வாக்குறுதிப்படி குடிநீர் பிரச்சனையை தீர்க்கவில்லை!: அமைச்சர் வெல்லமண்டி நடராஜனை முற்றுகையிட்டு பொதுமக்கள் வாக்குவாதம்..!!

திருச்சி: திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதியில் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் வாக்கு சேகரிக்க செல்லும் இடங்களில் பொதுமக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபடுவது தொடர்கதையாகி வருகிறது. திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளராக சுற்றுலா துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் போட்டியிடுகிறார். தினந்தோறும் திருச்சி கிழக்கு தொகுதியில் அதிமுக கூட்டணி கட்சியினருடன் வேட்பாளர் வெல்லமண்டி நடராஜன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றார். கடந்த சனிக்கிழமை அன்று சஞ்சய் காந்தி நகரில் வாக்கு சேகரிக்க சென்ற அவரை பொதுமக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் இன்று காலை திருச்சி டி.வி.எஸ். டோல்கேட் உலகநாதபுரத்திற்கு வாக்கு சேகரிக்க சென்ற அமைச்சர் வெல்லமண்டி நடராஜனை அப்பகுதி மக்கள் முற்றுகையிட்டனர். குடிநீர் பிரச்சனையை தீர்ப்பதாக கடந்த தேர்தலில் வாக்குறுதி அளித்துவிட்டு இதுவரை தீர்வு காணாதது குறித்து அமைச்சரிடம் பொதுமக்கள் சரமாரியாக கேள்வி எழுப்பினர். மேலும் ஏற்கனவே இந்த தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பிறகு வெல்லமண்டி நடராஜன் இந்த பகுதியில் வந்து குறைகளை கேட்கவில்லை எனவும், சாக்கடை, குடிநீர் போன்ற எதுவும் இல்லாமல் தவித்து வருவதாகவும் கூறி அப்பகுதியை சேர்ந்தவர்கள் வெல்லமண்டி நடராஜன் மற்றும் அதிமுகவினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அதிமுகவினருக்கும் பொதுமக்களுக்கும் இடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தள்ளுமுள்ளுவுக்கு இடையே அமைச்சர் வெல்லமண்டி நடராஜனை அதிமுகவினர் மீட்டு அனுப்பி வைத்தனர். இதனால் வெல்லமண்டி நடராஜன் வாக்கு சேகரிப்பில் இருந்து பாதியிலேயே புறப்பட்டு சென்றார்.

Related Stories:

>