×

ஒருவார போராட்டத்துக்கு வெற்றி சூயஸ் கால்வாயில் சிக்கிய சரக்கு கப்பல் மீட்பு

சூயஸ்: சூயஸ் கால்வாயில் சிக்கிய பிரம்மாண்ட சரக்கு கப்பல் ஒருவார கால போராட்டத்துக்குப் பின் நேற்று வெற்றிகரமாக கடலில் மிதக்க விடப்பட்டது. ஆசியாவின் மத்திய தரைக் கடல், ஐரோப்பாவின் செங்கடல் பகுதிகளை இணைக்கும் வகையில் எகிப்து நாட்டில் அமைக்கப்பட்டிருக்கும் சூயஸ் கால்வாய், உலகின் முக்கிய நீர்வழித்தடமாக விளங்குகிறது. உலக வர்த்தகத்தில், 7 சதவீத கச்சா எண்ணெய் கொண்டு செல்லுதல் உள்பட 10 சதவீதம் இந்தக் கால்வாயின் வழியாகவே நடைபெறுகிறது. இதனிடையே, ‘எவர் கிவன்’ என்ற சரக்கு கப்பல், கடந்த 22ம் தேதி சூயஸ் கால்வாய் வழியாக சென்று கொண்டிருந்த போது, பலத்த காற்று காரணமாக அதன் இரு கரைகளிலும் மோதி சிக்கியது.

இதனால் அந்த வழித்தடத்தில் கப்பல் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. சுமார் 367 கப்பல்கள் சூயஸ் கால்வாயை கடக்க முடியாமல் நடுக்கடலில் நின்றன. சர்வதேச வர்த்தகம் பெரிதும் பாதிக்கப்பட்டது. கடந்த 6 நாட்களாக அகழ் இயந்திரங்கள், 12 இழுவைப் படகுகளின் உதவியுடன் கப்பலை இழுக்க, கடலுக்குள் தள்ள முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. நேற்று முன்தினம் வரை 27,000 கியூபிக் மீட்டர் அளவு மணல் தோண்டி எடுக்கப்பட்டது. இந்நிலையில், 7வது நாளான நேற்றும் கப்பலை இழுக்கும் முயற்சிகள் தொடர்ந்தன.

நேற்று முன்தினம், முழு நிலவு நாள் என்பதால் கடல் நீர் மட்டம் உயர்ந்ததை அடுத்து, தரை தட்டிய கப்பலின் ஒரு பகுதி மணலில் இருந்து மீட்கப்பட்டு, மிதக்க தொடங்கியது. பின்னர், இழுவை கப்பல்களின் உதவியுடன் சிறிது சிறிதாக கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டு, முழுவதும் மிதக்க தொடங்கியது. இதையடுத்து, ‘எவர் கிவன்’ கப்பல் `கிரேட் பிட்டர் லேக்’ பகுதிக்கு இழுத்து செல்லப்பட்டது. அங்கு கப்பலை ஆய்வு செய்த பின், அது மீண்டும் தனது பயணத்தை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக சூயஸ் கால்வாய் அதிகாரிகள் தெரிவித்தனர்.


Tags : Suez Canal , Rescue of a cargo ship stranded in the Suez Canal that wins a week-long struggle
× RELATED சூயஸ் கால்வாயில் 2 கப்பல்கள் மோதல்