×

ஒலிம்பிக் போட்டிக்கு சிறப்பு பயிற்சி இத்தாலி செல்கிறார் பவானி தேவி

சென்னை: ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற முதல் வாள்வீச்சு வீராங்கனை பவானி தேவி, சிறப்பு பயிற்சிக்காக இன்று இத்தாலி புறப்பட்டு செல்கிறார். சுகாதார பாதுகாப்பு பொருட்களை தயாரிக்கும் ‘எம்ஒய்’ நிறுவனத்தின் விளம்பரத்தூதராக பவானிதேவி நியமிக்கப்பட்டுள்ளார். சென்னையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பவானிதேவி செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க வேண்டும் என்பது எனது கனவு. அந்த கனவு இன்று நிறைவேறியுள்ளது. அடுத்து  ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வெல்ல வேண்டும் என்பதே எனது முக்கிய இலக்காக இப்போது உள்ளது. ஆனால் என் பெற்றோர் தந்த ஆதரவும் ஊக்கமும் என்னை இந்த இடத்தில் கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறது. அது மட்டுமின்றி இப்போது நிலைமையும் மாறி இருக்கிறது. அதன் அடையாளமாகத்தான் இன்று நான் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்று இருக்கிறேன்.   

அதற்கு எனது ஆரம்பகால பயிற்சியாளர் விசுவநாதன் அவர்களும் காரணம். பின்னர் கேரளா சென்று பயிற்சி பெற்றேன். தொடர்ந்து இத்தாலியில் பயிற்சி செய்தேன். ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றது எனது விளையாட்டு வாழ்க்கையில் ஒரு கட்டம்தான். இன்னும் பல கட்டங்களை கடக்க வேண்டி உள்ளது. ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதற்கு முன்பு  இத்தாலியில் மீண்டும் பயிற்சி பெற உள்ளேன். அதற்காக செவ்வாய்க்கிழமை (இன்று) இத்தாலி புறப்பட்டு செல்கிறேன். ஒலிம்பிக் போட்டி தொடங்கும் வரை அங்கேயே இருந்து பயிற்சி பெறுவேன்.

வாள்வீச்சு விளையாட்டில் பங்கேற்க இப்போது பலரும் ஆர்வம் காட்டுகின்றனர். முன்பு அவர்களுக்கு பெரிய வழிகாட்டுதல்கள், முன்னோடிகள் என்று யாரும் இல்லை. ஆனால் இப்போது நிலைமை மாறி இருக்கிறது. அது மட்டுமன்றி இந்த விளையாட்டில் வெற்றி பெறுபவர்களுக்கு அரசு வேலைவாய்ப்புகள் முன்பு இல்லாமல் இருந்தன. இப்பொழுது கத்திச்சண்டையில் தேசிய, சர்வதேச அளவில் வெற்றி பெறுபவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது. நானும்கூட தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணியாற்றி வருகிறேன். இவ்வாறு பவானி தேவி கூறினார்.

Tags : Bhavani Devi ,Italy ,Olympics , Bhavani Devi goes to Italy for special training for the Olympics
× RELATED பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி...