7 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது இந்தியா

புனே: இங்கிலாந்து அணியுடனான 3வது மற்றும் கடைசி டி20 போட்டியில், 7 ரன் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி 2-1 என்ற கணக்கில் ஒருநாள் போட்டித் தொடரையும் கைப்பற்றி அசத்தியது. மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீசியது. அந்த அணியில் டாம் கரனுக்கு பதிலாக மார்க் வுட் இடம் பெற்றார். இந்திய அணியில் குல்தீப் யாதவுக்கு பதிலாக நடராஜன் சேர்க்கப்பட்டார். ரோகித், தவான் இருவரும் இந்திய இன்னிங்சை தொடங்கினர். பொறுப்புடன் விளையாடிய இருவரும் முதல் விக்கெட்டுக்கு 14.4 ஓவரில் 103 ரன் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்தனர். ரோகித் 37 ரன் (37 பந்து, 6 பவுண்டரி) விளாசி ரஷித் சுழலில் போல்டானார். தவான் 67 ரன் (56 பந்து, 10 பவுண்டரி) விளாசி ரஷித் பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார்.

கேப்டன் கோஹ்லி 7 ரன் மட்டுமே எடுத்து மொயீன் அலி சுழலில் கிளீன் போல்டானார். கே.எல்.ராகுல் 18 பந்தில் 7 ரன் எடுத்து வெளியேற, இந்தியா 24.2 ஓவரில் 1157 ரன்னுக்கு 4 விக்கெட் இழந்து சரிவை சந்தித்தது. இந்த நிலையில், பன்ட் - ஹர்திக் ஜோடி அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தியது. பன்ட் 44 பந்திலும், ஹர்திக் 36 பந்திலும் அரை சதம் அடித்தனர். இருவரும் 5வது விக்கெட்டுக்கு 101 ரன் சேர்த்து அசத்தினர். பன்ட் 78 ரன் (62 பந்து, 5 பவுண்டரி, 4 சிக்சர்), ஹர்திக் 64 ரன் (44 பந்து, 5 பவுண்டரி, 4 சிக்சர்) விளாசி ஆட்டமிழந்தனர். க்ருணல் 25 ரன், தாகூர் 30 ரன் (21 பந்து, 1 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசி வெளியேறினார். பிரசித் (0), புவனேஷ்வர் 3 ரன்னில் விக்கெட்டை பறிகொடுக்க, இந்தியா 48.2 ஓவரில் 329 ரன் குவித்து ஆல் அவுட்டானது. நடராஜன் (0) ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இதைத் தொடர்ந்து, 50 ஓவரில் 330 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் இங்கிலாந்து களமிறங்கியது. ராய் 14 ரன், பேர்ஸ்டோ 1 ரன் எடுத்து புவனேஷ்வர் வேகத்தில் வெளியேறினர். ஸ்டோக்ஸ் 35 ரன் எடுத்து நடராஜன் பந்துவீச்சில் வெளியேறினார். கேப்டன் பட்லர் 15, லிவிங்ஸ்டோன் 36, டேவிட் மாலன் 50 ரன் எடுத்து தாகூர் பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தனர். மொயீன் அலி 29 ரன் எடுத்து ஆட்டமிழக்க, இங்கிலாந்து 30.3 ஓவரில் 200 ரன்னுக்கு 7 விக்கெட் இழந்து தடுமாறியது. இந்த நிலையில், சாம் - ரஷித் இணைந்து 8வது விக்கெட்டுக்கு 57 ரன் சேர்த்து இங்கிலாந்துக்கு நம்பிக்கை அளித்தனர்.

ரஷித் 19 ரன்னில் வெளியேறினார். ஆனாலும், உறுதியுடன் போராடிய சாம் இந்திய அணிக்கு கடும் நெருக்கடி கொடுத்தார். இதனால் கடைசி கட்ட ஆட்டம் பரபரப்பானது. நடராஜன் வீசிய கடைசி ஓவரில் 14 ரன் தேவைப்பட்ட நிலையில், அவர் துல்லியமாகப் பந்துவீசி அசத்த, இந்தியா 7 ரன் வித்தியாசத்தில் வென்று 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. சாம் 95 ரன் (83 பந்து, 9 பவுண்டரி, 3 சிக்சர்), டாப்லி 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்(இங்கி.50 ஓவரில் 322/9). இந்திய பந்துவீச்சில் தாகூர் 4, புவனேஷ்வர் 3, நடராஜன் 1 விக்கெட் வீழ்த்தினர். இங்கிலாந்துடன் நடந்த டெஸ்ட், டி20, ஒருநாள் என 3 தொடர்களையுமே இந்தியா வென்றது குறிப்பிடத்தக்கது.

* ரோகித் - தவான் 5,000!

ஒருநாள் போட்டிகளில் இந்திய அணியின் ரோகித் ஷர்மா - ஷிகர் தவான் தொடக்க ஜோடி 5,000 ரன் சேர்த்து அசத்தியுள்ளது. இங்கிலாந்துக்கு எதிராக நேற்று நடந்த 3வது போட்டியில் இவர்கள இந்த மைல்கல்லை எட்டினர். சச்சின் - கங்குலி ஜோடிக்குப் பிறகு இந்த சாதனையை நிகழ்த்தும் 2வது இந்திய இணை என்ற பெருமையையும் வசப்படுத்தி உள்ளனர்.

Related Stories:

>