ஷர்துல், புவனேஷ்வருக்கு விருது இல்லையா? விராத் வியப்பு

புனே: இங்கிலாந்து அணிக்கு எதிராக பந்துவீச்சில் அசத்திய ஷர்துல் தாகூர், புவனேஷ்வர் குமாருக்கு விருது கிடைக்காதது வியப்பாக உள்ளதாக கேப்டன் விராத் கோஹ்லி கூறியுள்ளார். இங்கிலாந்து அணியுடன் நடந்த டெஸ்ட், டி20 மற்றும் ஒருநாள் என 3 தொடர்களையுமே இந்திய அணி கைப்பற்றி அசத்தியது. புனே எம்சிஏ ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் நடந்த கடைசி ஒருநாள் போட்டியில், இந்தியா 7 ரன் வித்தியாசத்தில் போராடி வென்று 2-1 என்ற கணக்கில் கோப்பையை முத்தமிட்டது. இங்கிலாந்து அணி 330 ரன் என்ற கடினமான இலக்கை துரத்திய நிலையில், ஷர்துல் மற்றும் புவனேஷ்வர் அபாரமாகப் பந்துவீசி முறையே 4 விக்கெட், 3 விக்கெட் வீழ்த்தி வெற்றிக்கு உதவினர். எனினும், அந்த போட்டியில் ஆட்டமிழக்காமல் 95 ரன் விளாசிய இங்கிலாந்து பேட்ஸ்மேன் சாம் கரன் ஆட்ட நாயகனாகவும், 3 போட்டியில் 219 ரன் குவித்து முதலிடம் பிடித்த ஜானி பேர்ஸ்டோ தொடர் நாயகனாகவும் விருது பெற்றனர்.

இது குறித்து கோஹ்லி கூறியதாவது: ஷர்துல், புவனேஷ்வருக்கு விருது கிடைக்காதது மிகவும் வியப்பாக உள்ளது. மிகவும் இக்கட்டான, சவாலான சூழ்நிலையில் அவர்கள் இருவரும் அற்புதமாகப் பந்துவீசினர். இந்திய வீரர்கள் சில கேட்ச் வாய்ப்புகளை கோட்டைவிட்டது ஏமாற்றமாக இருந்தது. சம்பந்தப்பட்ட வீரர்களுக்கும் அது ஏமாற்றத்தை கொடுத்திருக்கும். ஆனால், விளையாட்டில் இது சகஜமானது தான். மொத்தத்தில் நாங்கள் உத்வேகத்துடன், தன்னம்பிக்கையுடன் செயல்பட்டோம். இறுதியில் வெற்றியையும் வசப்படுத்தினோம். பலம் வாய்ந்த அணிகள் மோதும்போது ஆட்டம் எப்போதுமே விறுவிறுப்பாக அமையும்.

இங்கிலாந்து அவ்வளவு எளிதாக சரணடைந்துவிடாது என்பது எங்களுக்கு தெரியும். சாம் சிறப்பாக விளையாடி கடைசி வரை போராடினார். எங்கள் பவுலர்கள் விக்கெட் வீழ்த்தி நெருக்கடி கொடுத்தனர். கடைசி கட்ட ஓவர்களில் எங்களின் பேட்டிங் மிக நன்றாக இருந்தது. முதல் மூன்று வீரர்களில் ஒருவர் சதம் அடித்தால் நிச்சயமாக 370 முதல் 380 வரை குவிக்க முடியும். உலகின் டாப் அணிக்கு எதிராக பெற்ற வெற்றி மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. அடுத்து ஐபிஎல் தொடரில் விளையாடுவதை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம். இவ்வாறு கோஹ்லி கூறினார்.

Related Stories:

>