×

விவசாயிகளை போல் மீனவர்களுக்கு ரூ.6000 உதவித்தொகை: கேரளாவில் தேர்தல் பிரச்சாரத்தில் மத்தியமைச்சர் ராஜ்நாத் சிங் தகவல்.!!!

திருவனந்தபுரம்: விவசாயிகளை போல் மீனவர்களுக்கும் ரூ.6000 உதவித்தொகை வழங்கப்படும் என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். தமிழகம், கேரளா, புதுச்சேரி, மேற்குவங்கம், அசாம் ஆகிய மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் பிரசாரம் தீவிரம் அடைந்து வருகிறது. தமிழகம், புதுச்சேரியைப் போல் கேரளாவிலும் ஏப்ரல் 6-ம் தேதி சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. சட்டமன்ற தேர்தலில் கேரள மாநிலத்தில் மும்முனை போட்டி நிலவி வருகிறது. ஆட்சியை தக்க வைக்க கம்யூனிஸ்ட் கட்சியும், மாநிலத்தில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று பாஜக, காங்கிரஸ் ஆகிய 2 தேசிய கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், கேரளாவில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான ராஜ்நாத்சிங், விவசாயிகளுக்கு ஆண்டு தோறும் 6 ஆயிரம் ரூபாய் உதவித்தொகையை மத்திய அரசு வழங்கி வருகிறது. இந்தப் பணம் நேரடியாக அவர்களுடைய வங்கிக் கணக்கில் சேர்க்கப்பட்டு வருகிறது. விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வரும் 6 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை இனி 2 கோடி மீனவர்களுக்கும் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

மீனவர்களுக்கும் இதேபோன்ற திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி, மீன்வளத்துறை அமைச்சரிடம் கேட்டிருக்கிறார். மேற்குவங்கம், புதுச்சேரி மாநில பாஜக தேர்தல் அறிக்கைகளிலும் மீனவர்களுக்கான உதவித்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. மீன்வளத்துறை அமைக்கப்பட்டு இருக்கின்ற விவரம் கூட காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு தெரியவில்லை. 2019-ம் ஆண்டிலேயே இந்த துறை உருவாக்கப்பட்டுவிட்டது. கேரளா மாநில தங்கக்கடத்தல் வழக்கை மத்திய புலனாய்வு அமைப்புகள் விசாரிக்கக் கூடாது என்று கேரள மாநில அரசு கூறுவது சரியானது அல்ல என்றும் தெரிவித்தார்.


Tags : Minister ,Rajnath Singh ,Kerala , Rs 6,000 allowance for fishermen as well as farmers: Union Minister Rajnath Singh informs during election campaign in Kerala. !!!
× RELATED அமைச்சர் ராஜ்நாத் சிங் போன்ற நிதானமான...