிக்கவர் அவர் தான்.

மூத்த சட்டமன்ற உறுப்பினர். அவருக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச்செய்ய வேண்டும். அதேபோல் அணைக்கட்டு தொகுதியில், ஏற்கனவே நின்று, வென்று, சட்டமன்றம் சென்று, உங்களுக்காக தொகுதியின் முன்ேனற்றத்திற்காக தொடர்ந்து குரல் கொடுக்கும் வேட்பாளர் நந்தகுமார் அவருக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். அவர் மாவட்ட செயலாளராகவும் உள்ளார்.

எப்போதும் சட்டமன்றத்தில் அவர் பேசினால், அணைக்கட்டு, அணைக்கட்டு என்று, அவரை பார்த்து சொல்லுவார்கள், அதற்கு அவர் சொல்வார், பெயர் தான் எங்கள் தொகுதிக்கு அணைக்கட்டு, ஆனால் எங்கள் தொகுதியில் அணைக்கட்டு இல்லை என்று. எதிர்கட்சி வரிசையில் இருந்தாலும், அங்குள்ள அமைச்சர்களிடம் கோரிக்கை வைப்பது, சட்டமன்றத்தில் வாதங்கள் எழுப்புவது, தொகுதியில் அரசு நிகழ்ச்சிகள் நடந்தால் உரிமையை கேட்பது என்று, சிறந்த செயல்வீரராக விளங்கிக் ெகாண்டிருப்பவரைத்தான், மீண்டும் அணைக்கட்டு வேட்பாளராக நிறுத்தியுள்ளோம். உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றியை தேடி தரவேண்டும்.

அதேபோல் வேலூர் தொகுதியில் கார்த்திகேயன், வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே வேலூர் மாநகர மேயராக இருந்து மக்கள் பணியில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு, தொடர்ந்து வேலூருக்கு சட்டமன்ற உறுப்பினராக பொறுப்பேற்று, தொகுதி மக்களின் முன்னேற்றத்திற்கு பாடுபட்டு, மீண்டும் சட்டமன்ற வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். அவருக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச்செய்ய வேண்டும்.

கே.வி.குப்பம் தொகுதியில் திமுக வேட்பாளர் கே.சீதாராமன் போட்டியிடுகிறார். அனைவரது உள்ளங்களிலும் இடம்பெற்றவர். எளிமையானவர், எளியவரானவரை தேர்ந்தெடுத்து, நிறுத்தியுள்ளோம். அவருக்கும் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து ஆதரவு தரவேண்டும்.

குடியாத்தம் தொகுதியில் போட்டியிடக்கூடிய வேட்பாளர் சகோதரி வி.அமலுவுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். ஏற்கனவே குடியாத்தம் தொகுதி எம்எல்ஏ காத்தவராயன், உடல் நலிவுற்று, நம் அனைவரையும் மீளாத்துயரத்தில் ஆழ்த்திவிட்டு. மறைந்துவிட்டார். அவர் எப்படி குடியாத்தம் தொகுதியில் பணியாற்றினாரோ, அனைவரது உள்ளங்களில் இடம் பிடித்தாரோ, அதேபோல், அவர் வழியில் நின்று பணியாற்ற, அமலுவை வேட்பாளராக தேர்ந்தெடுத்து, நிறுத்தியுள்ளோம்.

யானை கட்டி நெற்போர் அடித்ததால், ஆனைக்கட்டியாக இருந்து அணைக்கட்டு என்று மாறியது தான் இந்த அணைக்கட்டு தொகுதி. காட்பாடி சட்டமன்ற தொகுதி குறித்து சொல்ல வேண்டுமென்றால், 1971ல் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.  அதன்பிறகு நடந்த 1989, 1996, 2006, 2011, 2016, ஏன் 2021லும் துரைமுருகன் தான் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். அப்படிப்பட்ட சிறப்புமிக்க ஊராக காட்பாடி உள்ளது.

சுதந்திரத்திற்கு முன்னதாக புரட்சியை தொடங்கியது வேலூர். கைத்தறி நெசவுக்கு பெயர் போன குடியாத்தம், மாங்காய், நெல்லுக்கு பெயர் போன ஊர் தான் கே.வி.குப்பம். இப்படி பெருமைக்குரிய சிறப்புக்குரிய தொகுதி வேட்பாளர்களாகவும், நம்முடைய வேட்பாளர்களாகவும் திமுக வேட்பாளர்களாகவும், மதச்சார்பற்ற வேட்பாளர்களாகவும், நிறுத்தப்பட்டுள்ளவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்.

