×

அரிமளம், திருமயம் பகுதியில் விளைநிலங்களில் குறுவை சாகுபடி அதிகரிப்பு-நீர்மட்டம் கிடுகிடுவென குறைவதால் அதிருப்தி

திருமயம் : அரிமளம், திருமயம் பகுதியில் 9 வருடங்களுக்குப் பிறகு குறுவை நெல் சாகுபடி நிலப்பரப்பு அதிகரித்துள்ள நிலையில் கிடுகிடுவென நீர்நிலைகளில் தண்ணீர் குறைந்து வருவதால் விவசாயிகள் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம், திருமயம் பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக பருவமழை பருவம் தவறி பெய்து வருகிறது. இதனால் சம்பா நடவுக்கு போதுமான நீர் ஆறு, கண்மாய்களில் இல்லாததால் கிணற்றுப்பாசனம் கொண்டு விவசாயம் செய்யும் விவசாயிகள் மட்டுமே விவசாயம் செய்து வருகின்றனர். இதனால் அரிமளம், திருமயம் பகுதியில் பருவத்தில் கூட விவசாயம் செய்ய போதுமான நீர் இல்லாததால் பல ஆயிரக்கணக்கான ஏக்கரில் உள்ள விளைநிலங்கள் தரிசாகி கருவேல மரங்கள் மண்டி காடுபோல் காட்சியளிக்கிறது.

இந்நிலையில் நடப்பு ஆண்டு பருவமழை கடந்த ஆண்டுகளை காட்டிலும் சற்று அதிகமாக பெய்தது. இதனால் விவசாயிகள் கண்மாய்களில் உள்ள நீரை பயன்படுத்தி சம்பா பருவ நெல் சாகுபடி செய்தனர். இதனிடையே விவசாயிகள் சற்றும் எதிர்பார்க்காத வகையில் கடந்த ஜனவரி மாதம் சுமார் ஒரு வாரம் காலம் பருவம் தவறி பெய்த மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் சம்பா நெற்பயிர்கள் நீரில் மூழ்கி அழுகி பெருத்த சேதத்தை விவசாயிகளுக்கு ஏற்படுத்தியது.

இது அரிமளம், திருமயம் பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தினாலும் கடந்த 9 ஆண்டுகளாக ஜனவரி மாதங்களில் நீரின்றி காணப்பட்ட பெரும்பாலான கண்மாய்களில் 80 சதவீதத்துக்கு மேல் நீர் இருந்தது. இதனால் கடந்த 9 ஆண்டுகளில் இல்லாத வகையில் விவசாயிகள் குறுவை நெல் சாகுபடி செய்ய ஆர்வம் காட்டி குறுவை நெல் சாகுபடி செய்துள்ளனர். உதாரணத்திற்கு கடந்த 2012 -13 ஆம் வருடம் 3773 ஹெக்டேரில் திருமயம் பகுதியில் குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்த ஆண்டுகளில் மழை சரிவர இல்லாததால் குறுவை நெல் சாகுபடி புறக்கணிக்கப்பட்டு சாகுபடி அளவுக்கு முற்றிலும் குறைந்தது. இந்நிலையில் நடப்பு ஆண்டு பெய்த எதிர்பாராத மழையால் கடந்த பிப்ரவரி மாதம் வரை திருமயம் பகுதியில் 2 ஆயிரத்து 865 ஹெக்டேர் அளவில் குறுவை நெல் சாகுபடி செய்ய விவசாயிகள் விளை நிலங்களை தயார் படுத்தி வைத்துள்ளனர்.

மேலும் மார்ச், ஏப்ரல் மாதத்தில் குறுவை நெல் சாகுபடி நிலப்பரப்பு எண்ணிக்கை அதிகரிப்பதால் 3ஆயிரம் ஹெக்டேர் வரை குறுவை நெல் சாகுபடி நிலப்பரப்பு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வேளாண்மை துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக அரிமளம், திருமயம் பகுதியில் வரட்சியான காலநிலை நிலவி வருகிறது. இதனால் நீர்நிலைகளில் உள்ள நீர் ஆவியாகி கிடுகிடுவென நீர்மட்டம் குறைந்து வருவதால் குறுவை நெல் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Arimalam ,Thirumayam , Thirumayam: Cultivation of paddy after 9 years in Arimalam, Thirumayam area
× RELATED பூச்சி மேலாண்மை குறித்து வேளாண்...