ராயபுரம் தொகுதியில் அமைச்சர் ஜெயக்குமார் வாக்குசேகரிப்பு

தண்டையார்பேட்டை: ராயபுரம் தொகுதி அதிமுக வேட்பாளர் அமைச்சர் ஜெயக்குமார் நேற்று காலை ராயபுரம் எஸ்.என்.செட்டி தெருவிலிருந்து பிரசாரத்தை தொடங்கினார். அப்போது காசி தோட்டம், பெண்டில்மென் கார்டன், வாத்தியார் ஏகப்பன் தெரு, ஏ.ஜெ.காலனி, கொடிமர சாலை, சேவியர் தெரு, இந்திரா காந்தி நகர், ஜி.எம்.பேட்டை, திரௌபதி கோயில் தெரு, துரை தெரு உள்ளிட்ட பகுதிகளில் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது, “மீனவர் நலனை பொறுத்தவரை, இதுவரை ரூ.100 கோடிக்கு மேல் காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் பல்வேறு வசதிகள் செய்து கொடுத்து உள்ளேன். சமீபத்தில் கூட மீன் விற்பனை செய்பவர்கள் மழை, வெயிலில் மீன் விற்பனை செய்ய வேண்டியுள்ளது என்பதற்காக, மீன்பிடி துறைமுகத்தில் சர்வதேச தரத்தில் ஒரு மீன் மார்கெட் கட்டிக்கொடுத்துள்ளேன்.

தற்போது ரூ.155 கோடி செலவில் மீன்பிடி துறைமுகத்தில் மேலும் பல்வேறு வசதிகள் செய்து கொடுப்பதற்கு மத்திய அரசின் அனுமதி பெறப்பட்டுள்ளது. இதன்மூலம் மீன்பிடி துறைமுகத்தில், மேலும் 200 முதல் 300 மீன்பிடி படகுகள் நிறுத்த முடியும். இதேபோல், மீனவர் நலவாரியம் மூலம் கடந்த ஆண்டு ஒவ்வொரு மீனவ குடும்பத்திற்கும் ரூ.1000 வீதம் மூன்று முறை மொத்தம் ரூ.3000 வழங்கப்பட்டுள்ளது. மீனவர்களுக்கு வழங்கப்படும் நிவாரணத்தொகை மொத்தம் ரூ.19,000 ஒவ்வொரு ஆண்டும் தீபாவளிக்கு முன்னதாகவே கொடுக்க ஏற்பாடு செய்துள்ளேன்,” இவ்வாறு அவர் பேசினர்.

Related Stories: