பாஜ, அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி இன்று தமிழகம், புதுவையில் பிரசாரம்

சென்னை: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தனி தொகுதியில் போட்டியிடும் மாநில பாஜ தலைவர் எல்.முருகனை ஆதரித்தும், கூட்டணி கட்சியான அதிமுக வேட்பாளர்களை ஆதரித்தும் பேசுவதற்காக பிரதமர் மோடி இன்று கோவை விமான நிலையம் வருகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் பிற்பகல் தாராபுரம் வந்து உடுமலை சாலையில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் அதிமுக, பாஜ மற்றும் கூட்டணிக் கட்சியை சேர்ந்த 13 வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி பிரதமர் நரேந்திர மோடி பேசுகிறார். இதில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தமிழக அமைச்சர்கள், கூட்டணி கட்சியினர் கலந்து கொள்கின்றனர். இதையொட்டி 4 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

புதுச்சேரி: புதுச்சேரியில் சட்டசபை தேர்தலில் தேஜ கூட்டணியில் என்ஆர் காங்கிரஸ் 16, அதிமுக 5, பாஜக 9 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி இன்று தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார். ஏஎப்டி திடலில் மாலை 4 மணிக்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுகிறார். இதில் கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்கின்றனர். இதையொட்டி அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

* ட்ரோன் பறக்க தடை

பிரதமர் மோடி வருகையொட்டி தீவிர பாதுகாப்பு வளையத்தின்கீழ் புதுச்சேரி கொண்டுவரப்பட்டுள்ளது. இதன்படி, குற்றவியல் நடைமுறை சட்டம் 1973, மாவட்ட ஆட்சியருக்கு வழங்கப்பட்டுள்ள 144 தடையுத்தரவு அதிகாரத்தின்கீழ் புதுச்சேரி முழுவதும் இன்று வரை ட்ரோன், ஆளில்லா விமானம் உள்ளிட்ட எந்த பறக்கும் சாதனங்களும் அனுமதியில்லை. இதனை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கைஎடுக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>