குண்டு துளைக்காத கவசத்தையும் தகர்க்கும் ஆற்றல் கொண்டது காஷ்மீர் தீவிரவாதிகளிடமிருந்து சீன ஸ்டீல் குண்டுகள் பறிமுதல்

* 2016ம் ஆண்டு புல்வாமா தாக்குதலிலும் தீவிரவாதிகள் ஸ்டீல் புல்லட்களை பயன்படுத்தி இருக்கலாம் என நிபுணர்கள் கருதுகின்றனர்.

* 2019ல் அனந்த்நாக் மாவட்டத்தில் நடத்த தற்கொலை படை தாக்குதலில் ஜம்மு காஷ்மீர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் கொல்லப்பட்டார். அந்த சம்பவத்திலும் ஸ்டீல் புல்லட் பயன்படுத்தப்பட்டுள்ளது.

* இந்த ஸ்டீல் புல்லட், குண்டு துளைக்காத பதுங்கு குழியையும் துளைத்துக் கொண்டு உள்ளே புகுந்து தாக்கும் திறன் கொண்டது.

ஸ்ரீநகர்: குண்டு துளைக்காத கவசத்தையும் தகர்க்கும் வல்லமை கொண்ட சீன தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட ஸ்டீல் துப்பாக்கி குண்டுகள் காஷ்மீர் தீவிரவாதிகளிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது இந்திய பாதுகாப்பு படையினருக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலான விஷயமாகவே கருதப்படுகிறது.தெற்கு காஷ்மீரின் சோபியான் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் உள்ளூர் கமாண்டர் விலாயத் ஹூசேன் லோன் என்கிற சஜ்ஜித் அப்கானி, பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டான். அவன் தங்கியிருந்த இடத்தில் சோதனை நடத்திய போது, 36 சுற்றுகள் கொண்ட கடின ஸ்டீலினால் செய்யப்பட்ட துப்பாக்கி குண்டுகள் கைப்பற்றப்பட்டன. இது, பாதுகாப்பு படையினருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை மணியாக கருதப்படுகிறது. தீவிரவாதிகள் நடமாட்டம் அதிகமுள்ள தெற்கு காஷ்மீரில், பாதுகாப்பு படையினர் பயன்படுத்தும் வாகனங்கள் குண்டு துளைக்காத கவசங்களுடன் தயாரிக்கப்பட்டவை. வீரர்களும் புல்லட்-புரூப் கவசங்களை அணிந்தே பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர்.

ஆனால் புல்லட் புரூப் ஜாக்கெட் அணிந்திருந்தாலும் அதையும் துளைத்து உயிரை பறிக்கும் வல்லமை கொண்டவைதான் இந்த சீன இரும்பு குண்டுகள். வழக்கமான ஏகே-47 ரக துப்பாக்கிகளில் பயன்படுத்தப்படும் குண்டுகள் லேசான இரும்பு மேல் கவசத்துடன் தயாரிக்கப்பட்டிருக்கும். இவை குண்டு துளைக்காத கவசங்கள் மீது பட்டால், துளைக்க முடியாமல் கீழே சிதறி விழும். ஆனால், தற்போது கைப்பற்றப்பட்டுள்ள ஸ்டீல் புல்லட்களான இரும்பு குண்டுகள் கனமான இரும்பு மேற்பரப்பை கொண்டதாகும். இது குண்டு துளைக்காத கவசத்தை துளைத்துக் கொண்டு தாக்கும் வல்லமை கொண்டது. இந்த குண்டுகள் சர்வதேச தரத்திலான வழக்கமான துப்பாக்கி குண்டுகளிடமிருந்து வேறுபடுத்தி சீன தொழில்நுட்ப உதவியுடன் சட்டவிரோதமாக தயாரிக்கப்படுபவை. இவற்றை காஷ்மீரில் தீவிரவாதிகள் பயன்படுத்துவது அதிகரித்துள்ளது. இதனால், பாதுகாப்பு படை வீரர்களின் குண்டு துளைக்காத கவசங்களை வலுப்படுத்தும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

Related Stories:

>