தபால் வாக்கை முகநூலில் பதிவிட்ட விவகாரத்தில் புதிய திருப்பம்!: தென்காசி அரசு பள்ளி ஆசிரியை உட்பட 3 பேர் கைது..!!

தென்காசி: தென்காசியில் தபால் வாக்கு, வாட்ஸ் அப், ஸ்பேஸ் புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பரவிய விவகாரத்தில் புதிய திருப்பமாக அரசு பள்ளி ஆசிரியை உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தென்காசி சட்டமன்ற தொகுதியில் ஆசிரியை ஒருவர் அமமுக-வுக்கு வாக்கு செலுத்தியதாக தபால் வாக்கு சீட்டு வாட்ஸ் அப், ஸ்பேஸ் புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பரவியது. இது தொடர்பான விசாரணையில் சுரண்டை ஆர்சி. நடுநிலைப் பள்ளி ஆசிரியை ஆரோக்ய அனுஷ்டால் என்பவரை பணியிடைநீக்கம் செய்யக்கோரி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். இந்த நிலையில் அந்த தபால் வாக்கிற்கும் தனக்கும் தொடர்பில்லை என்று ஆரோக்ய அனுஷ்டால் மாவட்ட ஆட்சியரிடம் விளக்கம் அளித்தார்.

தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் சர்சைக்குரிய தபால் வாக்கு, வெள்ளக்கால் பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியை கிருஷ்ணவேணி என்பவர் பதிவு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஆசிரியையின் கணவர் கணேசபாண்டியன், அமமுக அனுதாபி என்பதால் தபால் வாக்கு சீட்டினை அவரது நண்பர் செந்தில்குமாருக்கு பகிர்ந்துள்ளார். பின்னர் தபால் வாக்கை செந்தில்குமார் முகநூலில் பதிவிட்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து அரசுப்பள்ளி ஆசிரியை கிருஷ்ணவேணி, அவரது கணவர் கணேஷ் பாண்டியன் முகநூலில் பதிவிட்ட செந்தில்குமார் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். வரிசை எண் குளறுபடியில் மற்றொரு ஆசிரியை பணியிடைநீக்கம் செய்தது தொடர்பாகவும் வருவாய்த்துறை ஊழியர்களிடம் மாவட்ட ஆட்சியர் விசாரணை மேற்கொண்டுள்ளார். 

Related Stories:

>