×

மக்களை கண்டுகொள்ளாத எம்எல்ஏ: காங்கயம் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ தனியரசு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளில் ஒன்று காங்கயம் தொகுதி. இது, கடந்த 2011-ம் ஆண்டு சட்டப்பேரவை தொகுதி மறுசீரமைப்பின்போது, வெள்ளக்கோவில் தொகுதியுடன் இணைக்கப்பட்டு, காங்கயம் தொகுதியானது. காங்கயம் வட்டம், பெருந்துறை வட்டம்  (ஒரு பகுதி), முருங்கத்தொழுவு, புதுப்பாளையம், நஞ்சைப் பாலத்தொழுவு,  புஞ்சைப் பாலத்தொழுவு, கொடுமணல், ஒரத்துப்பாளையம், எல்லை கிராமம்,  எட்டக்காம்பாளையம், பசுவபட்டி மற்றும் குப்பிச்சிபாளையம் கிராமங்கள்,  முகாசி பிடாரியூர் (செசன்ஸ் டவுன்), ஒட்டப்பாறை (செசன்ஸ் டவுன்) மற்றும்  சென்னிமலை (பேரூராட்சி) ஆகிய பகுதிகளை இத்தொகுதி உள்ளடக்கியுள்ளது.

இத்தொகுதியில், தேங்காய் எண்ணெய் தயாரிப்பு தொழிலில், முன்புபோல் சுபிட்சமாக இல்லை. காரணம், ஜிஎஸ்டி வரி. இந்த வரி விதிப்பு துவங்கிய நாளில் இருந்து, தேங்காய் பருப்பு மற்றும் தேங்காய் எண்ணெய் உற்பத்தி தொழில் நசிவடைந்து வருகிறது. இத்தொழிலை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும். கைத்தறி மற்றும் விசைத்தறி தொழில் நலிவை தடுக்க வேண்டும். இவற்றை மேம்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை, கிணற்றில் போட்ட கல் போல் கிடக்கிறது. காங்கயம் மற்றும் வெள்ளக்கோவில் பகுதி, கிராம பொருளாதாரத்தின் மிக முக்கிய அம்சமாக விளங்குகிறது. அதனால், இங்குள்ள கிராம சந்தைகளில் தேவையான அடிப்படை வசதிகளை செய்து வேண்டும். காங்கயத்தில் நிலவும் கடும் போக்குவரத்து நெரிசலை குறைக்க புறவழிச்சாலை அல்லது சுற்றுச்சாலை அமைக்க வேண்டும்.

நகரின் விரிவாக்க பகுதிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும். நகராட்சி நிர்வாகத்தை தரம் உயர்த்த வேண்டும் என்பதும் இப்பகுதி மக்களின் முக்கிய கோரிக்கை. ஆனால், இவையும் நிறைவேற்றப்படவில்லை. காங்கயத்தில் உள்ள அரசு தாலுகா மருத்துவனையை மேம்படுத்த வேண்டும், கூடுதல் டாக்டர்கள் நியமிக்க வேண்டும். ஈரோடு-பழனி ரயில்பாதை அமைக்க வேண்டும் என்பது இத்தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கை. இது, நிறைவேற்றப்படாமல் உள்ளது. காங்கயம் பகுதியில் உள்ள கழிவுநீர் அகிலாண்டபுரம் குளத்தில் நிரம்புகிறது. இதனால், சுற்றுப்புற சூழல் பாதிக்கப்படுகிறது. இதை சீர்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் கிடப்பில் ேபாடப்பட்டுள்ளது. வெள்ளக்கோவில், காங்கயம் பகுதியில் முருங்கை சாகுபடி அதிகம் உள்ளது. அதனால், இத்தொகுதியில் முருங்கை பவுடர் தயாரிக்கும் ஆலை அமைக்க வேண்டும் என்பது பிரதான கோரிக்கை. இது, கண்டுகொள்ளப்படாமல் உள்ளது.

