×

மதுரை அருகே பரபரப்பு: அமைச்சர் நடை பயண பிரசாரம் வேன் மோதி தொண்டர் பலி

பேரையூர்: மதுரை அருகே அமைச்சர் உதயகுமார் நடைபயண பிரசாரத்திற்கு வந்தவர்கள் மீது வேன் மோதியதில் ஒருவர் பலியானார். மற்றொருவர் கவலைக்கிடமாக உள்ளார். மதுரை மாவட்டம், திருமங்கலம் தொகுதி அதிமுக வேட்பாளராக அமைச்சர் உதயகுமார் போட்டியிடுகிறார். இவர் நேற்று டி.கல்லுப்பட்டியிலிருந்து 35 கிமீ தூரம் கப்பலூர் டோல்கேட் வரை நடைபயண பிரசாரத்தை அதிமுக தொண்டர்களுடன் மேற்கொண்டார். டி.கல்லுப்பட்டி, டி.குண்ணத்தூர், ஜெயலலிதா கோயில் வழியாக திருமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் வாக்குகள் சேகரித்து வந்து கொண்டிருந்தார். நடக்க முடியாதவர்கள் வாகனங்களில் வந்தனர்.

புதுப்பட்டி - ஜெயலலிதா கோயில் இடையே பிரசாரத்திற்கு வந்த சரக்கு வேனில், பின்புறம் உள்ள டோரை திறந்து விட்டு கால்களை தொங்க விட்டு அதிமுக தொண்டர்கள் அமர்ந்து இருந்தனர். அப்போது பின்னால் பிரசாரத்திற்கு வந்தவர்களின் மற்றொரு வேன், இவர்கள் வேன் மீது மோதியது. இதில் அதிமுக தொண்டர்களான போத்தநதி புதுப்பட்டியைச் சேர்ந்த லட்சுமணன்(72), துரைராஜ்(67) ஆகியோரின் கால்கள் முறிந்து சாலையில் விழுந்தனர்.

ரத்த வெள்ளத்தில் கிடந்தவர்களை மீட்டு திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதலுதவிக்குபின் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், வழியிலேயே லட்சுமணன் பரிதாபமாக உயிரிழந்தார். துரைராஜ் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து டி.கல்லுப்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags : Madurai , Hiking campaign
× RELATED மதுரை சித்திரைத் திருவிழா: போலீசாரின்...