×

ஆணையத்தின் நிலை என்ன?.. அரசியல் ஆதாயமே அதிமுக நோக்கமா?.. 5 ஆண்டுகள் ஆகியும் விலகாத ஜெயலலிதா மரண மர்மம்.!!!

சென்னை: மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறிய ஓ.பன்னீர்செல்வம் 5 ஆண்டுகளுக்கு பிறகு திடீரென தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டுள்ளார். ஓபிஎஸ் புகார் கூறிய போதெல்லாம் மவுனமாக இருந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி தற்போதைய தேர்தல் பிரச்சாரத்தில் ஜெ. மரணம் பற்றி பேசியுள்ளார். ஆனால் ஆறுமுகசாமி ஆணையம் அமைக்கப்பட்டு 4 ஆண்டுகள் ஆகியும் ஜெ. மரணம் பற்றிய மரணம் மட்டும் இதுவரை விலகவில்லை. உடல்நலக்குறைவால் 75 நாட்கள் சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற ஜெயலலிதா 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி இரவு உயிரிழந்தார். அன்று இரவே முதலமைச்சராக பதவியேற்றுக்கொண்ட தற்போதைய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சுமார் 2 மாதங்களுக்கு பிறகு திடீரென ஜெலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக சந்தேகத்தை கிளப்பினார்.

அதுவும் 2017 பிப். சசிகலாவுக்காக முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வைக்கப்பட்டதால் ஜெயலலிதா நினைவிடத்தில் தியானம் செய்த ஓ.பன்னீர்செல்வம், செயலலிதா மரணத்தில் உள்ள மர்மத்தை கண்டறிய வேண்டும் என்கிறார். முதலமைச்சராக 2 மாதம் இருந்த போது ஜெயலலிதா மரணம் பற்றி வாய் திறக்காத ஓ.பன்னீர்செல்வம் திடீரென மர்மம் என கூறியது கடும் விமர்சனத்தையும் ஏற்படுத்தியது. ஜெயலலிதா மரண சர்ச்சை பற்றியெல்லாம் கண்டுகொள்ளாமல் 2017 பிப்ரவரி 16-ம் தேதி தமிழக முதலமைச்சராக பதவியேற்ற எடப்பாடி பழனிசாமி ஓபிஎஸ் அணியை ஓரம் கட்டி சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபித்தார். இதனால் அடுத்து வந்த நாட்களில்  ஜெயலலிதா மரணம் தொடர்பான குற்றச்சாட்டுகளை ஓ.பன்னீர்செல்வம் அணியினர் அதிகப்படுத்தினர்.

ஜெயலலிதாவுக்கான சிகிச்சைகள் பற்றி அப்போலோ மருத்துவமனை அளித்த விளக்கங்களையும் ஓ.பன்னீர்செல்வம் அணியினர் ஏற்க மறுத்தனர். ஓ.பன்னீர்செல்வத்துடன் இருந்த அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் அப்போலோ மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்களின் அறிக்கைகளால் ஜெயலலிதா மரணம் தொடர்பான சந்தேகம் வலுத்துள்ளதாக கூறினார். குற்றச்சாட்டுகளை கூறியதோடு நிற்காமல் ஜெயலலிதா மரணம் பற்றி நீதி விசாரணை நடத்த கோரி போராட்டத்திலும் ஈடுபட்டார் ஓ.பன்னீர்செல்வம். தனது ஆதரவாளர்களுடன் உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட ஓ.பன்னீர்செல்வம் ஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்றார். வெறுமென குற்றச்சாட்டுக்களை கூறிய போதெல்லாம் அமைதி காத்த அப்போதைய அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம் போராட்டத்தில் குதித்ததும், பதிலடி கொடுக்க தொடங்கினர்.

ஜெயலலிதா மரணம் பற்றிய மர்மம் கண்டறியப்பட்டால் முதல் குற்றவாளியாக ஓ.பன்னீர்செல்வம் தான் சிக்குவார் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார். ஆனால் விஜயபாஸ்கர் தான் முதல் குற்றவாளியாக இருப்பார் என்று அவருக்கு பதிலடி கொடுத்த ஓ.பன்னீர்செல்வம், அப்பலோ மருத்துவமனையில் ஆட்களை நியமித்து விஜயபாஸ்கர் உளவு பார்த்ததாகவும், பகிர் குற்றச்சாட்டை முன்வைத்தார்.  அதிமுக இரு அணிகளாக பிளவுப்பட்டிருந்த போது அறிவிக்கப்பட்ட ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஜெ. சவப்பெட்டியில் இருப்பது போன்று உருவத்தை செய்து பிரச்சாரத்துக்கு பயன்படுத்தினார் அமைச்சர் மா.பா.பாண்டியராஜன். இதற்காக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஜெயலலிதா மரணம் தொடர்பாக பரஸ்பர குற்றச்சாட்டுகளை கூறிக்கொண்டே எடப்பாடி ஓ.பன்னீர்செல்வம் அணிகள் ஒருபுறம் இணைப்புக்கான பேச்சுவார்த்தையை நடத்தியது பின்னர் தான் தெரிய வந்தது.

