×

டிசைன் கூட இலைக்கட்சி கலர்தான் ‘ராஜாவின் பார்வை ஏடிஎம்கே பக்கம்’: மோடியை எச்.ராஜாவும் ஒதுக்கிட்டாருங்கோ...

சட்டமன்ற தேர்தலில் பெரும்பாலான தமிழக பாஜ வேட்பாளர்கள் என்ன பிளான்ல இறங்கியிருக்காங்களேன்னு தெரியலை...! எந்த இடத்திலும் பிரதமர் மோடி படத்தை போட்டு பிரசாரம் செய்வதில்லை. கட்சியின் மாநில தலைவரான முருகன் கூட, ‘‘எம்ஜிஆர் ஆசி பெற்ற சின்னம் தாமரை’’ என போட்டு பிரசாரம் செய்து வருகிறார் (எம்ஜிஆரை அதிமுகவினரே மறந்து விட்டது வேற விஷயம்). மோடியை வேட்பாளர்கள் ஒதுக்குவது பாஜ தொண்டர்களை கவலை அடையச் செய்துள்ளது.

பாஜ கட்சியில் நேற்று, முந்தாநாளு முளைச்ச தலைவர்கள் என்றால் கூட பரவாயில்லை. தேசிய தலைவராக இருந்த, மூத்த தலைவர்களுள் ஒருவரான எச்.ராஜாவே, தனது அதிகாரப்பூர்வமான ட்விட்டர் தளத்தில் போட்டுள்ள முகப்பு டிசைனில், பிரதமர் மோடியின் பெயர், படத்தை பயன்படுத்தவில்லை. சிவகங்கை மாவட்டம், காரைக்குடி தொகுதியில் பாஜ சார்பில் போட்டியிடும் இவர், ‘‘அதிமுக கூட்டணி வேட்பாளர் எச்.ராஜா’’, ‘‘வாக்களிப்பீர் தாமரை சின்னத்திற்கே’’ என குறிப்பிட்டுள்ளார். இதில், பிரதமர் மோடி படம் இடம் பெறவில்லை. அந்த டிசைன் கூட அதிமுகவின் கொடி வண்ணத்தில் உள்ளது. டிசைனில் உள்ள தாமரை கூட கருப்பு - வெள்ளையாகவே இருக்கிறது.

காவியை காணோம். பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் என்ற அடையாளத்தைக் கூட வெளிப்படுத்தாதது ஏன் என்று தெரியவில்லை. இதுகுறித்து அவரது ஆதரவாளர்களிடம் கேட்டபோது, ‘‘சட்டமன்ற தேர்தலில் அவர் காரைக்குடி தொகுதியில் போட்டியிட விரும்பவில்லை. சென்னையில் ஏதாவது ஒரு தொகுதியைத்தான் கேட்டிருந்தார். ஆனால், தலைமை அவரை காரைக்குடியில் நிற்கும்படி கேட்டுக் கொண்டது. கடந்த எம்பி தேர்தலில் படுதோல்வி அடைந்ததால், மீண்டும் அதே மாவட்டத்தில் உள்ள தொகுதியில் நிற்க அவருக்கு பிடிக்கவில்லை. அந்த வெறுப்பைத்தான் காட்டுகிறாரா...? இல்லை.. தலைமையின் உத்தரவா என தெரியவில்லை’’ என்றனர். ஒருவேளை எச்.ராஜாவிடம் கேட்டால், ‘‘அட்மின் போட்டிருப்பார். எனக்கு தெரியாது’’ என கூறுவாரோ?

Tags : Raja ,H Raja ,Modi , Politics
× RELATED ஆபாச கருத்து தெரிவித்த பா.ஜ.க நிர்வாகி...