எங்கள் ஆட்சியில் கட்டாயம் சிறு, குறு தொழில்களை ஊக்குவிப்போம்..! மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பிரச்சாரம்..!

கோவை: சிறு, குறு தொழில்களை ஊக்குவிப்போம் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பிரச்சாரத்தின் போது தெரிவித்தார். மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தான் போட்டியிடும் கோவை தெற்கு தொகுதியின் கீழ் வரும் கோவை பாரதி பார்க், என்.எஸ்.ஆர். சாலை, ஓஸ்மின் நகர், சிவானந்தா காலனி, ஆறுமுக்கு, சித்தாபுதூர் உட்பட பல்வேறு பகுதிகளுக்கும் திறந்த வேனில் சென்று பிரச்சாரத்தில் ஈடுபட்டார். பிரச்சாரத்தின்போது பொதுமக்கள் மத்தியில் அவர் பேசியதாவது; நான் மக்கள் நீதி மய்யம் கட்சியைத் தொடங்கும்போது அடுத்த அமாவாசை தாண்டாது என்றார்கள்.

தற்போது பவுர்ணமியாய் ஜொலித்துக் கொண்டிருக்கிறது மக்கள் நீதி மய்யம். இனிவரும் நாட்களில் கோவை தெற்கு தொகுதியின் முகமாக நான் இருப்பேன். இத்தொகுதியையும், கோவை நகரத்தையும் இந்திய அளவில் திரும்பிப் பார்க்க வைக்க வேண்டியது எனது கடமை. ஒவ்வொரு வார்டிலும் ஒரு அலுவலகம் அமைப்பது என்றால், அந்தந்த வார்டுகளில் உங்களது பிரச்சினைகளைக் கேட்க மக்கள் நீதி மய்யம் கட்சியினர் இருப்பார்கள். அவர்கள் மூலமாக எனக்கு செய்தி வந்தடையும். தொகுதி மக்கள் எனக்கு கடிதம் எழுதும் வகையில் விரைவில் உள்ளூர் முகவரி ஒன்றை மக்களுக்கு அறிவிப்பேன். மக்களின் வீடுகளில் சிறு விளக்காக எரிவது எனது லட்சியம். சிறு, குறு தொழில்களை ஊக்குவிக்க உள்ளோம்.

வேலைவாய்ப்புகளை நிச்சயமாக பெருக்குவோம். 50 லட்சம் வேலைவாய்ப்புகளை தர உள்ளோம். தமிழகத்தின் ஒவ்வோர் ஊரிலும் பொதுவாக குடிநீர், திறந்தவெளி சாக்கடை, எங்கு பார்த்தாலும் குப்பை, குப்பைக் கிடங்குகள், அவற்றால் ஏற்படும் சுகாதார சீர்கேடுகள் காணப்படுகின்றன. இப்பிரச்சினைகளுக்கு 100 நாட்களில் தீர்வு காணப்போகும் அதிசயத்தை மக்கள் பார்க்கப் போகிறீர்கள். குடிநீருடன் கழிவுநீர் கலந்து வருவது சாதாரண விஷயம் இல்லை. அந்த விஷத்தை பரவ விட்டு வேடிக்கை பார்ப்பவர்கள் அகல வேண்டும். ஒரு புதிய மாற்றத்தை பொதுமக்கள் உருவாக்க வேண்டும். இந்தியாவின் தொழில் நகரமாக இருந்த கோவை, தற்போது வெறும் நகரமாக மாறி விட்டது. மீண்டும் அந்த உன்னத நிலைக்கு உயர்த்த நான் பாடுபடுவேன். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories:

>