×

கிருஷ்ணகிரி, வேப்பனஹள்ளி தொகுதிகளில் களத்தில் இல்லாத வேட்பாளரால் அதிமுக தொண்டர்கள் சோர்வு

கிருஷ்ணகிரி சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளராக, கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் எம்.பி.யுமான அசோக்குமார் போட்டியிடுகிறார். இவர், கடந்த சில தினங்களுக்கு முன்பு காவேரிப்பட்டணம் பகுதியில் பிரசாரத்திற்கு சென்றார். அப்போது, அவருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதனால், பிரசாரத்தை பாதியில் நிறுத்திவிட்டு வீட்டுக்கு சென்றார். அவருடன் இருந்த இரண்டு பேருக்கு கொரோனா தொற்று இருந்ததால், அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில், அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்பதும், நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பதும் தெரிய வந்தது. இதற்காக அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

இதனிடையே கிருஷ்ணகிரியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்ற அதிமுக வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் அவர் பங்கேற்காததால் அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில், வேப்பனஹள்ளி தொகுதியில் அதிமுக சார்பில் துணை ஒருங்கிணைப்பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.பி.முனுசாமி போட்டியிடுகிறார். அவருக்கும் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அவரும் கடந்த 4 நாட்களாக பிரசாரத்திற்கு செல்லாமல் வீட்டிலேயே ஓய்வெடுத்து வருகிறார். இதனால், இரண்டு தொகுதிகளை சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே பெரும் சோர்வை ஏற்படுத்தியுள்ளது.

Tags : AIADMK ,Krishnagiri ,Veppanahalli , AIADMK, volunteers
× RELATED வாக்குச்சாவடி மையங்களில் 1089 போலீசார் பாதுகாப்பு