×

மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள்: மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மகன் துரை வையாபுரி

* மக்களிடம் வரவேற்பு எப்படி இருக்கிறது?
நான் இரண்டு நாட்களாக சாத்தூர் தொகுதி முழுவதும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறேன். மக்களிடம் வரவேற்பு எதிர்பார்த்ததை விட அதிகமாகவே இருக்கிறது. கிராமங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தே என்னுடைய பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறேன். சாத்தூர் தொகுதியில் 10 வருடமாக அதிமுகவினர் தான் எம்.எல்.ஏக்களாக இருந்துள்ளனர். அடிப்படை வசதிகள் கூட இங்கு செய்யவில்லை. பெண்களிடம் பெரும் மனக்குமுறலை காண முடிகிறது. குடிநீர் வசதி, சாலை வசதிகள், தெருவிளக்குகள் கூட அமைத்துத் தரப்படவில்லை. மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள்.

* மதிமுகவில் இன்னும் உங்களுக்கு கட்சி பொறுப்பு வழங்கப்படாதது ஏன்? பொறுப்பு கொடுத்தால் அதை ஏற்றுக்கொள்வீர்களா?
நான் தந்தைக்கு சிறந்த மகனாக இருந்தேன். இப்போது, ஒரு கட்சிக்கு தொண்டனாக பணிபுரிவேன். என்னை பொறுத்தவரையில் கட்சியில் பொறுப்பு வகிக்க வேண்டும் என்ற ஆர்வம் இல்லை. நான் தொண்டனாக இருந்தே செயல்பட விரும்புகிறேன். பொறுப்புகளையும், பதவிகளையும் தேடி செல்லக்கூடாது. அது தானாகவே வரும். மக்கள் பணி செய்யும் போது அது தேடி வரும். கட்சியில் எனக்கு பொறுப்பு வழங்குவது குறித்து காலம் பதில் சொல்லும்.

* அடுத்து வரும் தேர்தல்களில் நீங்கள் மதிமுக சார்பில் வேட்பாளராக போட்டியிடுவீர்களா?
இந்த தேர்தலிலேயே நிறைய கட்சி தொண்டர்களும், நிர்வாகிகளும் என்னை வேட்பாளராக களம் காண வைக்க வேண்டும் என ஆர்வம் காட்டினார்கள். ஆனால், கட்சியினர் ஆர்வம் காட்டுவது, விரும்புவதை காட்டிலும் மக்கள் ஆர்வம் காட்டுவது தான் முக்கியம். நான் சமுதாயப்பணியில் ஈடுபடும் போது மக்கள் என்னை விரும்பினால் நான் தேர்தலில் போட்டியிடுவேன். தனிப்பட்ட முறையில் எந்த விளம்பரமும் இல்லாமல் மக்களுக்கு நிறைய உதவிகளை செய்திருக்கிறேன். ஆனால், ஒரு இயக்கம் சார்பாக எந்த உதவிகளையும் செய்யவில்லை. ஒரு சூழல் வரும்போது அதை சரியான முறையில் பயன்படுத்திக்கொள்வேன்.

* திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை மக்களிடம் எப்படி எடுத்துச்செல்கிறீர்கள்?
திமுகவுக்கும், கூட்டணி கட்சியினருக்கும் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதியில் அருமையான திட்டங்களை அறிவித்துள்ளார். வேலைவாய்ப்பு, மாணவர்களுக்கு கணினியுடன் சேர்ந்து டேட்டா வசதி, விவசாயத்துக்கு தனி பட்ஜெட், இயற்கை விவசாயத்துக்கு தனிப்பிரிவு போன்ற திட்டங்களை இதுவரையில் எந்த அரசும் செய்தது கிடையாது. இது காலத்தின் தேவையாக இருக்கிறது. திமுக கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும் சாத்தியப்படக் கூடியதாகவும், செயல்படுத்தக் கூடியதாகவும் இருக்கிறது. அதை முன்னிறுத்தி மக்களிடம் வாக்கு சேகரித்து வருகிறேன்.



Tags : Madhimuga General Secretary ,Vaiko ,Durai Vaiyapuri , People want change: Madhimuga General Secretary Vaiko's son Durai Vaiyapuri
× RELATED மலர்ந்திருக்கும் இந்தச் சித்திரை,...