×

திருச்செங்கோடு அருகே மினி வேனில் அ.தி.மு.க.,வினர் கொண்டு வந்த 5 ஆயிரம் சேலைகள் பறிமுதல்

* கொமதேகவினர் முற்றுகை-கைகலப்பு
* நாமக்கல் எம்பியுடன் வாக்குவாதம்

திருச்செங்கோடு: திருச்செங்கோடு அருகே, அதிமுகவினர் வாக்காளர்களுக்கு வழங்க சரக்கு வேனில் கொண்டு வந்து பதுக்கிய சுமார் 5 ஆயிரம் சேலைகளை, பறக்கும்படையினர் பறிமுதல் செய்தனர். நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு தாலுகா மல்லசமுத்திரம் ஒன்றியம் பள்ளக்குழி ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் செல்வகுமார்(49). ரிக் தொழில் செய்து வருகிறார். நேற்று மதியம் 12 மணியளவில், இவரது தோட்டத்து வீட்டிற்கு மினி சரக்கு வேனில் சேலைகள் அடங்கிய பண்டல்கள் கொண்டு வரப்பட்டது. அதிமுகவினர் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக, இந்த சேலைகளை கொண்டு சென்றதாக தகவல் பரவியது. இதுகுறித்த தகவல் அறிந்த அப்பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த கொமதேக, திமுக மற்றும் கூட்டணி கட்சியினர், உடனடியாக செல்வகுமாரின் தோட்டத்து வீட்டுக்கு சென்றனர். இவர்கள் வருவதை அறிந்த அதிமுகவினர், துணி பண்டல்களை வேறு இடத்துக்கு கொண்டு செல்ல முயன்றனர்.

அப்போது, திமுக கூட்டணி கட்சியினர், அந்த வாகனத்தை தடுத்து நிறுத்தினர். இதனால் துணி பண்டல்கள் தோட்டத்தில் ஆங்காங்கே போடப்பட்டது. இதனிடையே கொமதேக மற்றும் அதிமுகவினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, ஒரு கட்டத்தில் கைகலப்பாக மாறியது. இதில் கொமதேக நிர்வாகி நந்தகுமார் தாக்கப்பட்டார். இதுகுறித்த தகவல் பரவியதால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. துணி பண்டல்கள் பதுக்கப்பட்டது குறித்து தேர்தல் பறக்கும்படை அலுவலர் மற்றும் போலீசாருக்கு, கொமதேகவினர் தகவல் தெரிவித்தனர். ஆனால், பல மணி நேரம் ஆகியும் அங்கு யாரும் வரவில்லை. இதுகுறித்த தகவலறிந்த நாமக்கல் எம்பி சின்ராஜ், உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்து, துணி மூட்டைகளை பார்வையிட்டார். அப்போது அதிமுக பேரூராட்சி செயலாளர் சுந்தரராஜன், தனது ஆதரவாளர்களுடன் அங்கு வந்தார்.

மீண்டும் இருதரப்பினர் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. கைகலப்பு ஏற்படும் சூழ்நிலை உருவானது. அந்த நேரத்தில், தேர்தல் பறக்கும்படை அலுவலர் சரவணன் தலைமையிலான போலீசார் அங்கு வந்து, அங்கிருந்த 6 பண்டல்களை கைப்பற்றினர். இதில் சுமார் 5 ஆயிரம் சேலைகள் இருக்கலாம் என தெரிவித்தனர். பறிமுதல் செய்த சேலை பண்டல்களை, திருச்செங்கோடு தாலுகா அலுவலகத்துக்கு கொண்டுசென்று ஒப்படைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags : Tiruchengkode , Tiruchengode, Mini van, ADMK, sarees confiscated
× RELATED யானை தாக்கி விவசாயி பலி