எதிரும், புதிருமான இருந்தவர்கள் 2017-ம் ஆண்டு செப்டம்பரில் ஒன்று சேர்ந்தனர். எடப்பாடி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் அணிகள் ஒன்று சேர்ந்தவுடனேயே ஜெ. மரணம் மாற்றி அமைச்சர்கள் ஆளாளுக்கு பேச தொடங்கினர். அப்பலோ மருத்துவமனையில் ஜெயலலிதாவை அமைச்சர்கள் யாருமே பார்க்கவில்லை என்று திண்டுக்கல் சீனிவாசன் போட்டு உடைக்க, நாங்கள் பார்த்தோம் என்றார் செல்லூர் ராஜூ. இல்லை இல்லை சசிகலாவுக்கு பயந்தே பொய் சொன்னோம் என்றார் அமைச்சர் கே.சி.வீரமணி. அணிகள் இணைந்தவுடன், ஜெயலலிதா மரணம் பற்றி நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டது. ஆனால் அது ஏமாற்று வேலை என்றும் எந்த காலக்கெடுவும் இல்லாமல் அமைக்கப்பட்டுள்ள ஆணையத்தால் எந்த பலனும் இல்லை என்றும் எதிர்க்கட்சிகள் விமர்சித்தன.

எதிர்க்கட்சிகளின் விமர்சனத்தை உண்மையாக்கும் வகையில் ஆணையம் அமைக்கப்பட்டு சுமார் 4 ஆண்டுகள் ஆன போதும் இதுவரை ஜெயலலிதா மரணம் பற்றிய மர்மம் விலகவில்லை. நீதி விசாரணை வேண்டும் என்று போர்க்கொடி தூக்கிய ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆணையம் பல முறை சம்மன் அனுப்பிய போதும் ஒரு முறை கூட அவர் ஆஜராகவில்லை. ஜெ. மரணம் பற்றிய சர்ச்சை உச்சத்தில் இருந்த போதெல்லாம் மவுனம் காத்து வந்த முதலமைச்சர் எடப்பாடி திடீரென தேர்தல் பிரச்சாரத்தில் அது பற்றி வாய் திறந்துள்ளார். திமுக போட்ட வழக்குகளே ஜெ. மரணத்துக்கு காரணம் என்று குற்றம் சாட்டினார். தேர்தல் தோல்வி பயத்தால் திடீரென ஜெயலலிதா மரணம் பற்றி பேசும் எடப்பாடி பழனிசாமி திமுக மீது வீண் பழி போடுவதாக மு.க.ஸ்டாலின் பதிலடி கொடுத்தார். முடிந்தால் வழக்கு போடுங்கள் என்றும் அவர் எடப்படிக்கு சவால் விடுத்தார்.

மு.க.ஸ்டாலின் சவால் விடுத்ததும் ஜெ. மரணம் பற்றி பேசுவதையே நிறுத்திவிட்டார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. ஜெ. மர்ம மரணம் பற்றி விசாரணை கோரிய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் தனக்கு ஜெ.மரணத்தில் சந்தேகமே இல்லை என்று அந்தர்பலடி அடித்துவிட்டார். சசிகலாவுக்கு களங்கம் ஏற்படுவதே தடுக்கவே விசாரணை கோரியதாவும், ஓ.பன்னீர்செல்வம் கூறியது அவரது ஆதரவாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மொத்தத்தில் ஜெயலலிதா மரணத்தை அதிமுக தலைவர்கள் தங்களது சொந்த அரசியலுக்கு மட்டுமே பயன்படுத்தி வருவது அம்பலமாகி இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.


Tags : AIADMK , What is the status of the commission? .. Is the AIADMK's political gain the purpose?
× RELATED அதிமுக தேர்தல் பிரசாரத்தின்போது வாகன...