×

நாசரேத்தில் பரிதாபம் புதையல் எடுக்க குழி தோண்டிய 2 பேர் மூச்சு திணறி பலி: இருவருக்கு தீவிர சிகிச்சை

நாசரேத்: நாசரேத்தில் புதையல் எடுப்பதற்காக குழி தோண்டி சுரங்க பாதை அமைத்ததில் மூச்சு திணறி இருவர் உயிரிழந்தனர். தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் அருகே திருவள்ளுவர் காலனியை சேர்ந்தவர் முத்தையா (65). நாசரேத்தில் லேத் பட்டறை காவலாளியாக உள்ளார். இவரது மகன்கள் சிவமாலை (40), சிவவேலன் (37). இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. முத்தையா வீட்டுக்கு பின்புறம் புதையல் இருப்பதாக கூறி கடந்த 6 மாதங்களாக குழி தோண்டி வந்துள்ளனர். தற்போது 40 அடி ஆழத்தில் குழி தோண்டப்பட்டுள்ளது. அதில் 7 அடி சுரங்கப்பாதை அமைத்துள்ளனர். குழி தோண்டப்பட்டிருப்பது தெரியாமல் இருப்பதற்காக அதில் தார் பாயை கொண்டு மூடி உள்ளனர்.

இந்நிலையில் நேற்று சிவமாலை, சிவவேலன் மற்றும் தொழிலாளர்களான சாத்தான்குளம் பன்னம்பாறையைச் சேர்ந்த நிர்மல் கணபதி (17), ஆழ்வார்திருநகரி ரகுபதி (47) ஆகியோர் சுரங்கம் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மாலையில் அவர்களுக்கு சிவவேலன் மனைவி ரூபா தண்ணீர் கொண்டு சென்றுள்ளார். அப்போது அவர்கள் திடீரென மூச்சுத்திணறி குரல் கொடுத்ததை கேட்டு அலறவே அக்கம் பக்கத்தினர் திரண்டனர். தகவலறிந்து நாசரேத் போலீசார் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

அதற்குள் ரகுபதி, நிர்மல்கணபதி ஆகியோர் இறந்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் சிவமாலை, சிவவேலன் ஆகியோரை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து நாசரேத் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



Tags : Nazareth , Two suffocate to death in Nazareth excavation pit
× RELATED நாசரேத் அருகே முதியவர் தற்கொலை