×

அதிமுக-பாஜ கூட்டணி தமிழக நலன்களை குழிதோண்டி புதைக்கும்: மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா

* பாபநாசம் சட்டமன்ற தொகுதியில் உங்களது வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது?
பாபநாசம் தொகுதியில் கடந்த சில நாட்களாக பல்வேறு நகர, கிராமங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கிறேன். மக்கள் தன்னெழுச்சியுடன் சிறப்பான வரவேற்பை அளிக்கின்றனர். இந்த தொகுதியை பொறுத்தவரை கடந்த காலங்களில் அதிமுகவை சார்ந்தவர்கள் சட்டமன்ற உறுப்பினர்களாக இருந்தனர். ஆனால், மக்களின் தேவைகள் பூர்த்தி செய்யப்படாமல் உள்ளது. இந்த பகுதிகளில் கலை அறிவியல் கல்லூரி அமைக்க வேண்டும் என்பது மக்களின் நீண்டகால கோரிக்கையாக உள்ளது. அதே போன்று, சுவாமிமலை முருகன் கோயில் சுற்றுலாத்தலமாக்க வேண்டும் என்ற கோரிக்கையாக வைத்த நிலையில் அதுவும் நிறைவேற்றப்படவில்லை. இப்படி பல விஷயங்களை சொல்லிக்கொண்டே போகலாம். இதை தவிர அதிமுக ஆட்சி மீதான பெரிய  எதிர்ப்பலை இருக்கிறது.

மாநில உரிமைகள் பறி போய் உள்ளதாக மக்கள் உணருகின்றனர். வேலை வாய்ப்புகள் பறிபோவதையும் உணர்ந்துள்ளனர். இந்த சூழலில் நீட்டை கொண்டு வந்ததால் தமிழக மருத்துவ கல்லூரிகளில் மாணவர்களுக்கு இடமில்லாத சூழல்.
பாபநாசம் விவசாயிகள் நிறைந்த தொகுதி. 3 வேளாண் சட்டங்கள் விவசாயத்தை மட்டுமல்ல, ஒட்டு மொத்தமாக அனைத்து மக்களின் உணவு பாதுகாப்பையே கேள்விக்குறியாக்கியுள்ளது. பொது விநியோக திட்டத்தை சீர்குலைப்பதாக உள்ளதால், தமிழகம் முழுவதும் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இது எனது வெற்றியை எளிமையாக்கும்.

* அதிமுக பாஜ கூட்டணியை எப்படி பார்க்கிறீர்கள்?
அதிமுக-பாஜ கூட்டணி என்பது தமிழ்நாட்டின் நலன்களை குழி தோண்டி புதைப்பற்கான ஒரு சதிகார கூட்டணியாக பார்க்கிறேன். கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் பல்வேறு உரிமைகள் பறி போய் இருக்கிறது. கடந்த 2016 நவம்பரில் ஓ.பன்னீர் செல்வம் முதல்வராக இருந்தபோது, டிஎன்பிஎஸ்சியில் வெளிமாநிலத்தவர்கள் எல்லாம் இங்கு வேலைக்கு சேரலாம் என்று திருத்தம் கொண்டு வரப்பட்டன. அதனால், தமிழ் தெரியாதவர்கள் இங்கு வேலை வாய்ப்புக்காக வந்து விட்டனர். மத்திய அரசு பணிகளில் உள்ளவர்கள் தமிழ் தெரியாதவர்கள் தமிழில் பெயர் எழுதி பணியில் சேர்ந்துள்ளனர். இதை உயர் நீதிமன்றமே கடுமையாக சாடியுள்ளது. கனரக தொழிற்சாலையில் ஓட்டப்பிடாரத்தை சேர்ந்த பாஸ்கர் என்பவர் 40 மதிப்பெண் பெறுகிறார். அவரை விட மதிப்பெண் குறைவாக பெறுகிற வட மாநிலத்தவர்களுக்கு வேலை தருகின்றனர். இந்த வழக்கு விசாரணைக்கு வரும்போது, அரசு தரப்பு வழக்கறிஞர் 150 வேலையில் பாதி தமிழகத்துக்கு தருகிறோம் என்று கூறினார். இதற்கு நீதிபதி, நீங்கள் என்ன பிச்சை கொடுக்கிறீர்களா என்று கடுமையாக சாடியிருக்கிறார். வேலை வாய்ப்பு பறி போய் இருக்கிறது. கல்வி உரிமையும் பறிபோய் இருக்கிறது.

