×

குடிநீர் பிரச்னையால் தள்ளாடும் சூலூர்: சூலூர் தொகுதி எம்எல்ஏ வி.பி.கந்தசாமி: சொன்னாரே செஞ்சாரா

கோவை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், கோவை மாவட்டத்தின் ஒருபக்க நுழைவு வாயிலாக அமைந்துள்ளது சூலூர் சட்டமன்ற தொகுதி. விவசாயமும், நெசவும் இத்தொகுதியில் பிரதான தொழில்களாக உள்ளன. இத்தொகுதியின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாக சூலூர் விமானப்படை தளம் உள்ளது. இத்தொகுதியில், கவுண்டர் சமூகத்தினர் பெரும்பான்மையாக வசித்து வந்தாலும், தேவர், நாயக்கர், ஒக்கலிக கவுடர் மற்றும் தாழ்த்தப்பட்ட சமூகத்தினரும் கணிசமாக வசிக்கின்றனர். விசைத்தறி அதிகம் உள்ள சூலூர் தொகுதியில், நெசவுத்தொழில் நலிவடைந்து வருவதால், நிறைய பாதிப்புகளை சந்திப்பதாக நெசவாளர்கள் கூறுகின்றனர். கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறியாளர்கள், உரிய கூலி கிடைக்காமல், கடும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். ஒரு குடும்பத்தில் அனைவரும் நெசவாளர்களாக இருந்த நிலை மாறி, பலர் பின்னலாடை தொழிலுக்கு சென்றுவிட்டனர். வங்கிகளில் பெறப்பட்ட கடனை திருப்பி செலுத்த முடியாமல், ஜப்தி நடவடிக்கைகளுக்கு உள்ளாகி வருவதால், நெசவாளர்கள் படும் வேதனைக்கு அளவே இல்லாமல் போகிறது.

தமிழக முதல்வர் கடந்த 2019ம் ஆண்டு அளித்த வாக்குறுதியின்படி, வங்கிக்கடன் தள்ளுபடியை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இத்தொகுதியில், பல இடங்களில், விளைநிலங்கள் வழியாக உயர்மின் கோபுரம் அமைப்பதால், விவசாயிகள் தங்களது விளைநிலங்களை இழந்து தவிக்கின்றனர். பல கிராமங்களில் குடிநீர் மற்றும் ஆழ்குழாய் நீர் பற்றாக்குறை நீடிக்கிறது. நொய்யல் ஆற்றில் பல்வேறு விதமான கழிவுகள் கலப்பதால், ஆறு மாசுபட்டு காட்சி தருகிறது. கவுசிகா நதியும் வறண்டுதான் காணப்படுகிறது. இதனால், ஆற்று நீர் பாசனத்துக்கு வழியில்லாமல் விவசாயிகள் தவிக்கின்றனர். நிலத்தடி நீர் பாசனம்தான் விவசாயத்துக்கு கை கொடுக்கிறது. ஆனால், நிலத்தடி நீருக்கு ஆதாரமாக உள்ள குளங்கள் கவனிக்கப்படாமல் இருக்கின்றன. ஆச்சான்குளம், சூலூர் பெரியகுளம், சின்னகுளம், சாமளாபுரம் குளம் ஆகியவை பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் கிடக்கிறது. அத்துடன், கழிவுநீர் அன்றாடம் கலக்கிறது.

சூலூர் அரசு மருத்துவமனையை விரிவுபடுத்த வேண்டும், அரசு கலைக்கல்லூரி கொண்டு வர வேண்டும், கோவையில் இருந்து தெற்கு மற்றும் டெல்டா மாவட்டங்களுக்கு செல்ல முக்கிய வழித்தடமாக உள்ள திருச்சி சாலையை விபத்துகள் இல்லாத போக்குவரத்துக்கு வழிவகை செய்யும் வகையில் மேம்படுத்த வேண்டும், சூலூரை மையப்படுத்தி தொழிற்பேட்டை ஏற்படுத்தவேண்டும், சோமனூரில் ஜவுளிச்சந்தை ஏற்படுத்த வேண்டும் என தொகுதி மக்கள் முன்வைத்த பல்வேறு கோரிக்கைகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. பாப்பம்பட்டி,  கள்ளப்பாளையம், இடையர்பாளையம், பச்சார்பாளையம், சின்னக்குயிலி போன்ற  பகுதிகளுக்கு, தடையின்றி குடிநீர் வழங்குவேன் எனக்கூறி வெற்றிபெற்ற இவர்,  எந்த நடவடிக்கையும் எடுக்காதது, ெதாகுதி மக்களை ஏமாற்றம்  அடையச்செய்துள்ளது.

