×

ஒடுகத்தூர் வனச்சரகத்தில் வனவிலங்குகள் தாகம் தீர்க்க தொட்டியில் தண்ணீர் நிரப்பும் பணி-வனத்துறையினர் நடவடிக்கை

அணைக்கட்டு : அணைக்கட்டு தாலுகாவுக்குட்பட்ட ஒடுகத்தூர் வனத்துறை கட்டுப்பாட்டில் கருத்தமலை காப்பு காடு, பருவமலை காப்புகாடு, சானாங்குப்பம் காப்புகாடு, ராசிமலை காப்புகாடு உள்ளிட்ட காடுகள் உள்ளன. இந்த காட்டுப்பகுதியில் உள்ள வன விலங்குகள் கோடை காலத்தில் தண்ணீர் குடிப்பதற்காக வனத்துறையினர் சார்பில் 18 தண்ணீர் தொட்டிகள் கட்டப்பட்டது.

தற்போது வெயில் அதிகரித்து வரும் நிலையில், வனப்பகுதியில் உள்ள பல தொட்டிகளில் தண்ணீர் நிரப்பப்படாமல் இருந்தது. இதனால் அந்த காட்டு பகுதியில் வசிக்கும் விலங்குகள் தண்ணீர் கிடைக்காமல் தவித்து வந்தது. இதனால் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து தொட்டிகளிலும் தண்ணீர் நிரப்ப வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்திருந்தனர். இதுகுறித்த செய்தி நேற்று முன்தினம் தினகரன் நாளிதழில் வெளியானது.

இதையடுத்து ஒடுகத்தூர் வனச்சரக அலுவலர் பாலாஜி உத்தரவின்படி, வனவர் பிரதீப்குமார் மற்றும் வனக்காப்பாளர்கள் நேற்று வனத்துறை கட்டுபாட்டில் தண்ணீர் நிரப்பப்படாமல் இருந்த தொட்டிகள் அனைத்திலும் டிராக்டர் மூலம் தண்ணீர் எடுத்து வந்து அந்த தொட்டிகளில் ஊற்றி நிரப்பினர். தொடர்ந்து சுழற்சி முறையில் ஒரு வாரத்திற்கு ஒரு முறை அல்லது தண்ணீர் காலியானதும் 15 நாட்களுக்கு ஒருமுறை கோடை காலம் முடியும் வரை தண்ணீர் நிரப்ப உத்தரவிடபட்டுள்ளது. மேலும்  தொட்டிகளில் தண்ணீர் காலியானதும் தகவல் தெரிவிக்கவும் வனக்காவலர்களுக்கு உத்தரவிட்டப்பட்டுள்ளது என வனத்துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.

Tags : Odugathur forest , Dam: Karuthamalai under the control of Odugathur Forest Department under Dam Taluka
× RELATED ஒடுகத்தூர் வனச்சரகத்தில்...