பிஏ, பிஎஸ்சி, பிகாம் போன்ற பட்டப்படிப்புகளுக்கு கூட நுழைவுத்தேர்வை கொண்டு வந்துள்ளனர். புதிய ெகாள்கை இந்தி, சமஸ்கிருதம் மட்டுமல்ல ஒவ்வொரு கட்டத்திலும் மாணவர்களை வடிகட்டி பழைய ராஜாஜியின் குலகல்வி திட்டத்தின் மறு பதிப்பாக தான் நாங்கள் பார்க்கிறோம். இவை எல்லாவற்றையும் எடப்பாடி அரசு ஆதரித்து வருகிறது. காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக முதல்வர் எடப்பாடி அறிவித்தார். ஆனால், புதிய மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டம் தொடங்கப்படுகிறது. இப்படியாக, தமிழர்களின் உரிமைகள் காவு கொடுக்கப்படுகிறது. இந்த கூட்டணி எந்த காரணத்தை கொண்டும் வரக்கூடாது என்று மக்கள் தெளிவாக உள்ளனர். சமூக நீதிக்கு எதிரான கூட்டணியாக விளங்குகிறது. சமூக நீதிக்கு பெரும் அச்சுறுத்தல் அந்த கூட்டணியால் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அதிமுக-பாஜ கூட்டணி முழுமையாக தோற்கடிக்கப்பட வேண்டும் என்பது தான் தமிழ்நாட்டு நலனை விரும்பும் ஒவ்வொரு தமிழனின் விருப்பமாக இருக்கும்.

* முதல்வர் எடப்பாடி பிரசாரம் செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் நேரடியாக கேள்வி கேட்கும் நிலை இருக்கிறதே? 5 ஆண்டுகால எடப்படி பழனிசாமி ஆட்சியில் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு எதுவும் செய்யவில்லை. வெறும் விளம்பரத்தை தான் பெரிய அளவில் செய்கின்றனர். தேர்தல் வரக்கூடிய நேரத்தில் வெற்றி நடைபோடும் தமிழகம் என்று விளம்பரம் வருகிறது. ஆனால், களத்தில் பார்க்கும் போது, எடப்பாடி பழனிசாமி தலைமையில் வெற்றி நடைபோடவில்லை. தடுமாறி கொண்டிருக்கிறது. மிகப்பெரிய சிக்கல்களில் மாட்டியுள்ளது என்பது தான் எதார்த்தமான உண்மை. அதையும் நிரூபிக்க கூடிய வகையில் தான் மக்களின் எதிர்ப்புகள் இருக்கிறது.

* திமுக கூட்டணி வேட்பாளர்களை குறி வைத்து வருமான வரித்துறை சோதனை நடத்தப்படுகிறதே? வருமான வரித்துறையையும் கூட்டணியில் சேர்த்துள்ளனர். ஆனால், அந்த கூட்டணியை சேர்த்து நமது கூட்டணி நிச்சயம் முறியடிக்கும்.

