சிஏஏ சட்டத்தை ஆதரித்து ஓட்டுபோட்டனர் சிறுபான்மையினர் துன்பத்துக்கு அதிமுக, பாமகதான் காரணம்: ஜோலார்பேட்டையில் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

வேலூர்: நாடாளுமன்றத்தில் சிஏஏ சட்டத்தை ஆதரித்து ஓட்டு போட்டதன் மூலம் சிறுபான்மையினர் துன்பத்துக்கு அதிமுக, பாமகதான் காரணம், திமுக ஆட்சிக்கு வந்ததும் அந்த சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுவோம் என்று ஜோலார்பேட்டை பிரசாரத்தில் மு.க.ஸ்டாலின் பேசினார். திருப்பத்தூர் மாவட்டத்தில் தி.மு.க. வேட்பாளர்கள் திருப்பத்தூர் நல்லதம்பி, ஜோலார்பேட்டை தேவராஜ், ஆம்பூர் வில்வநாதன், வாணியம்பாடி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் முகமது நயீம் ஆகியோரை ஆதரித்து நேற்று காலை ஜோலார்பேட்டையில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:- இந்த மாவட்டத்தில் ஒரு அமைச்சர் உள்ளார். அவர் யார் என்று உங்களுக்கு தெரியும். அவர்தான் கே.சி.வீரமணி. பழனிசாமி அமைச்சரவையில் 3 மணிகள் உள்ளனர். அருமையான மணிகள். வேலுமணி, தங்கமணி, வீரமணி. இதில் வேலுமணி அப்பட்டமாக ஊழல் செய்யக்கூடியவர். தங்கமணி சைலன்டாக செய்பவர். கே.சி.வீரமணி எப்படி செய்வார் என்பது உங்களுக்கு தெரியும். எல்லார் பெயரிலும் மணி உள்ளது. இதனால், ‘மணி’யில்தான் அவர்கள் குறியாக இருப்பார்கள். இவர்களுக்கு கொள்ளையடிப்பதே குறிக்கோளாக உள்ளது.

கரெக்‌ஷன், கமிஷன், கலெக்‌ஷன் இதுதான் அவர்கள் கொள்கை. தனது அமைச்சர் பதவியை பயன்படுத்தி இந்த பகுதி மக்களுக்கு, மாவட்ட மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. கொள்ளையடிப்பதை தொழிலாக, அதில் மும்முரமாக இருக்கக்கூடியவர் இந்த மாவட்டத்தை சேர்ந்த அமைச்சர் வீரமணி என்பது உங்களுக்கு நன்றாக தெரியும். 4 ஆண்டுகளுக்கு முன்பு கே.சி.வீரமணி மற்றும் அவரது பினாமி வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் ரெய்டு நடத்தினர். அது என்ன ஆனது, என்ன நடவடிக்கை என்பது யாருக்கும் தெரியவில்லை. மத்திய பாஜக அரசு, ஜெயலலிதா மறைவுக்கு பிறகு பன்னீர்செல்வம் வீட்டில், பழனிசாமி வீட்டில், அவர்கள் பினாமி வீடுகளில் ரெய்டு நடத்தியது.

ரெய்டு நடத்தி அங்கிருக்கிற ஆதாரங்களை கைப்பற்றி அவர்களை தங்களது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டது. அதேபோல் அமைச்சர்களையும் ரெய்டு நடத்தி தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டுள்ளனர். அவர்களில் இந்த மாவட்டத்தை சேர்ந்த அமைச்சர் வீரமணியும் ஒருவர். வீரமணியின் வேலை என்னவென்றால் இடங்களை வளைப்பது, மிரட்டி அதை அடிமாட்டு விலைக்கு வாங்குவது. அதில் மிக கெட்டிக்காரர் வீரமணி. வேலூரில் மையமாக உள்ள நிலம் வளைப்பு விவகாரத்தில் அமைச்சர் கே.சி.வீரமணி நேரடியாக சம்பந்தப்பட்டார். இதுதொடர்பான புகாரை விசாரித்த உயர்நீதிமன்ற நீதியரசர்கள், அவர் மீது நிலம் தொடர்பான விவகாரத்தில் அமைச்சர் வீரமணியின் தலையீடு தனிப்பட்ட முறையில் இருப்பதாலும், அமைச்சர் என்ற முறையில் இல்லை என்பதாலும் அவர் மீதான புகாரில் நடவடிக்கை எடுக்க அரசு அனுமதி தேவையில்லை என்று தீர்ப்பு வழங்கினர். இதுதான் வீரமணி வரலாறு.

