×

பவன் கல்யாண் நடிக்கும் 'வக்கீல் சாப்'திரைப்படத்தின் டிரைலரை காண தடுப்புகளை உடைத்துக்கொண்டு ஓடிய ரசிகர்கள்...பலர் படுகாயம்..!!

ஹைதராபாத்: தெலுங்கு திரையுலகின் பவர் ஸ்டார் பவன் கல்யாண் நடித்துள்ள வக்கீல் சாப்  திரைப்படத்தின் டிரைலரை காண திரையரங்குகளில் குவிந்த ரசிகர்கள் தடுப்புகளை உடைத்துக்கொண்டு ஓடியதில் பலர் காயமடைந்தனர். ஆந்திரா, தெலுங்கானாவில் பவர் ஸ்டார் என்று கொண்டாடப்படும் பவன் கல்யாண், ஜனசேனா என்ற கட்சியையும் நடத்தி வருகிறார். பாலிவுட்டில் பிங்க் மற்றும் தமிழில் அஜித் நடிப்பில் வெளியாகிய நேர்கொண்ட பார்வை திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நீண்ட இடைவெளிக்கு பிறகு பவன் கல்யாண் நடித்துள்ளார். இப்படத்தின் டிரைலர் நேற்று திரையரங்குகளில் வெளியானது. இதனை காண திரையரங்குகளின் முன் குவிந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள், பவன் கல்யாண் கட்டவுட்டிற்கு பால் அபிஷேகம் செய்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

மேலும் வாடவேடிக்கை ஆட்டம், பாட்டம் என ரசிகர்கள் அசத்தினார். பின்னர் திரையரங்கின் உள்ளே செல்ல ரசிகர்கள் முந்தியடித்துக்கொண்டு ஓடியதால் அங்கிருந்த தடுப்புகள் உடைந்து நொறுங்கின. கொரோனா தடுப்பு விதிகள் எதையும் கடைபிடிக்காமல் திரையரங்கில் குவிந்த ரசிகர்கள் திரையில் பவன் கல்யாணை கண்டதும் காகித குவியல்களை பறக்கவிட்டு உற்சாக கூச்சலிட்டனர். திரையரங்கில் ரசிகர்கள் செய்த ரகளையில் பலர் காயமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. பிரகாஷ்ராஜ், சுருதிஹாசன், அஞ்சலி, நிவேதா தாமஸ் உள்ளிட்டோர் நடித்துள்ள வக்கீல் சாப் திரைப்படம் ஏப்ரல் 9ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Tags : Pawan Kalyan , Pawan Kalyan, 'Lawyer Saab', Trailer, Fan
× RELATED ஆந்திராவில் ஜனசேனா கட்சி தலைவர்...