×

ஊட்டி எல்க்ஹில், கேர்ன்ஹில் வனப்பகுதியில் 4 ஏக்கரில் ஆயிரம் சோலை மரக்கன்றுகள் நடவு

ஊட்டி :ஊட்டி எல்க்ஹில், கேர்ன்ஹில் வனப்பகுதிகளில் வனத்துறை சார்பில் ஆயிரம் சோலை மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் ஆங்கிலேயர் ஆட்சி காலமான கடந்த 1840களில் எரிபொருள் தேவைக்காக கற்பூரம், சீகை, பைன் போன்ற வெளிநாட்டு மர வகைகளையும், அலங்கார செடிகளான உண்ணி, பார்த்தீனியம், லேண்டானா, கார்ஸ் முள் செடி, செஸ்ட்ரம் உள்ளிட்ட பல்வேறு வகையான வெளிநாட்டு தாவரங்களும் நடவு செய்யப்பட்டன.

தற்போது நீலகிரியில் இவை சுமார் 15 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில் வளர்ந்துள்ளன. இதனால், நீலகிரிக்கே உரித்தான தாவர இனங்கள் அழியத் துவங்கின. இவை நிலத்தடி நீர்மட்டத்தையும், மழைப்பொழிவையும் வெகுவாக பாதித்தன. கடந்த 30 ஆண்டுக்கு முன்பு வன கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டு நீலகிரியில் வெளிநாட்டு மரங்கள், தாவரங்கள் பயிரிட தடை விதிக்கப்பட்டது. வெளிநாட்டு செடிகளை அகற்றி விட்டு அதற்கு பதிலாக இந்தியாவை தாயகமாக கொண்ட மரங்கள், செடிகளை புல்வெளிகளை உருவாக்கவும், சோலைகளையும், புல்வெளிகளையும் பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தொடர்ந்து வனத்துறை சார்பில் சோலை மரங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் அவற்றை மீண்டும் நடவு செய்து பராமரிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவலாஞ்சி பகுதியில் சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்டத்தின் நிதியுதவியுடன் அவலாஞ்சியில் சுமார் 8 ஏக்கரில் பல்வேறு வகை சோலை மரங்கள் நடவு செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக ஊட்டி தெற்கு வனச்சரகத்திற்குட்பட்ட எல்க்ஹில் மற்றும் கேர்ன்ஹில் வனப்பகுதியில் 4 ஏக்கர் பரப்பளவில் ஆயிரம் சோலை மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளன.

இவற்றை மான்கள், காட்டுமாடு உள்ளிட்ட வனவிலங்குகள் சேதப்படுத்திவிடாத வகையில் பச்சை நிற வலையால் மூடப்பட்டு பனிப்பொழிவில் இருந்து காக்கும் வகையில் செடி,கொடிகளை கொண்டு பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளது. இவற்றை வனத்துைற ஊழியர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், நீலகிரி வன கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சோலை மரங்களின் எண்ணிக்கையை உயர்த்தும் நோக்கில் எல்க்ஹில், கேர்ன்ஹில் வனப்பகுதிகளில் 4 ஏக்கர் பரப்பளவில் சோலை மர கன்றுகள் நடவு செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. இவை மெதுவாக வளரும் தன்மை கொண்டது என்பதால் நடவு செய்து வளர்ப்பது சவாலானதாக உள்ளது, என்றனர்.

Tags : Forest of Elkhill, Cairnhill , Ooty: Thousands of oasis saplings have been planted and maintained on behalf of the Forest Department in the Elkhill and Cornhill forests of Ooty.
× RELATED கார், வேன் மோதி தீப்பிடித்து எரிந்தது