மாமூல் தராததால் ஆத்திரம்: மெக்கானிக் வீடு சூறை: 2 ரவுடிகள் உட்பட 4 பேர் கைது

அண்ணாநகர்: சென்னை அண்ணாநகரில் மாமூல் தராததால் மெக்கானிக் வீட்டை சூறையாடிய 2 ரவுடிகள் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். சென்னை அண்ணாநகர் அன்னை சத்யா நகரை சேர்ந்தவர் பாஸ்கரன் (35). அதே பகுதியில் மெக்கானிக் கடை நடத்தி வருகிறார். கடந்த 27ம் தேதி  பாஸ்கரன் வேலையை முடித்து வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது,  அந்த வழியாக ஆட்டோவில் வந்த 4 பேர், அவரை வழிமறித்து மாமூல் கேட்டுள்ளனர். அதற்கு பாஸ்கரன், தன்னிடம் பணம் இல்லை என்றார். அதற்கு, அந்த 4 பேரும், தங்களுக்கு பணம் தரவில்லை, என்றால் கடை நடத்த முடியாது, என மிரட்டியுள்ளனர்.

இதுபற்றி போலீசில் புகார் அளிப்பேன், என பாஸ்கரன் கூறியுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த அந்த 4 பேர், பாஸ்கரனை பின் தொடர்ந்து வந்து,  அவரின்  வீட்டின் மீது சரமாரியாக கல் வீசி ஜன்னல் கண்ணாடிகளை உடைத்ததுடன், அங்கிருந்த பொருட்களை உடைத்து சூறையாடி விட்டு தப்பி சென்றனர். இதுதொடர்பாக, பாஸ்கரன் அண்ணாநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து, அதே பகுதி அன்னை சத்யா நகர் 2வது தெருவை சேர்ந்த ரவுடி ஜோசப் (20)  ரவுடி ராபட் (22),  பட்டாபிராம் பகுதியை சேர்ந்த கிருபா (18), மற்றும் 17 வயது மதிக்கதக்க சிறுவன் ஆகியோரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ரவுடிகள் ஜோசப் மற்றும் ராபட் இருவரும் அண்ணன், தம்பி என்பதும். இவர்கள் மீது கொலை வழக்கு, குண்டாஸ் உட்பட பல வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>