×

மக்களால் வெறுக்கப்படும் கட்சி பாஜக-முன்னாள் முதல்வர் நாராயணசாமி ஆவேசம்

புதுச்சேரி : புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கார்த்திகேயன், உருளையன்பேட்டை தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கோபால் ஆகியோரை ஆதரித்து முன்னாள் முதல்வர் நாராயணசாமி நேற்று பிரசாரம் செய்தார். நெல்லித்தோப்பு லெனின் வீதி சந்திப்பில் பொதுமக்கள் முன்னிலையில் முன்னாள் முதல்வர் நாராயணசாமி பேசியதாவது: இந்த தேர்தல் மதவாத மற்றும், பிரிவினை வாத சக்திகளுக்கும் நாடு ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என்று நினைக்கும் சக்திகளுக்கும் இடையே நடக்கின்ற போர். இதில் மதசார்பற்ற அணி வெற்றி பெற்றால்தான் புதுவையில் அமைதி ஏற்படும். மதகலவரத்தை ஏற்படுத்துபவர்கள் தற்போது புதுவைக்கு நுழைந்திருக்கிறார்கள்.

கடந்த ஒரு மாத்திற்கு முன்பு எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கியும், அமைச்சர்களை மிரட்டியும் பாஜகவினர் ஆட்சிக்கு வருவதற்கு எல்லா முயற்சிகளையும் செய்தார்கள்.  நமக்கு பெரும்பான்மை இருந்தாலும் கூட பாஜகவால் நியமன செய்யப்பட்ட 3 எம்எல்ஏக்கள் மூலம் ஆட்சியை கவிழ்த்தார்கள். அவர்கள் இப்போது தேர்தல் நிற்கிறார்கள்.

அவர்களுடன் கூட்டாக என்ஆர் காங்கிரசும் அதிமுகவுடன் இருக்கிறது. கடந்த 5 ஆண்டுகளாக புதுவை அமைதியாக இருந்தது என்றால், அதற்கு திமுக - காங்கிரஸ் கூட்டணி ஆட்சிதான் காரணம். மூடப்பட்ட ரோடியர், பாரதி, சுதேசி பஞ்சாலைகளை திறக்க நடவடிக்கை எடுக்கிறோம். சுற்றுலா வளர வேண்டும். இதனால் வேலைவாய்ப்பு பெருகும். அதற்கான திட்டங்களை கொண்டு வந்துள்ளோம். புதுவையில் ஒரு பல்கலைக்கழகத்தை நிறுவியுள்ளோம்.   

 மேலும், விவசாய பல்கலைக்கழகம், மருத்துவ பல்கலைக்கழகம், சட்ட பல்கலைக்கழகத்தை நிறுவ உள்ளோம். வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்ற படிப்படியாக அனைத்து முயற்சியும் செய்து வருகிறோம். நாம் மாநில அந்தஸ்து பெற்றால்தான் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்களுக்கான அதிகாரத்தை கொடுக்க முடியும். பிரதமர் மோடி புதுவை வந்தபோது மாநில அந்தஸ்தை அறிவிப்பார், நிறைய நிதியை கொடுப்பார், மத்திய அரசிடமிருந்து வாங்கி கடனை தள்ளுபடி செய்வார்கள் என்று மக்கள் எதிர்பார்த்தனர்.

ஆனால், பிரதமர் ஒரு அறிவிப்பை கூட கொடுக்கவில்லை.  நிவர் புயல் தாக்கிய போது எதிர்க்கட்சியிலிருந்து யாராவது வெளியே வந்தார்களா? நூறு கி.மீ. வேகத்தில் நிவர் புயல் தாக்கிய போது பம்பரம்போல் சுழன்று அதிகாரிகளை வேலை வாங்கி மக்களின் துயரை துடைத்தோம். ஒருபுறம் கிரண்பேடி தொல்லை, இன்னோரு புறம் மத்திய அரசு நிதி கொடுக்காத நிலையிலும் திட்டங்களை நிறைவேற்றினோம். 2 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கொடுத்துள்ளோம். சுற்றுலா வளர்ச்சிக்கான திட்டங்களை நிறைவேற்றி உள்ளோம்.

 பாஜக, என்ஆர் காங்., அதிமுக ஆகிய கட்களின் கொள்கை என்ன? நான் ஏற்கனவே நின்று வெற்றி பெற்ற நெல்லித்தோப்பு தொகுதியில் பாஜக சார்பில் நிற்கும் வேட்பாளர் வாயை திறந்து பேசுகிறார்கள். அவர் வெற்றி பெற்று வந்தால் மக்களுக்கு பணிபுரிவேன் என சொல்கிறாரா? அந்த ேவட்பாளருக்கு அரசியல் தெரியுமா? எவ்வளவு நாள் அரசியல் செய்திருக்கிறார். இப்போது தேர்தல் களத்தில் இருக்கிறார். அதுமட்டுமல்ல, குறைந்த காலத்தில் எத்தனை கட்சி மாற முடியுமோ? அத்தனை கட்சி மாறி இருக்கிறார். திமுகவில் இருந்து காங்கிரசுக்கு வந்தார்.  

காங்கிரசில் இருந்து பாஜகவுக்கு சென்றார். புதுச்சேரி மாநில மக்களால் வெறுக்கப்படுகின்ற கட்சி பாஜக. கிறிஸ்தவர்கள், முஸ்லீம்கள், தலித்துகள், மீனவர்கள், பிற்படுத்தப்பட்டவர்கள், பழங்குடியினர், வியாபாரிகள், அரசு ஊழியர்கள் என அனைவரும் பாஜகவை வெறுக்கின்றனர். நெல்லித்தோப்பில் பாஜக சார்பில் நிற்கும் வேட்பாளரை தோற்கடிக்க வேண்டியது உங்களது (மக்கள்) கடமை. நெல்லித்தோப்பு தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கார்த்திகேயன், உருளையன்பேட்டை தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கோபால் ஆகியோருக்கு வாக்களித்து அமோக வெற்றி பெற வைக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Tags : Pajaka ,Principal Narayanasami , Puducherry: DMK candidate Karthikeyan will contest from Puducherry Nellithoppu constituency.
× RELATED தமிழ்நாடு பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யாவை தீவிரமாக தேடும் போலீசார்!