×

நாசரேத்தில் குழிதோண்டிய கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் பலி: புதையல் எடுப்பதற்காக நரபலி கொடுக்க திட்டம்?..போலீசார் தீவிர விசாரணை

நாசரேத்: நாசரேத்தில் புதையல் எடுக்க தோண்டிய குழியில் விஷவாயு தாக்கியதில் சென்னை மீன்வளக்கல்லூரி மாணவர் உட்பட 2 பேர் இறந்த சம்பவத்தில் புதையல் எடுப்பது என்ற பெயரில் நரபலி கொடுக்க திட்டமிடப்பட்டதா? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தோண்டப்பட்ட குழிக்குள் இருந்து பூஜைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் அருகே திருவள்ளுவர் காலனியைச் சேர்ந்தவர் முத்தையா (65). லேத் பட்டறை காவலாளி. இவரது மகன்கள் சிவமாலை (40), சிவவேலன் (37). சிவமாலை நாசரேத் இந்து முன்னணி பொருளாளராக உள்ளார்.

இவரது வீட்டு பின்புறம் புதையல் இருப்பதாகக் கிடைத்த தகவலின் பேரில் சிவமாலை, சிவவேலன் ஆகியோர் கடந்த 6 மாதங்களாக 40 அடி ஆழத்துக்கு பள்ளம் தோண்டியுள்ளனர். மேலும் 7 அடியில் பக்கவாட்டில் சுரங்கப்பாதை அமைக்கும் பணியில் ஈடுபட்டனர். நேற்று இவர்களுடன் சாத்தான்குளம் பன்னம்பாறையைச் சேர்ந்த மணிகண்டன் மகன் நிர்மல் கணபதி (17), ஆழ்வார்திருநகரி ஆலமரத்தான் மகன் ரகுபதி (47) ஆகியோரும் சுரங்கப்பாதை அமைக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் 4 பேரையும் விஷ வாயு தாக்கியதாகக் கூறப்படுகிறது. அவர்களுக்கு தற்செயலாக தண்ணீர் கொண்டு சென்ற சிவவேலனின் மனைவி ரூபா மயங்கி விழுந்துள்ளார். அவரை அக்கம்பக்கத்திர் மீட்கச் சென்ற போது, பக்கவாட்டு சுரங்கப்பாதையில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு 4 பேர் மயங்கி கிடப்பது தெரியவந்தது. தகவலறிந்த சாத்தான்குளம் டிஎஸ்பி காட்வின் ஜெகதீஷ்குமார், நாசரேத் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி, வைகுண்டம் தீயணைப்பு நிலைய அலுவலர் முத்துக்குமார் மற்றும் வீரர்கள், சுரங்கப்பாதையில் மயங்கி கிடந்த 4 பேரையும் மீட்டனர்.

அவர்களில் ரகுபதி, நிர்மல் கணபதி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சிவவேலன், சிவமாலை ஆகியோர் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். போலீசார் விசாரணையில் ஆழ்வார்திருநகரியைச் சேர்ந்த ரகுபதி என்பவருக்கு கேரள மந்திரவாதியுடன் தொடர்பு இருந்தது தெரியவந்தது. அவர் தான் சிவமாலை, சிவவேலன் ஆகியோரிடம் இப்பகுதியில் புதையல் இருப்பதாக கேரள மந்திரவாதி கூறியதாக தெரிவித்துள்ளார். தோண்டப்பட்ட குழியில் பூஜை பொருட்களும் இருந்துள்ளன. எனவே புதையல் கிடைப்பதற்காக யாரேனும் நரபலி கொடுக்க 4 பேரும் திட்டமிட்டார்களா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சுரங்கப்பாதை தோண்டியதில் இறந்த நிர்மல் கணபதி என்பவர் சென்னை மீன்வளத்துறை கல்லூரியில் முதலாண்டு படித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் நாசரேத் வட்டாரத்தில் பரபரப்பையும், பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.

Tags : Nazareth , Two killed in Nazareth excavation, including college student
× RELATED தமிழகத்தை வஞ்சித்த பாஜவை வீட்டுக்கு அனுப்புவோம்