அதிமுக போட்டியிடும் தொகுதியில் உள்குத்து: கதிகலங்கும் வீரமான அமைச்சர்

ஜோலார்பேட்டை சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் வீரமானவர். அமைச்சராகவும் உள்ளதால் விஐபி தொகுதியாக உள்ளது. ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தின் அதிமுக முழுவதும் இவர் கட்டுப்பாட்டில் தான் உள்ளது. அந்த வகையில் 13 சட்டமன்ற தொகுதிகளுக்கான வேட்பாளர் தேர்வில் அரக்கோணம் தவிர்த்து மற்ற தொகுதிகளில் இவரது ஆதிக்கம் இருந்தது. இதனால் இவர் மீது ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் கட்சியினர் மத்தியில் கடும் அதிருப்தி நிலவுகிறது. இந்த நிலையில் ஜோலார்பேட்டை தொகுதியில் மூன்றாவது முறையாக வீரமானவர் போட்டியிடுகிறார்.

10 ஆண்டு காலம் அமைச்சராக வலம் வந்த இவர் தொகுதி வளர்ச்சியை மறந்து தனது வளர்ச்சியில் மட்டுமே கவனம் செலுத்தியதால் தொகுதியில் குடிநீர் பிரச்னை, வேலைவாய்ப்பின்மை, ஏழை மக்களின் வாழ்வாதாரம் பாதிப்பு இது எதையும் கண்டு கொள்ளாமல் மீண்டும் மக்களை சந்தித்து வருகிறார். ஆனால் அவருக்கு மக்கள் மத்தியில் எதிர்ப்பு அதிகரித்து வருகிறது. இதனை தவிர்க்க கூலி கொடுத்து தனக்கு ஆதரவாக குரல் கொடுக்க ஆட்களை திரட்டி வருகிறார். அவர்களுடன் வந்து தொகுதி மக்களிடத்தில் செய்த திட்டங்களை கூறும் வீரமானவரின் முன்பு அங்குள்ளவர்கள் கைதட்டுகின்றனர்.

அந்த இடத்தை தாண்டி சென்றவுடன், கட்சியினரும், ஆதரவாளர்களுமே மக்களுடன் சேர்ந்து, ‘‘10 ஆண்டுகளில் கிழிக்காததையா இப்போ கிழிக்க போறார்’’ என்று முணுமுணுக்கின்றனர். பொதுமக்களின் முணுமுணுப்பும், அவரது உறவினரின் அதிரடியும், வீரமானவரின் உடன் இருப்பவர்களின் உள்குத்தும் சேர்ந்துள்ளதால் கதிகலங்கி நிற்கின்றனர் ரத்தத்தின் ரத்தங்கள்.

Related Stories:

>