* அதிமுக-பாஜ கூட்டணி இஸ்லாமியர்களுக்கு எதிரான கூட்டணி என்று பரவலாக குற்றச்சாட்டு இருக்கிறதே? அதில் எந்த சந்தேகமும் இல்லை. குடியுரிமை சட்டம் நிறைவேற்றப்படுவதற்கு மக்களவையில் பாஜவுக்கு பெரும்பான்மை இருந்தது. ஆனால், மாநிலங்களவையில் பாஜவுக்கு பெரும்பான்மை பலம் கிடையாது. அதிமுகவின் 11 எம்பிக்களும் ஆதரவாக வாக்களித்ததால் தான் குடியுரிமை சட்டமே நடைமுறைக்கு வந்தது. முத்தலாக் சட்டம் நிறைவேற்றப்படுவதற்கும் அதிமுக தான் காரணமாக இருந்தது. மிகப்பெரிய அளவில் என்பிஆர், என்சிஆர் சட்டத்துக்கு எதிராக போராட்டம் நடந்தது. அதிமுக சட்டமன்ற தேர்தலில் இந்த சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என்று நேரடியாக முதல்வரிடம் எடுத்துக் கூறினோம். ஆனால், அதற்கு அவர்கள் செவி சாய்க்கவே இல்லை. ஆனால், அதே நேரத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அனைத்துக் கட்சி கூட்டத்தை இரண்டு முறை கூட்டினார். தலைநகரில் பேரணி நடத்தப்பட்டது. சிஏஏ, என்பிஆர், என்ஆர்சி சட்டத்துக்கு எதிராக ஒரு கோடி கையெழுத்தை பெற்று அவரே குடியரசு தலைவருக்கு அனுப்பினார். அதே மாதிரி திமுக தலைவர் தேர்தல் அறிக்கையில் சிஏஏவுக்கு எதிரான நிலைப்பாடு தெளிவாக அறிவிக்கப்பட்டுள்ளது.

* தமிழகத்தில் அதிமுக மட்டுமல்ல பாஜ வேட்பாளர்கள் கூட பிரதமர் மோடி, அமித்ஷா படத்தை பயன்படுத்த பயப்படுகிறார்களே? தமிழகத்தில் பாஜவுக்கு செல்வாக்கு இல்லை என்பதை எடுத்துக்காட்டுகிறது. அவர்களது புகைப்படத்தை பயன்படுத்தினால், வரக்கூடிய கொஞ்ச, நஞ்ச ஓட்டும் போய் விடுமோ என்கிற அச்ச உணர்வு அதிமுக-பாஜ வேட்பாளர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. மோடி ஒவ்வொரு முறையும் தமிழகத்தில் வரும்போது கோ-பேக் மோடி என்கிற ஹேஷ்டேக் பெரிய அளவில் டிரெண்டிங் ஆகும். அது தான் யதார்த்தமான நிலை என்பதை தேர்தல் களம் மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது.

* தேர்தலுக்கு பிறகு அதிமுகவின் நிலை என்னவாகும்? தமிழக மக்கள் திமுக கூட்டணிக்கு நிச்சயம் வாக்களிப்பார்கள். அந்த அளவுக்கு 5 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் பாதிக்கப்பட்டுள்ளனர். பண பலம் இந்த தேர்தலில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது. அதிமுக ஆட்சியில் இருந்ததால் கட்சியை எடப்பாடி-ஒபிஎஸ் தக்க வைத்துள்ளனர். அவர்களுக்கு இடையே உள்ள பனிப்போர் நிச்சயம் வெடிக்கும். அதிமுகவை சேர்ந்தவர்கள் பலர் பாஜவில் இணைய வாய்ப்புள்ளது. இதில், ஆச்சர்யப்படுவதற்கு ஒன்றும் இல்லை.

*  தேர்தல் ஆணையம் செயல்பாடு எப்படி இருக்கிறது? இதை போக போகத்தான் சொல்ல முடியும். தேர்தல் ஆணையம் நியாயமாக நடந்து கொள்ள வேண்டும். தன்னுடைய நடுநிலையை நிரூபித்து காட்ட வேண்டும்.
* நீங்கள் என்ன பிச்சை கொடுக்கிறீர்களா என்று கடுமையாக சாடியிருக்கிறார். வேலை வாய்ப்பு பறி போய் இருக்கிறது. கல்வி உரிமையும் பறிபோய் இருக்கிறது. பிஏ, பிஎஸ்சி, பிகாம் போன்ற பட்டப்படிப்புகளுக்கு கூட நுழைவுத்தேர்வை கொண்டு வந்துள்ளனர்.

Tags : AIADMK ,BJP ,Tamil Nadu ,Humanitarian People's Party ,Jawaharlal Nehru , AIADMK-BJP alliance will bury Tamil Nadu interests: Humanitarian People's Party leader Jawaharlal Nehru
× RELATED வாக்காளர்களுக்கு பாஜ பணம் பட்டுவாடா...