 நத்தக்கடையூர், முத்தூர், சென்னிமலை பகுதியில் அதிகளவில் கரும்பு சாகுபடி நடக்கிறது. கரும்புக்கு போதிய விலை கிடைக்கவில்லை. டன்னுக்கு ரூ.3,500 வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதையும், இத்தொகுதி எம்எல்ஏ கண்டுகொள்ளவில்லை. காங்கயத்தில் கூட்டுறவு சர்க்கரை ஆலை அமைக்க வேண்டும். நத்தக்கடையூர், முத்தூர், பாப்பினி பகுதிகளில் விவசாயத்துக்கு மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும். வெள்ளக்கோவில், காங்கயம் பகுதிகளில் குடிநீர் திட்டத்தை விரைவுபடுத்த வேண்டும். காங்கயம் இன மாடுகளுக்கு காங்கயம் பகுதியில் சிலை அமைக்க வேண்டும். காங்கயம், வெள்ளக்கோவில் பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளும் கிடப்பில் போடப்பட்டு விட்டன.

 காங்கயம், வெள்ளக்கோவிலில் தேங்காய் எண்ணெய் உற்பத்தி அதிகளவில் உள்ளது. இத்தொழிலுக்கு வரி விலக்கு வேண்டும் என்ற கோரிக்கை கண்டுகொள்ளப்படவில்லை. சிவன்மலை சுற்றுலா தலமாக அறிவிக்கப்பட்டது. ஆனால், எந்த கட்டமைப்பு பணிகளும் நடக்கவில்லை. காங்கயம், வெள்ளக்கோவில், நத்தக்கடையூர் பகுதிகளில் உள்ள சந்தையில் எவ்வித கட்டமைப்பு வசதியும் இல்லை. சென்னிமலையில் கைத்தறி ெதாழில் அதிகளவில் நடக்கிறது. இத்தொழிலுக்கு மானியம் வழங்கப்படுவது இல்லை.

இத்தொகுதி எம்எல்ஏவாக தனியரசு உள்ளார்.  இவர், கொங்கு இளைஞர் பேரவை தலைவராக இருந்தாலும், அதிமுக சார்பில் இரட்டை  இலை சின்னத்தில் போட்டியிட்டு, வெற்றிபெற்றார். அதிமுக உறுப்பினராகவே  சட்டமன்றத்துக்குள் நுழைந்தார். வெறும் வாய் பேச்சிலேயே 5 ஆண்டு காலத்தை  கழித்துவிட்டார், தொகுதி மக்களை மறந்துவிட்டார் என மனம் குமுறுகின்றனர்  இத்தொகுதி மக்கள்.

அதிகளவு கேள்வி எழுப்பியுள்ளேன்
தனியரசு எம்எல்ஏ கூறும்போது, ‘‘காங்கயம் சட்டமன்ற தொகுதி வளர்ச்சிக்காக, சட்டமன்றத்தில் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தவன்தான் இந்த தனியரசு. வேறு எந்த எம்எல்ஏவும் கேள்வி எழுப்பாத வகையில் தொகுதி மேம்பாட்டுக்காக, சட்டமன்றத்தில் அதிகளவில் கேள்வி எழுப்பியுள்ளேன். மக்களின் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை தொகுதி முழுவதும் செய்து கொடுத்துள்ளேன். முருங்கை பவுடர் தயாரிப்பு ஆலை கொண்டு வரவும், கைத்தறி மற்றும் நெசவு தொழில், தேங்காய் எண்ணெய் ஆலை, அரிசி ஆலை மேம்பாட்டுக்கும் நடவடிக்கை எடுத்துள்ளேன்’’ என்றார்.

வாய்ப்பை
வீணடித்து விட்டார்
திருப்பூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கோபி கூறும்போது, ‘‘கடந்த 5 ஆண்டு காலத்தில் தொகுதிக்குள் என்னென்ன வளர்ச்சி பணிகள் நடந்துள்ளன என ஒரு ரவுண்ட் அடித்து பார்த்தால் தெரியும். மக்கள் கொடுத்த வாய்ப்பை பயன்படுத்தி, தொகுதிக்குள் அனைத்து வசதிகளையும் செய்துகொடுக்க வேண்டியது ஒரு எம்எல்ஏவின் கடமை. ஆனால், தனியரசு எம்எல்ஏ எந்த நடவடிக்கையும் எடுக்காமல், மக்கள் கொடுத்த வாய்ப்பை வீணடித்து விட்டார்’’ என்றார்.

Tags : Assembly , MLA who does not see the people: Kangayam Assembly constituency MLA Private
× RELATED கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில்...