×

ஏர்இந்தியாவை விற்போம் முடியலன்னா மூடுவோம்: அமைச்சர் ஹர்திப் சிங் பேட்டி

புதுடெல்லி: ‘‘நஷ்டத்தில் இயங்கும் ஏர்இந்தியா நிறுவனத்தின் 100 சதவீத பங்குகளை விற்போம், இல்லாவிட்டால் இழுத்து மூடுவோம். அதை இனியும் அரசு நடத்துவதற்கு வாய்ப்பில்லை’’ என மத்திய அமைச்சர் ஹர்திப் சிங் கூறி உள்ளார்.
மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியா கடந்த 2007ம் ஆண்டு உள்நாட்டு விமான சேவை நிறுவனமான இந்தியர் ஏர்லைன்ஸ் உடன் இணைக்கப்பட்டது. அதிலிருந்து இந்நிறுவனம் நஷ்டத்தில் இயங்கி வருகிறது. இதனால், அந்நிறுவனத்தின் முழு பங்குகளையும் விற்க அரசு முன் வந்தது. இதற்கு பல்வேறு தரப்பிலும் கடும் எதிர்ப்புகள், கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன. இந்நிலையில், மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஹர்திப் சிங் பூரி செய்தியாளர்களுக்கு நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:

ஏர் இந்தியா நிறுவனத்தின் 100 சதவீத பங்குகளையும் விற்க அரசு முடிவு செய்துள்ளது.  தற்போதைய பிரச்னை பொதுத்துறை பங்குகளை விற்பதா? இல்லையா? என்பதல்ல. பங்குகளை விற்பதா? அல்லது நிறுவனத்தை மூடுவதா? என்பதாகும். ஏர் இந்தியா நிறுவனத்தின் மொத்த கடன் 60,000 கோடியாக உள்ளது. எனவே, மொத்த பங்குகளையும் விற்க முடிவாகி உள்ளது. கடந்த மாதம் நடந்த கூட்டத்தில் ஏர் இந்தியாவை வாங்க விருப்பம் உள்ளதாக பல்வேறு நிறுவனங்கள் தெரிவித்தன. கடந்த திங்கள்கிழமை நடந்த கூட்டத்தில் ஏலம் எடுப்பவர்களின் பட்டியல் தயாரிக்க முடிவு செய்யப்பட்டது. அவர்களிடம் இருந்து ஏலம் கேட்பதற்கான ஒப்பந்தப்புள்ளி 64 நாட்களுக்குள் அரசுக்கு கிடைக்க வேண்டும். இந்த முறை பங்குகளை விற்பதில் அரசு உறுதியாக இருக்கிறது. அதனால் எவ்வித தாமதமும் ஏற்படாது.
இவ்வாறு அவர் கூறினார்.

மாஸ்க் அணியாவிட்டால் தடுப்பு பட்டியலில் சேர்ப்பு
மேலும் அமைச்சர் ஹர்திப் சிங் கூறுகையில், ‘‘கொரோனா தடுப்பு விதிமுறைகளை  கடைபிடிக்கத் தவறும் பயணிகளை தடுப்புப்பட்டியலில் வைக்க விமான நிலைய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாஸ்க் அணியாத மற்றும் சமூக விலகலை கடைபிடிக்கத் தவறும் பயணிகளை தடுப்புப்பட்டியலில் வைக்க வேண்டுமென விமான நிறுவனங்களுக்கு அறிவுறுத்தி உள்ளேன்’’ என்றார்.

Tags : Air India ,Minister ,Hardeep Singh , Will we sell Air India or close if we can: Interview with Minister Hardeep Singh
× RELATED இஸ்ரேலுக்கான விமான சேவை தற்காலிகமாக...