இந்த வட்டார மக்களின் எந்த கோரிக்கையையாவது 10 ஆண்டு ஆட்சியில் உள்ள அதிமுக அரசு நிறைவேற்றி உள்ளதா? இப்பகுதியில் சுத்தமான குடிநீர், ஆரம்ப சுகாதார நிலையம், மருத்துவமனை தரம் உயர்த்தினார்களா, அணைக்கட்டு தொகுதியில் மலைகிராமங்களுக்கு சாலை வசதி உண்டா? காவனூரில் ரயில்வே பாலம் அமைத்தார்களா?, கே.வி.குப்பம் தொகுதியில் குடிநீர் பிரச்னை தலைவிரித்தாடுகிறது.

திமுக கொண்டு வந்த காவிரி கூட்டு குடிநீர் இத்திட்டத்தை விரிவுபடுத்தவில்லை. கால்நடை மருத்துவமனை, மாவட்டத்தில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, குடியாத்தம் தொகுதியில் தீப்பெட்டி தொழில் உற்பத்தி, அணைக்கட்டு தொகுதியில் நெல்சேமிப்பு மண்டி, பழத்தொழிற்சாலை, குளிர்சாதன சேமிப்பு கிடங்கு என்று எதையாவது செய்து கொடுத்தார்களா?,

குடியாத்தம் நெசவாளர்கள் செழிக்க தொழில்துறை பூங்கா, காட்பாடியில் அரசு கலைக்கல்லூரி கோரிக்ைக நிறைவேற்றினார்களா?, எதையும் செய்யவில்லை. இப்படி இல்லை, இல்லை, என்று சொல்லக்கூடிய இந்த ஆட்சியை நீடிக்க விடலாமா? எனவே உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும்.

வேலூர் மாவட்டத்தில் அணைக்கட்டு தொகுதியில் நறுமணத்தொழிற்சாலை தொழிற்பேட்டை, சாத்தனூர் அணையில் இருந்து ஒடுக்கத்தூர் கூட்டு குடிநீர் திட்டம், ஒடுக்கத்தூர் மாம்பழம் மற்றும் கொய்யா பழச்சாறு தொழிற்சாலை, காட்பாடி சாலையில், வெங்கடேஸ்வரா பள்ளி அருகே வேலூர்- ஆற்காடு சாலை, சிஎம்சி மருத்துவமனை அருகே சுரங்கப்பாதைகள், காட்பாடி அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, வேலூரில் தோல் தொழில் மற்றும் தகவல் தொழில்நுட்ப பூங்கா, டோல்கேட் முதல் பச்சையப்பாஸ் வரையில் பறக்கும் மேம்பாலம், வேலூர் அரசு மருத்துவமனை பல்நோக்கு மருத்துவமனையாக தரம் உயர்த்தப்படும்.

குடியாத்தம் ஜவுளி பூங்கா, பாதாள சாக்கடை திட்டம், தோல் தொழிற்சாலை அடிப்படையாகக்கொண்டு சிறப்பு பொருளாதார மண்டலம், தோல் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுப்பொருட்களை சுத்திகரிப்பு செய்ய, சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும், வேலூர், குடியாத்தம் பகுதியில் புறவழிச்சாலை, பேரணாம்பட்டு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, தமிழ்அறிஞர் குடியாத்தத்தில் கே.எம்.அண்ணல் தாங்கோ, காங்கேயநல்லூரில் கிருபானந்த வாரியாருக்கு நினைவு மண்டபம் அமைக்கப்படும்.

கே.வி.குப்பம் ஒகேனக்கல் குடிநீர் திட்டம், தொழிற்பயிற்சி நிலையம், அரியூர் கூட்டுறவு நூற்பாளையம், காட்பாடி வெடிமருந்து தொழிற்சாலை மீண்டும் திறக்கப்பட்டு சிறப்பாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற காட்பாடி, அணைக்கட்டு, வேலூர், கே.வி.குப்பம், குடியாத்தம் தொகுதி வேட்பாளர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெறச்செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.


Tags : Godbody Explosion Company ,Dam Perfumery Factory ,Mango ,Guava Juice Factory ,Neuzur Electoral Proprepels ,Q. Stalin , Vellore: The Katpadi ammunition factory will be reopened. Dam Fragrance Factory, Mango, Guava Fruit Juice
× RELATED மாம்பழ ஃபலூடா