×

முதல்வர் தொகுதியில் அதிமுகவிற்கு வாக்களிக்க நிர்ப்பந்திக்கும் அதிகாரிகள்: அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கொந்தளிப்பு

சேலம்: சட்டமன்ற தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கும், போலீசாருக்கும் தபால் ஓட்டு வழங்கப்பட்டுள்ளது. முதலில், அரசு ஊழியர்களுக்கான தபால் ஓட்டு வழங்கப்பட்டு, அதனை பெறும் பணியில் தேர்தல் அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர். தொகுதி வாரியாக தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 2 கட்ட பயிற்சி வகுப்பு நடந்து முடிந்துள்ளது. இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பின்போது, சேலம் மாவட்டத்தில் அரசு ஊழியர்களுக்கான தபால் ஓட்டு சீட்டுகள் வழங்கப்பட்டு, தொகுதி வாரியாக தனித்தனி பெட்டிகளில் பெறப்பட்டது.
சில அரசு ஊழியர்கள், தங்களின் தபால் ஓட்டுகளை தபாலில் அனுப்பி வைப்பதாக கூறி எடுத்துச் சென்றனர்.

பெரும்பாலானோர், அங்கேயே தங்களின் தபால் வாக்கை பதிவு செய்து, பெட்டிகளில் போட்டனர். முதல்வர் எடப்பாடி பழனிசாமி போட்டியிடும் இடைப்பாடி தொகுதியிலும், அதன் அருகே சங்ககிரி தொகுதியிலும் தபால் ஓட்டு போடும் அரசு ஊழியர்களிடம் அந்தந்த துறையின் உயர் அதிகாரிகள் தனித்தனி கூட்டங்களை நடத்தியுள்ளனர். அந்த கூட்டத்தில், அதிமுகவிற்கு வாக்களியுங்கள் என நிர்ப்பந்தித்துள்ளனர். இந்த தகவல் தற்ேபாது வெளியாகியுள்ளது.

இதுபற்றி அரசு ஊழியர்கள் கூறுகையில், ‘‘எங்களது விருப்பம் போல், தபால் வாக்கை பதிவு செய்வோம். ஆனால், இடைப்பாடி, சங்ககிரி தொகுதியில் அதிமுகவுக்கு தான் வாக்களிக்க வேண்டும் என தேர்தல் பணியில் ஈடுபடும் உயர் அதிகாரிகள் நிர்ப்பந்திக்கிறார்கள். ஒவ்வொரு துறையின் உயர் அதிகாரியும் இதனை கூறுவதால், அதிர்ச்சியடைந்துள்ளோம். அதேபோல், தபால் வாக்களிக்க தாமதிக்க வேண்டாம். உடனே அதிமுகவிற்கு வாக்களித்து அனுப்புங்கள் எனக்கூறுகின்றனர். சிலர், உங்களுக்கு தேவையானது வந்து சேரும் எனக்கூறியும் நிர்பந்திக்கிறார்கள். இத்தகைய நபர்கள் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றனர். இச்சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : AIADMK ,CM , AIADMK, government employees, teachers
× RELATED செந்தில் பாலாஜி ஜாமீன் கேட்ட வழக்கில்...