×

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், குடும்பத்தினரை ஒருமையில் பேசி கொலைமிரட்டல்: அமைச்சர் உதயகுமார் மீது புகார்: தேர்தல் அதிகாரி, போலீசிடம் திமுக வக்கீல்கள் மனு

திருமங்கலம்: மு.க.ஸ்டாலினை ஒருமையில் பேசி அவரது குடும்பத்திற்கு கொலை மிரட்டல் விடுத்ததாக அமைச்சர் உதயகுமார், மீது திமுக வழக்கறிஞரணி சார்பில் தேர்தல் அதிகாரி மற்றும் போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே சாத்தங்குடியில் நேற்று முன்தினம் அமைச்சர் உதயகுமார் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது திமுகவை பற்றி கடுமையாக விமர்சனம் செய்து பேசினார். இதையடுத்து நேற்று திமுக மதுரை தெற்கு மாவட்ட வழக்கறிஞரணி பிரிவு அமைப்பாளர் தங்கேஸ்வரன், தொகுதி தேர்தல் பார்வையாளர் அன்புசெழியன், துணை அமைப்பாளர் தங்கசாமி ஆகியோர் திருமங்கலம் தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரி சவுந்தர்யா, திருமங்கலம் தாலுகா இன்ஸ்பெக்டர் சிவசக்தி ஆகியோரிடம் புகார் அளித்தனர்.

புகார் மனுவில், ‘‘அமைச்சர் உதயகுமார் தனது பிரசாரத்தில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை ஒருமையில் பேசியதுடன், அவரை தமிழ்நாட்டை விட்டு வெளியேற்றுவோம். குடும்பத்தையும் விரட்டி அடிப்போம் என பேசியுள்ளார். மேலும், கொலை மிரட்டல் விடுக்கும் தொனியில் அவர் பேசி இருக்கிறார். இதனால் இரு கட்சியினரிடம் மோதல் ஏற்பட்டு சட்டம், ஒழுங்கு பாதிக்கப்படும் நிலை உருவாகி விடும்’’ என்று தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து திமுக வழக்கறிஞரணி பிரிவு செயலாளர் தங்கேஸ்வரன் கூறும்போது, ‘‘திருமங்கலம் தொகுதியில் உள்ள சாத்தங்குடியில் அமைச்சர் பிரசாரத்தில் பேசிய வீடியோ பதிவுகளை தேர்தல் நடத்தும் அதிகாரி மற்றும் தாலுகா இன்ஸ்பெக்டரிடம் வழங்கியுள்ளோம். உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்’’ என்றார்.


Tags : DMK ,MK Stalin ,Minister ,Udayakumar , DMK
× RELATED முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து...