அதிமுக மா.செ வேட்பாளருக்கு அமைச்சர் ‘சைலண்ட் டார்ச்சர்’: சிவகங்கை அதிமுக ‘டமார்’

சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி தவிர மற்ற 3 சட்டமன்ற தொகுதிகளுக்கும் அதிமுக வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். சிவகங்கை தொகுதியில் கடந்த முறை போட்டியிட்டு வென்ற அமைச்சர் பாஸ்கரனுக்கு இம்முறை சீட் வழங்கவில்லை. அவருக்கு பதிலாக மாவட்டச் செயலாளர் செந்தில்நாதனுக்கு சீட் வழங்கப்பட்டது. இதனால் அமைச்சர் மற்றும் ஆதரவாளர்கள் கடும் ஆத்திரத்தில் உள்ளனர். தன் கூடவே வலம் வந்த செந்தில்நாதன், தலைமையிடம் பக்குவமாக காய் நகர்த்தி, தனக்கு எதிராக குழி பறித்து விட்டதாக அமைச்சர் புலம்பியவண்ணம் உள்ளார். சீட் அறிவிக்கப்பட்டபோது அமைச்சரின் ஆதரவாளர்கள் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

‘‘ஆறு மாதமாக பார்த்த வேலை எல்லாம் போச்சே... தனது மகனுக்கு கூட சீட் வழங்கியிருக்கலாமே’’ என பார்ப்போரிடம் எல்லாம் புலம்பி வருகிறாராம்.  இதுபோதாதென்று தேர்தல் பிரசாரத்துக்காக சிவகங்கை வந்த முதல்வர் எடப்பாடி, அமைச்சர் பாஸ்கரனை கண்டுகொள்ளவே இல்லையாம். பிரசார வேனில் கூட ஏற்றவில்லையாம். இதனால் மேலும் அப்செட்டில் உள்ளார். இதனால் வேட்பாளருடன் பிரசாரத்துக்கு செல்வதையே தவிர்த்து வருகிறாராம். சீட் கிடைக்காத கொந்தளிப்பை அவ்வப்போது அமைச்சர் மற்றும் அவரது ஆதரவாளர்கள், ‘‘வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல’’ வெளிப்படுத்தி வருவதால், இவர்களை சமாளிக்கவே வேட்பாளர் செந்தில்நாதனுக்கு நேரம் போதவில்லையாம்.

ஏற்கனவே இபிஎஸ் - ஓபிஎஸ், அமமுக என அதிமுக நிர்வாகிகள் பிரிந்து கிடக்க, தற்போது மாவட்டத்தில் அமைச்சர் - மாவட்டச் செயலாளர் இரு பிரிவாக கிடப்பதால் செந்தில்நாதனுக்கு நிலைமை சரியில்லை என்று அதிமுகவினரே பேசிக் கொள்கின்றனர். கூட்டணி பலம் இல்லாதது, அமைச்சர் மற்றும் சொந்த கட்சி நிர்வாகிகளின் குடைச்சல் என பல தரப்பு டார்ச்சரால், பேசாமல் ஏற்கனவே கேட்டிருந்த காரைக்குடி தொகுதியில் எப்படியாவது தலைமையிடம் பேசி சீட் வாங்கியிருக்கலாம். அல்லது நிற்காமலே இருந்திருக்கலாம் என தனது ஆதரவாளர்களிடம் புலம்புகிறாராம் செந்தில்நாதன்.

Related Stories:

>