குஜராத் மாநிலத்தில் இருந்து 2 தனி ரயிலில் தேர்தல் பாதுகாப்புக்கு 1,864 சிஆர்பிஎப் ஆயுதப்படை போலீசார் சேலம் வருகை

சேலம்: தமிழக தேர்தல் பாதுகாப்பு பணிக்காக குஜராத் மாநிலத்தில் இருந்து இன்று 2 தனி ரயிலில் சேலத்திற்கு 1,864 சிஆர்பிஎப், ஆயுதப்படை போலீசார் வந்தனர். அவர்களை 4 மாவட்டத்திற்கு பிரித்து அனுப்பினர். தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6ம் தேதி நடக்கிறது. இத்தேர்தலையொட்டி பாதுகாப்பு பணிக்காக துணை ராணுவத்தினரை வரவழைத்து வருகின்றனர். மாநிலம் முழுவதும் அனைத்து வாக்குச்சாவடியிலும், தமிழக போலீசாருடன் இணைந்து துணை ராணுவ வீரர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட இருக்கின்றனர். இதற்காக ஒடிசா, குஜராத், உபி., பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து சிஆர்பிஎப், சிஐஎஸ்எப், பிஎஸ்எப் மற்றும் மாநில ஆயுதப்படை போலீசார் வந்த வண்ணமாக உள்ளனர். சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருநெல்வேலி மாவட்டங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட குஜராத் மாநிலத்தில் இருந்து சிஆர்பிஎப் துணை ராணுவ வீரர்களும், குஜராத் மாநில ஆயுதப்படை போலீசாரும் வரவழைக்கப்பட்டனர்.

இவர்கள் இன்று காலை சேலம் ரயில்வே ஸ்டேஷனுக்கு 2 தனி ரயிலில் வந்திறங்கினர். குஜராத் மாநில ஆயுதப்படை போலீசார், 8 மற்றும் 13வது பட்டாலியனில் இருந்து எஸ்பி என்.எம்.கஞ்சார் தலைமையில் வந்திருந்தனர். இதில், 2 டிஎஸ்பி, 9 இன்ஸ்பெக்டர், 27 எஸ்ஐ மற்றும் 719 போலீசார் என மொத்தம் 758 பேர் இருந்தனர். இந்த 9 கம்பெனி ஆயுதப்படை போலீசாரும், சேலம் மாவட்டத்தில் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட அனுப்பி வைத்தனர். இதேபோல், மற்றொரு ரயிலில் குஜராத் மாநிலம் அகமதாபாதில் இருந்து சிஆர்பிஎப் வீரர்கள் 1,106 பேர் வந்தனர். இவர்கள் அனைவரும் சேலம் மாநகர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களுக்கு பாதுகாப்பு பணிக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். தனித்தனி துணை ராணுவ வாகனத்தில் ஏறி, வீரர்கள் சென்றனர். இதனால், இன்று காலை சேலம் ரயில்வே ஸ்டேஷன் முழுவதும் துணை ராணுவ வீரர்களாக இருந்தனர். அவர்கள், துப்பாக்கி மற்றும் உடமைகளை எடுத்துக் கொண்டு, வாகனங்களில் ஏறி புறப்பட்டுச் சென்றனர். இந்த பணி இன்று மதியம் வரை நடந்தது.

Related Stories:

>