இந்த விவகாரத்தில் சிக்கிய வீரமணி வீடியோ வெளியானது. தனது கல்லூரிக்காக மணல் கொள்ளை, ஏலகிரி பென்சிங் குடோன், சட்டமீறல்களை பட்டவர்த்தனமாக செய்வதில் கைதேர்ந்தவர்தான் இந்த வீரமணி. அப்படிப்பட்ட வீரமணியை இந்த தேர்தலில் நீங்கள் நிராகரிக்க வேண்டுமா, வேண்டாமா? இந்த தேர்தலில் தோற்கடிக்க வேண்டுமா, வேண்டாமா? இப்போது தேர்தல் நேரம் என்பதால் சிறுபான்மையினருக்கு காவலாக இருப்போம் என்று கூறுகிறார்கள். நாடாளுமன்றத்தில் முத்தலாக் சட்டம், சிஏஏ குடியுரிமை திருத்த சட்டம் ஆகியவற்றுக்கு ஆதரவாக வாக்களித்தவர்கள் அதிமுக எம்.பி.க்கள். மாநிலங்களவையில் அதிமுக, பாமக உறுப்பினர்கள் இருக்கின்றனர்.

அவர்கள் அனைவரும் இந்த சட்டங்களுக்கு எதிர்த்து வாக்களித்து இருந்தால் அச்சட்டங்கள் நிறைவேறியிருக்காது. மாநிலங்களவையில் சிஏஏ சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்த அதிமுக எம்பிக்கள், பாமக எம்பிக்கள் பெயர் யார், யார் என்று கேட்டீர்களானால், அதி.மு.க. எம்பிக்கள் 10 பேர். எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம், ஏ.சந்திரசேகர், முகமதுஜான், முத்துக்கருப்பன், ஏ.நவநீதகிருஷ்ணன், சசிகலா புஷ்பா, ஏ.கே.செல்வராஜ், வைத்திலிங்கம், விஜயகுமார், விஜிலாசத்தியானந்த் ஆகியோர்.

பாமகவின் ஒரே எம்பி, அன்புமணி. இந்த 11 பேரும் மத்திய அரசின் சிஏஏ சட்டத்தை ஆதரிக்காமல் ஓட்டு போட்டிருந்தால் இந்த சட்டம் நிறைவேறியிருக்காது. குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை ஆதரித்து வாக்களித்தவர்கள் 125 பேர். எதிர்த்தவர்கள் தி.மு.க., காங்கிரசை சேர்ந்த 105 பேர். ஆதரித்து வாக்களித்த 125 பேரில் 11 பேர் அதி.மு.க., பாமகவை சேர்ந்தவர்கள். இவர்கள் எதிர்த்து இருந்தால் சட்டம் நிறைவேறியிருக்காது.

அதனால், நான் பகிரங்கமாக குற்றம்சாட்டுகிறேன். இன்று நாடு முழுவதும் சிறுபான்மையினர் துன்பத்திற்கு முக்கிய காரணமே அதிமுகவும், பாமகவும்தான். பழனிசாமியும், ராமதாசும்தான் காரணம். இப்போது தேர்தல் என்பதால் நாடகம் போடுகின்றனர். சிஏஏ சட்டத்திருத்தத்தை எதிர்த்து பலமுறை போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்தியும், 2 கோடி கையெழுத்துகள் பெற்றும் ஜனாதிபதியிடம் கொடுத்திருக்கிறோம். எனவே, இப்போது உறுதியுடன் கூறுகிறேன். நாம் தான் ஆட்சிக்கு வர போகிறோம். ஆட்சிக்கு வந்தவுடன் குடியுரிமை சட்டத்தை தமிழகத்தில் அனுமதிக்கமாட்டோம்.

