நடராஜன் சிறந்த பந்துவீச்சாளர் என்பதை கடைசி ஓவரில் எனக்கு உணர்த்திவிட்டார்: சாம் கரன் புகழாரம்..!

புனே: இந்திய அணி வீரர் நடராஜன் உண்மையில் சிறந்த பந்துவீச்சாளர்தான். கடைசி ஓவரில் அதை நிரூபித்துவிட்டார் என்று இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் சாம் கரன் தெரிவித்தார். புனேவில் நேற்று நடந்த இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான கடைசி மற்றும் 3-வது ஒருநாள் ஆட்டத்தில் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் பேட் செய்த இந்திய அணி 48.2 ஓவர்களில் 329 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

330 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 322 ரன்கள் சேர்த்து 7 ரன்களில் தோல்வி அடைந்தது. ஒரு கட்டத்தில் இங்கிலாந்து அணி 200 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நிலையில், அணியைச் சரிவிலிருந்து மீட்டு வெற்றியை நோக்கி சாம் கரன்தான் அழைத்துச் சென்றார். 95 ரன்கள் சேர்த்து இறுதிவரை சாம் கரன் ஆட்டமிழக்காமல் இருந்து, ஆட்ட நாயகன் விருதையும் பெற்றார். இதில் கடைசி ஓவரில் வெற்றிக்கு 14 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், நடராஜன் வீசினார்.

இந்த ஓவரில் நடராஜன் வீசிய துல்லியமான யார்க்கர்கள், லைன் லென்த் பந்துவீச்சால் சாம் கரனால் பவுண்டரி மட்டுமே அடிக்க முடிந்தது. இதனால் கடைசிவரை போராடியும் 7 ரன்களில் இங்கிலாந்து அணி தோல்வி அடைந்தது. பின்னர் ஆட்ட நாயகன் விருது வென்ற சாம் கரன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: எங்களுக்கு இந்தப் போட்டியில் வெற்றி கிடைக்கவில்லை. ஆனால், நாங்கள் விளையாடிய விதம் எங்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறது. வெற்றி எனக்கு மிகவும் பிடிக்கும்.

ஆனால், இந்த ஆட்டத்தில் நான் விளையாடியது எனக்கு மிகப்பெரிய அனுபவமாக அமைந்தது. நீண்டகாலமாக இங்கிலாந்து அணிக்கு என்னால் பங்களிப்பு ஏதும் அளிக்க முடியவில்லை. இந்தப் போட்டியில் வென்று கொடுக்க வேண்டும் என நினைத்தேன். ஆனால், தோற்றுவிட்டோம். அதனால்தான் ஒவ்வொரு பந்தையும் நான் மிகவும் நிதானமாகக் கையாண்டேன். பந்தைச் சமாளித்து ஆடுவதற்குக் கடினமாக இருந்தது. நடராஜன் கடைசி ஓவரில் சிறப்பாகப் பந்து வீசினார். உண்மையில், தான் சிறந்த பந்துவீச்சாளர் என்பதைக் கடைசி ஓவரில் நிரூபித்துவிட்டார்.

புவனேஷ்வர் குமார் அற்புதமான பந்துவீச்சாளர். அவர் பந்துவீச்சில் ஏற்கெனவே ஆடியிருக்கிறேன். மைதானத்தைப் பொறுத்தவரை பேட்ஸ்மேன்க்ளுக்குச் சிறந்த ஆடுகளமாக இருந்தது. இந்திய அணியின் பேட்டிங் வரிசையிலும் பிரமிப்பாக இருக்கிறது. எனக்கு இந்த ஒருநாள் தொடர் அனுபவப் பாடமாக அமைந்தது. இந்தக் காலநிலையில் இன்னும் சில வாரங்களில் தொடங்க இருக்கும் ஐபிஎல் தொடரில் விளையாட ஆர்வத்துடன் இருக்கிறேன். இவ்வாறு சாம் கரன் தெரிவித்தார்.

Related Stories:

>