×

துணை முதல்வர் ஓபிஎஸ்சை ஆதரித்து பிரசாரம் முதல்வரை எதிர்த்து கோஷம் பெண், மாற்றுத்திறனாளி கைது: கருப்புக்கொடி காட்டியதால் போடியில் பரபரப்பு

போடி: துணை முதல்வர் ஓபிஎஸ்சை ஆதரித்து நேற்றிரவு நடந்த பிரசாரத்தின்போது, முதல்வரை கண்டித்து கருப்புக்கொடியுடன் கோஷமிட்ட பெண், மாற்றுத்திறனாளி கைதாயினர். தேனி மாவட்டம், போடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், கம்பம் தொகுதி வேட்பாளர் சையதுகான், பெரியகுளம் தொகுதி வேட்பாளர் முருகன், ஆண்டிபட்டி தொகுதி வேட்பாளர் லோகிராஜன் ஆகியோரை, முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிமுகம் செய்து வைக்கும் தேர்தல் பிரசாரம் போடி தேவர் சிலை அருகே நேற்று நடந்தது. பிரசாரத்தில் முதல்வர் பேசியதாவது:
ஓ.பன்னீர்செல்வம் ஆற்றல் மிக்கவர். இவர் ஏராளமான திட்டங்களை கொண்டு வந்துள்ளார். இந்த தொகுதியில் பட்டி, தொட்டி, மூளை முடுக்கு எல்லாம் அறிந்தவர். எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் இறுதி மூச்சுவரை பொதுமக்களுக்கான திட்டங்களை கொண்டு வந்தனர். இவர்கள் இறைவன் கொடுத்த வரங்கள். அந்த வரிசையில் உங்கள் வேட்பாளர் ஓபிஎஸ்சும் ஒருவர். அதிமுக ஆட்சிக்கு வந்தால், திண்டுக்கல் - சபரிமலை ரயில்வே சாலைக்கு மத்திய அரசிடம் முறையிட்டு நிதி பெற்று நிறைவேற்றப்படும்.

இவ்வாறு அவர் பேசினார். முதல்வர் பேசிக்கொண்டிருக்கும்போது, கூட்டத்தின் நடுவே இருந்த ஒரு பெண், கையில் பதாகை ஏந்தி, சீர்மரபினர் சமூகத்தினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டுமென கோஷமிட்டார். இதேபோல, வீரணன் என்ற மாற்றுத்திறனாளி கருப்புக்கொடி ஏந்தி எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக எதிர்ப்பு கோஷம் எழுப்பினார். இதையடுத்து இருவரையும் கைது செய்து, போலீசார் போடி காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

முதல்வர் சொன்ன பொய்
பிரசாரத்தின்போது முதல்வர், ‘‘ஓபிஎஸ் முயற்சியால் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கொண்டு வரப்பட்டது’’ என்றார். ஆனால், 2004ல் ஜெயலலிதா ஆண்டிபட்டி எம்எல்ஏவாக இருந்தபோது, தனது தொகுதிக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை கொண்டு வந்தார். அதனை ஓபிஎஸ் கொண்டு வந்ததாக கூறுகிறாரே என கூட்டத்தில் இருந்தவர்கள் பேசிக் கொண்டனர்.

Tags : Deputy Principal OBS ,Prasaram , Deputy Chief OBS, propaganda, chief, opposition, slogan, arrest
× RELATED ₹1 லட்சம் தர்றோம்… போன் நம்பர் கொடுங்க… பாஜ நூதன பிரசாரம்