×

சோகத்தூரில் வறண்டு கிடக்கும் ஏரியில் ஆக்கிரமித்துள்ள முட்செடிகள்: அகற்ற விவசாயிகள் கோரிக்கை

தர்மபுரி: தர்மபுரி அருகே வறண்டு காணப்படும் சோகத்தூர் லளிகம் ஏரியில் சீமை கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் அன்னசாகரம், மதிகோன்பாளையம், ராமக்காள், பைசுஅள்ளி ஏரி, பாப்பாரப்பட்டி ஏரி, இண்டூர் ஏரி, லளிகம் ஏரி, செட்டிக்கரை, அதியமான்கோட்டை, நல்லம்பள்ளி உள்பட 70க்கும் மேற்பட்ட ஏரிகள் உள்ளன. தற்போது, கோடைக்காலம் என்பதால், சோகத்தூர் ஏரி வறண்டு காணப்படுகிறது. சுமார் 220 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த ஏரிக்கு பல ஆண்டுகளாக நீர்வரத்து குறைந்து விட்டதோடு, ஏரியை சுற்றி உள்ள கரைகளும் உடைந்து முட்புதர்களாக மாறியது. கடந்த ஆண்டு ₹50 லட்சத்தில் மராமத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு, முட்செடிகள் அகற்றப்பட்டு, ஏரியின் கரைகள் பலப்படுத்தப்பட்டு தூர்வாரப்பட்டது.

ஆனால், முறையான பராமரிப்பு இல்லாததால், ஏரி முழுவதும் முட்செடிகள் வளர்ந்துள்ளது. தற்போது ஏரி வறண்டு கிடப்பதால், பருவமழை பெய்யும் போது, தண்ணீரை சேமிக்கும் வகையில், ஏரியை தூர்வாரி சீமை கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘லளிகம் ஏரியில் முளைத்துள்ள முட்செடிகளை அகற்றி தூர்வாரினால் சோகத்தூர், கடகத்தூர், செல்லியம்பட்டி, எஸ்.கொல்லப்பட்டி உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயம் செழிப்படையும். எனவே, ஏரியில் உள்ள முட்செடிகளை உடனே அகற்ற வேண்டும்,’ என்றனர்.

Tags : Sokathur , In Sokathur, lying dry, in a lake , Thorns
× RELATED பொங்கல் பரிசு பொருட்களுடன் வெல்லம்...