×

ராமதாசின் 40 ஆண்டு போராட்டத்தின் பலன்தான் 10.5 சதவீத இடஒதுக்கீடு: அன்புமணி பிரசாரம்

மேட்டூர்: சேலம் மாவட்டம் இடைப்பாடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை ஆதரித்து, பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்பி நேற்று பிரசாரம் செய்தார். நேற்று மாலை ஜலகண்டாபுரம் பஸ் நிலையத்தில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில், அவர் பேசியதாவது:

அதிமுக ஆட்சியில்தான் பெண்களுக்கு பாதுகாப்பு உள்ளது. தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சரியாக உள்ளது. பெண்கள் எந்த நேரத்திலும், எங்கும் சுதந்திரமாக சென்று வரலாம். முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு விவசாயி என்ற மிகப்பெரிய தகுதி உள்ளது. கொரோனா காலத்தில் அரசு செய்த உதவி மிகப்பெரியது. விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான மேட்டூர் உபரிநீர் திட்டம், தற்போது முதல் கட்டமாக தொடங்கப்பட்டுள்ளது. டெல்டா பகுதி பாதுகாக்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை, டாக்டர் ராமதாஸ் முன்வைத்தார். அந்த கோரிக்கைகள் முதல்வரால் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதனால்தான் இந்த கூட்டணியில் இணைந்துள்ளோம். ஒரு விவசாயியின் ஆட்சி தொடர வேண்டும் என்று, ஒட்டுமொத்த தமிழகமும் முடிவு செய்துவிட்டது. இவ்வாறு அன்புமணி ராமதாஸ் பேசினார்.

அதனை தொடர்ந்து, ஓமலூர் தொகுதி அதிமுக வேட்பாளர் மணியை ஆதரித்து பிரசாரம் செய்த அன்புமணி பேசியதாவது: டாக்டர் ராமதாசின் 40 ஆண்டு கால போராட்டத்தின் பலனாக, மிகவும் பின்தங்கிய சமூகமான வன்னியருக்கு 10.5 சதவீதம் இடஒதுக்கீட்டை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொடுத்துள்ளார். நம்மை போல பின்தங்கிய அனைத்து சமுதாயத்தினரும், உரிய இடஒதுக்கீடு பெற நிச்சயம் தொடர்ந்து போராடுவோம் என்றார்.

Tags : Ramadas' ,Anbumani , anbumani
× RELATED தமிழக மீனவர்கள் 15 பேர் கைது; மீனவர்...