×

நீடாமங்கலம் அருகே ஆபத்தான நிலையில் உடைந்து தொங்கும் வெள்ளையாற்று பாலம்: புதிதாக கட்டித்தருவோருக்கே ஓட்டு என அறிவிப்பு

நீடாமங்கலம்: நீடாமங்கலம் அருகே அகர பொதக்குடி வெள்ளையாற்றில் ஆபத்தான நிலையில் உடைந்து தொங்கிக்கொண்டிருக்கும் பாலத்தை கட்டி தருவேன் என வாக்குறுதி தரும் வேட்பாளருக்கே எங்கள் ஓட்டு என்பதே கிராம மக்களின் குரலாக உள்ளது. நீடாமங்கலம் அருகே உள்ளது அகரப்பொதக்குடி கிராமம். இக்கிராமத்திற்கு ஆய்குடி செல்லும் வழியில் ஒரு கம்பி பாலம் கடந்த 22 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டு அதில் இரு சக்கரவாகனம் செல்லும் அளவில் இருந்தது. இந்த கம்பி பாலம் கடந்த ஒரு வருடத்திற்கு முன் இடிந்து ஆபத்தான நிலையில் தொங்கி கொண்டிருக்கிறது. இந்த பாலத்தில்தான் அகரபொதக்குடி மக்கள் வந்து பொதக்குடியில் உள்ள வங்கிகள், பள்ளிகள், ரேஷன் கடை, மருத்துவமனை, அஞ்சலகம் மற்றும் மேலும் வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்க வரவேண்டும். பாலம் பாதிக்கப்பட்டதால் வாளாச்சேரி வழியே சுமார் 2 கி.மீ. தூரம் சுற்றி வரவேண்டியுள்ளது. அகர பொதக்குடியில் 7 தெருக்கள் உள்ளது. 900க்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர்.

சுமார் 450 ஓட்டுகள் உள்ளது. இங்கிருந்து செல்லும் பள்ளி, கல்லூரி மாணவிகள் மிகவும் அவதியுற்று செல்கின்றனர். அவசரத்திற்கு கூட ஆம்புலன்ஸ், கார் வந்தால் வாளாச்சேரி சுற்றிதான் வரவேண்டும். வயதானவர்கள் வருவது மிகவும் சிரமமாக உள்ளது. அங்குள்ள சில இளைஞர்கள் அவசரத்திற்கு ஆபத்தான இடிந்து விழும் நிலையில் உள்ள பாலத்தில் உயிரை பிடித்துக்கொண்டு சென்று வருகின்றனர். இது தொடர்பாக அப்பகுதி மக்கள் கூறுகையில், இந்த வெள்ளையாற்று பாலம் இடிந்து ஒரு வருடத்திற்கு மேல் ஆபத்தான நிலையில் தொங்கி கொண்டிருக்கிறது. எப்ப விழுந்து மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தும் என்ற அச்சம் உள்ளது. தற்போது ஊருக்கே வராதவர்கள், பல்வேறு கட்சியினர் வந்து வரும் 6ம் தேதி நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்கு வாக்கு சேகரித்து செல்கின்றனர். யார் இந்த பாலத்தை கார், ஆம்புலன்ஸ் வரும் அளவிற்கு கட்டித் தருகிறேன் என வாக்குறுதி தருகிறார்களோ அவர்களுக்கே எங்கள் ஓட்டு என்றனர்.

Tags : White River Bridge ,Needamangalam , Needamangalam, dangerous condition, whitewash, bridge
× RELATED கோடை நடவு பயிரில் எலிகளை கட்டுப்படுத்த பறவை தாங்கி