×

அறப்போர் இயக்க ஒருங்கிணைப்பாளர் மீதான வழக்கு ரத்து: சட்டமீறல் என போலீசுக்கு கண்டிப்பு: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: ஏரி மீது  காவல் நிலையம் கட்டப்பட்டுள்ளதாக புகார் தெரிவித்த அறப்போர் இயக்க ஒருங்கிணைப்பாளர்  ஜெயராமன் மீதான  வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை அருகே அமைந்துள்ள செம்மஞ்சேரி காவல் நிலையம் தாமரைக்கேணி என்ற ஏரியின் மீது கட்டப்பட்டுள்ளதாக அறப்போர் இயக்க ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன் வெங்கடேசன் புகார் தெரிவித்திருந்தார்.

இதுதொடர்பாக காவல் நிலையம் முன்பாக பேசி ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார். இதையடுத்து அவர் மீது அத்துமீறி நுழைதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளில் செம்மஞ்சேரி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.  இந்த வழக்கில் ஆலந்தூர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ஜெயராமன் வெங்கடேசன் உயர் மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மனுவில், ஏற்கனவே சென்னை உயர் நீதிமன்றம் நீர்நிலைகளை ஆக்கிரமிப்பாளர்கள் மீது  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளதாகவும், ஆனால் அந்த உத்தரவையும் மீறி காவல் நிலையம் அமைக்கப்பட்டதை வெளிப்படுத்தினேன்.

அதற்காக பழிவாங்கும் நோக்கத்துடன் தொடரப்பட்ட இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருந்தார். இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி, அறப்போர் இயக்க ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார். நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டும் என்ற அடிப்படையிலேயே மனுதாரர் புகார் தெரிவித்ததற்கு அவர் மீது வழக்குப்பதிவு செய்தது, சட்டவிதிமீறல் என நீதிபதி உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

Tags : Charity Movement ,ICC , highCourt
× RELATED ஐசிசியின் மார்ச் மாதத்திற்கான சிறந்த...