×

5வது நாளாக மீட்பு போராட்டம் தோல்வி: சூயஸ் கால்வாயில் சிக்கிய கப்பலால் கச்சா எண்ணெய் வர்த்தகம் பாதிப்பு: 250க்கும் மேற்பட்ட கப்பல்கள் தேக்கம்

சூயஸ்: எகிப்து நாட்டின் சூயஸ் கால்வாயில் சிக்கிய சரக்கு கப்பலை கப்பலால் உலக கச்சா எண்ணெய் வர்த்தகம் பாதித்து, கச்சா எண்ணெய் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த கால்வாயை கடக்க முடியாமல் 250க்கும் மேற்பட்ட கப்பல்கள் தேக்கமடைந்துள்ளன. மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து ஐரோப்பாவுக்கு கச்சா எண்ணெய் கொண்டு செல்லும் முக்கிய கடல் வழித்தடமாக சூயஸ் கால்வாய் விளங்குகிறது. இந்த குறுகிய கால்வாய் வழியாக கடந்தாண்டு மட்டும் 19,000 சரக்கு கப்பல்கள் கடந்துள்ளன. இந்நிலையில், ஆசியா, ஐரோப்பிய நாடுகளுக்கு சரக்கு ஏற்றி செல்லும் பனாமா நாட்டை சேர்ந்த `எவர் கிவன்’ என்ற மிக பிரமாண்டமான சரக்கு கப்பல், கடந்த செவ்வாய்கிழமை சூயஸ் கால்வாயை கடந்த சென்ற போது, காற்றின் திசையினால் மாலுமியின் கட்டுப்பாட்டை இழந்து, கால்வாயின் குறுக்கே திரும்பி நின்றது. இதனால் மணல் திட்டில் சிக்கி தரை தட்டியது.

கடந்த 5 நாட்களாக, 10 இழுவை கப்பல்கள், படகுகளின் உதவியுடன் இந்த கப்பலை அசைக்க, நகர்த்த மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தன. சூயஸ் கால்வாய் முக்கியமான கடல் வழித்தடமாக இருப்பதால், கடுமையான கப்பல் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால், கச்சா எண்ணெயை உரிய நேரத்தில் கொண்டு சேர்க்க முடியாமல் தேவை அதிகரித்து, கச்சா எண்ணெய் வர்த்தகம் பாதிப்புக்குள்ளாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. உலக வர்த்தகத்தில் 10 சதவீதம் சூயல் கால்வாய் வழியாகவே நடக்கிறது. அதிலும், குறிப்பாக எண்ணெய் மற்றும் எரிவாயு சரக்கு கப்பல்களின் போக்குவரத்து மிகுந்த வழித்தடமாக சூயஸ் உள்ளது. நேற்று வரை மட்டும், 280 சரக்கு கப்பல்கள் சூயஸ் கால்வாயை கடப்பதற்காக வரிசையில் காத்து கிடப்பதாக கப்பல் சேவை நிறுவனமொன்று தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக, `எவர் கிவன்’ கப்பலை நிர்வகிக்கும் பென்ஹார்ட் ஸ்கூடில் நிறுவன தொழில்நுட்ப மேலாளர் கூறுகையில், ``கப்பலின் உள்ளே இருக்கும் தண்ணீரை வெளியேற்றும் வேலை நடந்து வருகிறது. இதனால் கப்பல் மேலே எழுந்து மிதக்க வாய்ப்புள்ளது. மேலும், இரண்டு இழுவைக் கப்பல்கள் வந்து கொண்டிருக்கின்றன. அவற்றின் உதவியுடன், கடலின் நீர் மட்டத்தில் ஏற்படும் மாற்றத்தை பொருத்து,  நாளை (இன்று) கப்பலை நகர்த்தும் முயற்சி எடுக்கப்படும்,’’ என்று தெரிவித்தார்.

ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு
சூயஸ் கால்வாயில் சரக்கு கப்பல் சிக்கியிருப்பது பற்றிய செய்தி சேகரிக்க ஊடகங்களுக்கு எகிப்து அரசு தடை விதித்துள்ளது. ஆனால், லெப்டினன்ட் ஜெனரல் ஒசாமா ராபி, கப்பல் சிக்கிய இடத்தில் இருந்து சற்று தொலைவில் உள்ள மற்றொரு பகுதியில் செய்தியாளர்களை சந்திக்க இருக்கிறார், என்று சூயஸ் கால்வாய் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Tags : Suez Canal , 5th day of rescue operation fails: Shipwrecked ship hits crude oil trade: More than 250 vessels stranded
× RELATED சூயஸ் கால்வாயில் 2 கப்பல்கள் மோதல்