×

பள்ளிக்கல்வித் திட்டத்தின் கீழ் முறைகேடாக ரூ.200 கோடி ஒப்பந்தம் : 2 அமைச்சர்களுக்கு லஞ்சமாக கைமாறிய பெருந்தொகை!!

சென்னை : ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு, நடத்தை விதிமுறைகளை மீறி முறைகேடாக ரூ.200 கோடிக்கு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாக பகீரங்க புகார் எழுந்துள்ளது. அரசுப் பள்ளிகளின் கல்வி வளர்ச்சிக்காக ஒருங்கிணைந்த பள்ளிக்கல்விதிட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பள்ளிகளுக்கான கட்டிடங்கள், கல்வி உப கரணங்கள், விளையாட்டு பொருட்கள், கணினி உள்ளிட்டவை வாங்கவும் ஆசிரியர்களுக்கான பயிற்சி, மாணவர்களுக்கான தொழிற்கல்வி, மேற்படிப்பு உள்ளிட்ட திட்டங்களுக்காக நிதி ஒதுக்கப்படுகிறது.

 ஆண்டுதோறும் சுமார் ரூ. 3000 ஆயிரம் கோடி அளவுக்கு இந்த திட்டங்களை செயல்படுத்த நிதி ஒதுக்கப்படுகிறது. இந்த நிலையில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு மார்ச் 22ல் ரூ.200 கோடி அளவுக்கு உபகரணங்களை வாங்கவும் திட்டங்களை செயல்படுத்தவும் மாவட்ட கல்வி அலுவலர் உள்ளிட்டோருக்கு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்ட அதிகாரி சுற்றறிக்கை அனுப்பியதாக புகார் எழுந்துள்ளது. இந்த சுற்றறிக்கையை தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பே பிப்ரவரி 22,23,24 ஆம் தேதிகளில் தயாரித்தது போல் அந்த அதிகாரி தனது அலுவலகத்திலேயே தயாரித்ததாகவும் கூறப்படுகிறது.

மாவட்ட கல்வி அலுவலகங்களில் இருந்து அலுவலர்களை நேரில் வரவழைத்து சுற்றறிக்கையை கொடுத்துவிட்டு அதனை பிப்ரவரி  25ம் தேதிக்கு முன்னரே பெற்றுக் கொண்டது போல் ஆவணங்களை உருவாக்க அவர் அறிவுறுத்தியதாக பகீர் புகார் முன்வைக்கப்பட்டுள்ளது. தேர்தலுக்கு முன்னர் ரூ.200 கோடிக்காண உபகரணங்களை குறிப்பிட்ட தனியார் நிறுவனத்திடம் இருந்து வாங்கவும் திட்டங்களை நிறைவேற்றவும் மாவட்ட கல்வி அலுவலர்களை வற்புறுத்தியாக தெரிகிறது. இதற்காக மாநில திட்ட அதிகாரி மற்றும் அவருக்கு உதவிய 2 மூத்த அமைச்சர்களுக்கும் பெருந்தொகை லஞ்சமாக கைமாறி இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

நிதியாண்டு இறுதியில் ஒரு வாரத்தில் ரூ.200 கோடி மதிப்புள்ள திட்டங்களை நிறைவேற்றுவது சாத்தியமற்றது என்றும் தேர்தல் நடத்தை விதிகளை மீறி நிறைவேற்ற மாவட்ட கல்வி அதிகாரிகள் தயங்கி வருவதாக கூறப்படுகிறது. உபகரணங்கள் வாங்காமலும் திட்டங்கள் செயல்படுத்தாமலும் உள்ள நிலையில், மார்ச் 31ம் தேதிக்குள் சம்மந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்கள் பொருட்கள் வாங்க ஒப்பந்தம் போட்ட தனியார் நிறுவனங்கள் பெயரில் வாங்கி வங்கி வரைவோலை, காசோலை தயார் செய்து வைக்க வேண்டும் என்று மாவட்ட கல்வி அதிகாரிகளை கட்டாயப்படுத்துவதாக புகார் எழுந்துள்ளது. இதனால் மாவட்ட கல்வி அதிகாரிகள், திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் செய்வதறியாது தவித்து வருகின்றனர்.

Tags : Bribe , பெருந்தொகை
× RELATED லஞ்சம் வாங்கி கைதான அமலாக்கத்துறை...