×

10 ஆண்டாக கழிவுநீர் கலந்து வரும் குடிநீர்: அமைச்சர் வெல்லமண்டி நடராஜனை பெண்கள் முற்றுகையிட்டு வாக்குவாதம்: அதிமுக நிர்வாகிகள் தடுத்ததால் தள்ளுமுள்ளு

திருச்சி: கழிவுநீர் கலந்து வரும் கழிவுநீரை காட்டி அமைச்சர் அமைச்சர் வெல்லமண்டி நடராஜனை பெண்கள் முற்றுகையிட்டனர். இவர்களை அதிமுகவினர் தடுக்க முயன்றதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடக்கிறது. இதனால், அனைத்து கட்சி தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதிமுக 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தும் பொதுமக்களுக்கு எதுவும் செய்யாத காரணத்தால் ஓட்டு கேட்க செல்லும் அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களை பொதுமக்கள் முற்றுகையிட்டு விரட்டியடித்து வருகின்றனர்.

டெல்டா மாவட்டங்களில் பல இடங்களில் அதிமுக வேட்பாளர்களுக்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில் திருச்சி கிழக்கு தொகுதி வேட்பாளரான அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் பிரசாரத்திற்கு செல்லும்போது பொதுமக்கள் கருப்பு கொடி கட்டி எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். நேற்று காலை வெல்லமண்டி நடராஜன் உலகநாதபுரம் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது அங்கு வாட்டர் பாட்டில்களில் கலங்கிய குடிநீருடன் திரண்டு நின்ற பெண்கள், அமைச்சரை முற்றுகையிட்டதோடு கடந்த 10 ஆண்டாக குடிநீர் கலங்கலாக வருகிறது. கழிவுநீர் கலந்து வரும் குடிநீர் குறித்து பலமுறை புகார் அளித்தும் மாநகராட்சியும், அமைச்சரான நீங்களும் கண்டு கொள்ளவில்லை. தற்போது எப்படி ஓட்டு கேட்டு வருகிறீர்கள் என்று கேள்வி கேட்டு, அமைச்சரிடம் கழிவுநீர் கலந்த வாட்டர் பாட்டிலை வழங்கினர். இதனால், கட்சி நிர்வாகிகள் பொதுமக்களிடம் தகராறில் ஈடுபட்டனர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதனால் செய்வதறியாது திகைத்து நின்ற அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், இதுதொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக அவர்களிடம் கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இச்சம்பவம் அமைச்சர் மற்றும் கட்சியினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அதிமுக வேட்பாளருக்கு கருப்புக்கொடி காட்டிய இளைஞர்களை அடித்து இழுத்துச் சென்ற போலீஸ்

பெரியகுளம் அருகே அதிமுக வேட்பாளருக்கு கருப்புக்கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்த இளைஞர்களை, போலீசார் அடித்து இழுத்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தேனி மாவட்டம், பெரியகுளம் தொகுதி அதிமுக வேட்பாளர் முருகன், தொகுதிக்குட்பட்ட வடுகபட்டியில் நேற்று இரவு பிரசாரத்தை முடித்துவிட்டு, தாமரைக்குளத்திற்கு வாக்கு சேகரிக்க வந்தார். அப்போது வெள்ளாள முன்னேற்ற கழகத்தை சேர்ந்த இளைஞர்கள் 20க்கும் மேற்பட்டோர் அங்கு வந்து கருப்புக்கொடி காட்டி ஓபிஎஸ், இபிஎஸ் ஒழிக என கோஷமிட்டபடி அதிமுக வேட்பாளரை மறிக்கச் சென்றனர்.உடனே பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசார், அவர்களை அப்புறப்படுத்த முயன்றனர். இளைஞர்கள் மீறிச் செல்ல, போலீசார் அவர்களை அடித்து இழுத்துச் சென்று, அங்கிருந்த வஜ்ரா வாகனத்தில் ஏற்றியதாக கூறப்படுகிறது.

வாகனத்தில் ஏறிய இளைஞர்கள், ‘‘நாங்கள் எங்கள் உரிமைக்காக போராடுகிறோம். எங்களை ஏன் தடுக்கிறீர்கள்’’ என கூறி ஓபிஎஸ், இபிஎஸ் ஒழிக என கோஷமிட்டனர். இதை தொடர்ந்து அதிமுக வேட்பாளர் போலீஸ் பாதுகாப்புடன் அப்பகுதியில் வாக்கு சேகரித்தார்.


Tags : Minister ,Vellamandi Natarajan , AIADMK
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...