×

சிவகங்கை நகராட்சியில் சாலைகளில் தேங்கி நிற்கும் கழிவுநீர்-கால்வாய்களை முழுமையாக தூர்வார வலியுறுத்தல்

சிவகங்கை : சிவகங்கை நகராட்சியில் கழிவு நீர் கால்வாய்களை முழுமையாக தூர்வார வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
சிவகங்கை நகராட்சியில் 27 வார்டுகள் உள்ளன. சுமார் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு ரூ.23.5 கோடியில் பாதாள சாக்கடை திட்டத்திற்கான பணிகள் தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சி திட்டத்தின் கீழ் கடந்த 2007 மார்ச்சில் தொடங்கப்பட்டன.

இத்திட்டம் தற்போது வரை முழுமையாக முடிவடையாமல் உள்ளது. இந்நிலையில் ஏற்கனவே கழிவு நீர் செல்லும் வகையில் உள்ள கால்வாய்கள் அனைத்து இடங்களிலும் இருந்தன. சில இடங்களில் 10 அடி அகலம் வரையில் இருந்த இக்கால்வாய்கள் ஆக்கிரமிப்புகளால் தற்போது மிகச்சிறிய அளவிலான கால்வாய்களாக காட்சியளிக்கின்றன.

பல இடங்களில் கால்வாய்களே இல்லாத நிலையும் ஏற்பட்டுள்ளது. கழிவு நீர், மழை நீர் சென்று வந்த கால்வாய்கள் அனைத்தும் ஆக்கிரமிப்பு மற்றும் அடைபட்டு போயுள்ளதால் நகர் முழுவதும் பல இடங்களில் கழிவு நீர் செல்ல வழியில்லை. சிபி காலனி, கலெக்டர் அலுவலகம் அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகள், திரவுபதி அம்மன் கோவில் தெரு, மரக்கடை வீதி, தெப்பக்குளம் அருகே, பெருமாள் கோவில் அருகே கழிவு நீர் குளமாக காட்சியளிக்கிறது.

இக்கால்வாய்களில் அள்ளப்படாத குப்பைகள் மற்றும் பாலித்தீன் பைகளும் தேங்குவதால் கழிவு நீர் முற்றிலும் செல்ல முடியாத நிலையில் உள்ளது. மழை பெய்தால் மழை நீரோடு கழிவு நீரும் சாலைகளில் செல்கிறது. அரண்மனை எதிரே பஸ் ஸ்டாண்ட் வரையுள்ள பகுதிகளில் மழை பெய்தால் மழை நீரும், கழிவு நீரும் சேர்ந்து கடும் சுகாதாரக்கேட்டை ஏற்படுத்துகிறது.

வர்த்தகர்கள் கூறியதாவது: லேசான மழை பெய்தாலே சாலைகளில் மழை நீரோடு, கழிவு நீரும் சேர்ந்து செல்கிறது. பாதாள சாக்கடை தொட்டியில் இருந்து கழிவுநீர் பெருக்கெடுத்து சாலைகளில் ஓடுகிறது. நீர் வடிந்த நிலையில் கழிவுகள் கடைகள் முன்பும், சாலைகளில் படிந்தும் நிற்கிறது. இதன் மீது தான் வாகனங்கள் செல்ல முடியும். இதனால் அதிகப்படியான தூசி கிளம்புகிறது.

அரண்மனை வாசல் முன் புறம் சிறிது தூரம் வரை கால்வாய்களை தூர்வாரினர். பஸ் ஸ்டாண்ட் வரை தூர் வாருவதில்லை. பஸ் ஸ்டாண்டிற்கு முன் உள்ள பெட்ரோல் பங்க் முன்புறம் கால்வாய் அடைத்துள்ளது. கால்வாய்களை ஒரே நேரத்தில் முழுமையாக தூர்வாராமல் எப்போது பிரச்சினை ஏற்படுகிறதோ அப்போது வந்து பெயரளவிற்கு தூர் வாருகின்றனர். இதனால் அடிக்கடி கடை முன் உள்ள சிலாப்புகள் உடைக்கப்படுகிறது. நிரந்தரமாக பல அடி ஆழத்திற்கு தூர்வார வேண்டும் என்றனர்.

Tags : Sivagangai Municipality , Sivagangai: It has been demanded that the sewage canals in Sivagangai municipality should be completely drained.
× RELATED சிவகங்கையில் நவீன மின் மயானம் அமைக்க கோரிக்கை