கண்ணம்பாளையம், பள்ளபாளையம் குளங்களை தூர் வாருவதாக  கூறி பணிகளை துவக்கி, பாதியிலேயே கைவிட்டது தொகுதி மக்களை எரிச்சல் அடைய  செய்துள்ளது. சூலூர் சின்னக்குளம், ஆச்சான்குளம் போன்ற குளங்களை தூர்வார  பாராளுமன்ற உறுப்பினர் 70 லட்சம் நிதி ஒதுக்கியும் பணி செய்யாமல் கைவிட்டது  தொகுதி மக்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிக விவசாய நிலங்கள்  இருந்தும் தண்ணீர் இல்லாமல் சுல்தான்பேட்டை மேற்கு ஒன்றியம்  கடும் வறட்சிக்கு உள்ளாகியுள்ளது. மக்கள் குடிநீருக்கு  திண்டாடுகின்றனர். சோமனூரில் ஜவுளிப்பூங்கா அமைக்க வேண்டும் என்பது எதிர்பார்ப்பாக உள்ளது. இப்பிரச்னையை இத்தொகுதி அதிமுக எம்எல்ஏ வி.பி.கந்தசாமி கண்டுகொள்வதாக தெரியவில்லை. இவர், கடந்த 2019-ம் ஆண்டு நடந்த இடைத்தேர்தலில் வெற்றிபெற்றார். தொகுதி மக்களை கண்டுகொள்ளாத நிலையில், தற்போதும் இவருக்கே மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது தொகுதி மக்களிைடயே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

‘பள பளக்கும் தார்ச்சாலைகள்’
தொகுதி எம்எல்ஏ வி.பி.கந்தசாமி கூறுகையில், ``தொகுதி முழுவதும் தார்ச்சாலைகள் அமைத்து கொடுத்துள்ளேன். கிராமங்கள் வரை சாலைகள் பளிச்சிடுகின்றன. தெருவிளக்குகள் அதிகளவில் அமைத்து கொடுத்துள்ளேன். இவை, இரவில் பிரகாசமாக ஒளிர்கின்றன. விசைத்தறியாளர் கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்கு விரைவில் நல்ல தீர்வு காணப்படும். மக்கள் கேட்ட அனைத்தையும் செய்து கொடுத்து வருகிறேன். இனியும் அதிமுக ஆட்சி அமைந்தால், அரசு என்னென்ன திட்டங்கள் அறிவிக்கிறதோ, அத்தனையையும் எனது தொகுதிக்கு கேட்டுப்பெறுவேன்’’ என்றார்.

‘வரிசைகட்டி நிற்கும் பிரச்னைகள்’
கடந்த தேர்தலில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் பொங்கலூர் பழனிசாமி கூறுகையில், ``விசைத்தறியாளர் கடன் தள்ளுபடி விவகாரத்தில் எந்த  நடவடிக்கையும் எடுக்காதது மக்களை ஏமாற்றும் செயலாக உள்ளது. நீர்நிலைகள்  தூர்வாரப்படாமல் உள்ளதால், குளங்களில் போதிய அளவு மழைநீரை சேமிக்க  முடியவில்லை. இதனால், ஆழ்குழாய் கிணறுகளிலும் போதிய அளவில் தண்ணீர்  கிடைப்பது இல்லை. இதுபோன்று, பல நிறைவேற்றப்படாத கோரிக்கைகள் வரிசை கட்டி  நிற்கின்றன’’ என்றார்.

2019 சூலூர் சட்டமன்ற இடைத்தேர்தல் டேட்டா
மொத்த வாக்காளர்கள்    2,81,890
பதிவான வாக்குகள்        2,26,998
வி.பி.கந்தசாமி (அதிமுக)     1,00,782  
பொங்கலூர் பழனிசாமி (திமுக)     90,669  
கே.சுகுமார் (அமமுக)    16,530
மோகன்ராஜ் (மநீம)        6,644
விஜயராகவன் (நாம் தமிழர்)     4,335
நோட்டா            1,938
2019 நாடாளுமன்ற தேர்தல் டேட்டா
(சூலூர் சட்டமன்ற தொகுதி)
பி.ஆர்.நடராஜன் (சிபிஎம்)    94,603
சி.பி.ராதாகிருஷ்ணன் (பா.ஜ)    74,883
மகேந்திரன் (மநீம)        15,174
கல்யாணசுந்தரம் (நாம் தமிழர்)    9,693
அப்பாத்துரை (அமமுக)    8,646
நோட்டா            4,289



Tags : Sennara , Sulur is reeling from drinking water crisis: Sulur MLA VP Kandasamy
× RELATED மதரீதியாக வாக்கு சேகரித்த புகாரில்...