பரமக்குடி பகுதியில் தெருநாய்கள் அடித்து கொலையா?: வைரலாகும் வீடியோவால் பரபரப்பு

பரமக்குடி: பரமக்குடியில் நகராட்சி பிடித்து சென்ற நாய்களை அடித்து கொன்றதாக சமூக வலைதளங்களில் வீடியோ வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி நகராட்சி பகுதிகளில் அதிகமான தெரு நாய்கள் மற்றும் நோயினால் பாதிக்கப்பட்ட நாய்கள் திரிகின்றன. இவைகள் அனைத்தும் தெரு பகுதிகளில் விளையாடும் குழந்தைகள் மற்றும் பெரியவர்களை கடித்து வருகிறது. இதனால் அதிகளவில் வந்த புகாரின் அடிப்படையில், நேற்று நகராட்சி அதிகாரிகள் நாய்களை பிடித்து பொன்னையாபுரம் பகுதியில் உள்ள குப்பைக்கிடங்கில் விடுவதற்காக கொண்டு சென்றுள்ளனர்.

அப்போது அங்கிருந்த சில இளைஞர்கள், தெருநாய்களை அடித்து துன்புறுத்துவதாகவும், கொலை செய்ததாகவும் ‘ப்ளூ கிராஸ்’ அமைப்பை சேர்ந்தவர்கள் சமூக வலைத்தளங்களில் வீடியோவாக வெளியிட்டது வைரலாகி வருகிறது. இதுகுறித்து நகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், “பரமக்குடி நகராட்சி பகுதி மக்கள் தெருக்களில் அதிகமாக தெருநாய்கள், வெறி பிடித்த நாய்கள் நடமாட்டம் உள்ளதால் குழந்தைகள் மற்றும் பெரியவர்களை கடித்ததாக புகார் தெரிவித்தனர். கடந்த மாதம் சிறப்பு முகாம் நடத்தி 245 நாய்களை கருத்தடை செய்துள்ளோம். இந்த மாதம் மட்டும் 15 பேரை கடித்துள்ளது. நாய்களை பிடித்து கால்கள் கட்டப்பட்ட நிலையில், குப்பை கிடங்கில் கொண்டு சென்று விடுவதற்காக சென்றபோது, வீடியோ எடுத்து தவறுதலாக சமூக வலைதளங்களில் பதியவிட்டுள்ளனர். நாய்களை அடித்து கொன்றதாக வீடியோ வெளியாகியுள்ளது தவறானது’’ என்றார்.

Related Stories:

>