அதேபோல், மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்கள் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை ஒழித்து கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு துணை நிற்கும் வேளாண் சட்டங்களை ஆதரித்தது அதிமுக, பாமக. இப்போது தேர்தலுக்காக வேளாண் சட்டங்களையும் அனுமதிக்க மாட்டோம் என்று பொய் சொல்கிறார்கள். அதனால்தான் நாம் தேர்தல் அறிக்கையில் சொல்லியிருக்கிறோம். நாம் ஆட்சிக்கு வந்தவுடன் சட்டசபையில் முதல் தீர்மானமாக வேளாண் சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று நான் வாக்குறுதி அளிக்கிறேன்.

நீர்நிலைகள் இயற்கை வளங்களை பாதுகாக்கவும், கண்காணிக்கவும் 2 ஆயிரம் இளைஞர்கள் நியமிக்கப்படுவர். சாலைகள், மேம்பாலங்களை கண்காணிக்கவும் 75 ஆயிரம் சாலை பணியாளர்கள் நியமிக்கப்படுவர். அறநிலையத்துறையில் 25 ஆயிரம் இளைஞர்கள், திருக்கோயில் பணியாளர்களாக நியமிக்கப்படுவர். 25 ஆயிரம் மக்கள் நலப்பணியாளர்கள் நியமிக்கப்படுவார்கள். 1 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார். அதைத்தொடர்ந்து, வேலூர் மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் காட்பாடி துரைமுருகன், அணைக்கட்டு நந்தகுமார், வேலூர் கார்த்திகேயன், கே.வி.குப்பம் சீத்தாராமன், குடியாத்தம் அமலு ஆகிய 5 தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து வேலூர் அடுத்த ஊசூரில் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்தார்.

* சட்டம்-ஒழுங்கு பிரச்னைகள் இரும்புக்கரத்தால் அடக்கப்படும்

வேலூரில் மு.க.ஸ்டாலின் மேலும் பேசுகையில், ‘‘தமிழகத்தில் இன்று சட்டம்- ஒழுங்கு பிரச்னை அதிகம் உள்ளது. பொல்லாத ஆட்சிக்கு பொள்ளாட்சியே சாட்சி. 200க்கு மேலான இளம்பெண்களை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்து, மிரட்டி கொடுமைப்படுத்தி உள்ளனர். 2018ம் ஆண்டு 7 வயது சிறுமியை சிதைத்துவிட்டார்கள். காவல்துறையின் உயர்பதவியில் உள்ள பெண் எஸ்பிக்கே பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளனர். அதை நடத்தியது யார் என்றால் தமிழக அரசின் சிறப்பு டிஜிபிதான். இந்த கூட்டத்தின் வாயிலாக நாட்டுக்கு தெரிவிப்பது, விரைவில் சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படும். காவல்துறைக்கு முழு சுதந்திரத்தை இந்த ஸ்டாலின் தருவேன்’’ என்று பேசினார்.

* 108 ஆம்புலன்ஸ்க்கு வழிவிட்ட மு.க.ஸ்டாலின்

வேலூர் அடுத்த ஊசூரில் நேற்று மாலை திமுக வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக 108 ஆம்புலன்ஸ் வாகனம் சைரன் ஒலித்தபடி கூட்டம் அருகே வந்தது. இதைப்பார்த்ததும் மாவட்ட திமுக செயலாளரும் அணைக்கட்டு வேட்பாளருமான நந்தகுமார், ஆம்புலன்ஸ் வருகிறது என்று மு.க.ஸ்டாலினிடம் கூறினார். இதை கவனித்து உடனடியாக பேச்சை நிறுத்திய மு.க.ஸ்டாலின் அந்த ஆம்புலன்ஸ்க்கு வழிவிடும்படி கூறினார். அதை ஏற்று அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான தொண்டர்கள் ஆம்புலன்ஸ்க்கு வழிவிட்டனர். ஆம்புலன்ஸ் மு.க.ஸ்டாலினை கடந்தபோது, இந்த 108 ஆம்புலன்ஸ் திட்டத்தை கொண்டு வந்தவர் கலைஞர் தான். ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு வழிவிட்ட திமுக தொண்டர்களுக்கு நன்றி. இது தான் திமுக என்றார். இதை கேட்டதும் அங்கு திரண்டிருந்தவர்கள் ஆரவாரம் செய்தனர்.

Related Stories:

More
>